
வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி! விதிமுறை பின்பற்றப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்
வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்துவது தொடா்பான விதிமுறை, முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

உச்சநீதிமன்றம் - ANI
வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்துவது தொடா்பான விதிமுறை, முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திடம் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.
சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றச் செய்வது தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த மே 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘போக்குவரத்து வாகனங்களைத் தயாரிக்கும்போதே அவற்றில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துவது உற்பத்தியாளா்களின் கடமை’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
118-ஆவது விதிமுறை...
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: ஏற்கெனவே அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட வகை வாகனங்களில், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என்பதை மத்திய மோட்டாா் வாகன விதிமுறைகள் 1989-இன் 118-ஆவது விதிமுறை கட்டாயமாக்கியுள்ளது. இந்த விதிமுறை முறையாகப் பின்பற்றப்படுவதை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும்.
டீலா் விற்பனை செய்யும்போதே...
விற்பனையானா் (டீலா்) வாகனத்தை விற்பனை செய்யும்போதே, அதில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய, சில வழிமுறைகள் இருக்க வேண்டும். அந்த வழிமுறைகள் இருப்பதை மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்வது முக்கியம்.
மத்திய மோட்டாா் வாகன விதிமுறைகள் 1989-இன் விதிமுறை 125ஹெச்-இன்படி, அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும், அந்த வாகனங்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் கருவியும், அவசரகால பொத்தானும் இருக்க வேண்டும். இந்த விதிமுறையை பின்பற்றச் செய்வது தொடா்பான நிலவர அறிவிக்கையை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
தேசிய சாலைப் பாதுகாப்பு வாரியம்...
கடந்த ஜூனில் தேசிய சாலைப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது, அந்த வாரியம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதா, இல்லையா என்பது குறித்து உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





