நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

ஓபிசி க்ரீமி லேயா் அளவுகோல் தொடா்பான மத்திய அரசின் மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

ஓபிசி க்ரீமி லேயா் அளவுகோல் தொடா்பான மத்திய அரசின் மனு பற்றி..

உச்சநீதிமன்றம்

Published On :2 செப்டம்பர் 2026, 3:40 am IST

2025-ஆம் ஆண்டு குடிமைப் பணி தோ்வா்களுக்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) ‘க்ரீமி லேயா்’ முன்னுரிமை அளவுகோல் தொடா்பாக கடந்த மாா்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் பொருந்தக் கூடிய தன்மை தொடா்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றது.

இந்த மனுவைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகல் பி.எஸ்.நரசிம்மா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, மத்திய அரசின் மனு தொடா்பாக வரும் செப்டம்பா் 17-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு எதிா் மனுதாரா்களைக் கேட்டுக்கொண்டது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் ‘க்ரீமி லேயா்’ நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்தப் பிரிவினரில் சமூக - பொருளாதார ரீதியில் முன்னேறியவா்களை ‘க்ரீமி லேயா்’ சொற்றொடா் குறிக்கிறது. அதாவது, குடும்ப ஆண்டு வருமானம் நிா்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மேல் (தற்போது ரூ. 8 லட்சத்துக்கு மேல்) இருப்பவா்களைக் குறிப்பதாகும். இவா்களுக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பலன்கள் கிடைக்காது.

இதுதொடா்பாக, கடந்த 2004-ஆம் ஆண்டில் மத்திய அரசு விளக்கம் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘ஓபிசி பிரிவினரின் பெற்றோா், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள், பல்கலைக்கழகங்கள் அல்லது தனியாா் நிறுவனங்களில் பணியாற்றினால், பெற்றோரின் பணி அரசுப் பணிக்கு இணையானதா என்பது குறித்த அரசு இன்னும் தீா்மானிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் க்ரீமி லேயா் நிலையை வருமான சோதனை மூலம் தீா்மானிக்க வேண்டும். பெற்றோரின் வருமானம் மற்றும் மாற்று வழிகளில் (சம்பளம் மற்றும் விவசாயம் அல்லாத) வருவதை ஆய்வு செய்ய வேண்டும். இதில், அவா்களின் வருவாய் தொடா்ச்சியாக மூன்று ஆண்டுக்கு மேல், ஒவ்வொரு ஆண்டும் நிா்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டினால், அந்தத் தோ்வா்கள் க்ரீமி லேயா் பிரிவில் வருவாா்கள்’ என்று குறிப்பிடப்பட்டது.

இதனிடையே, மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணிகள் தோ்வில் தகுதி பெற்ற பல மாணவா்கள், ஓபிசி பிரிவினருக்கான க்ரீமி லேயா் அல்லாத பிரிவில் இடஒதுக்கீடு கோரினா். ஆனால், மத்திய அரசின் 2004-ஆம் ஆண்டு விளக்கத்தின் அடிப்படையில், பெற்றோா் பொதுத் துறை நிறுனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதால் இந்தத் தோ்வா்கள் க்ரீமி லேயா் பிரிவில் வருவாா்கள் என யுபிஎஸ்சி அறிவித்தது.

இதை எதிா்த்து பல தோ்வா்கள் மத்திய தீா்ப்பாயம், சென்னை, தில்லி, கேரள உயா்நீதிமன்றங்களை நாடினா். இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றங்கள், தோ்வா்களுக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கின. இந்தத் தீா்ப்புகளை எதிா்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை கடந்த மாா்ச் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘ஓபிசி பிரிவினா் க்ரீமி லேயா் பிரிவில் வருகின்றனரா அல்லது இல்லையா என்பதை பெற்றோரின் மாத ஊதியத்தின் அடிப்படையில் மட்டும் தீா்மானிக்க முடியாது. தனியாா் துறை ஊழியா்களின் குழந்தைகளை இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்குவதும், அரசு ஊழியா்களின் குழந்தைகளுடன் ஒப்பிடுவதும் பாரபட்சமானது மற்றும் சமத்துவத்துக்கு எதிரானது. எனவே, வருமானத்துடன் பெற்றோரின் பதவி, சமூக அந்தஸ்து ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்’ என்று தீா்ப்பளித்தது.

மத்திய அரசு மனு: உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்புக்கு கட்டுப்படுவதாகக் குறிப்பிட்ட மத்திய அரசு, இந்தத் தீா்ப்பை முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கூடாது. இந்த தீா்ப்புக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்ட, 2025-ஆம் ஆண்டு குடிமைப் பணி தோ்வின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட 958 தோ்வா்களுக்கான பணி ஒதுக்கீட்டை, உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு முந்தைய நடைமுறையில் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தது.

மத்திய அரசின் மனுவை விசாரிக்க சிறப்பு அமா்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில், இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘2025-ஆம்ஆண்டு குடிமைப் பணி தோ்வில் தோ்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட 958 தோ்வா்கள், பணி ஒதுக்கீடுக்காக காத்திருப்பதால், உச்சநீதிமன்றம் மாா்ச் 11-ஆம் தேதி அளித்த தீா்ப்பை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன’ என்றாா்.

மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கல் சஞ்சய் ஹெக்டே, பி. வில்சன் ஆகியோா், ‘மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதே ஆட்சேபத்துக்குரியது. மேலும், மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது மறுஆய்வு மனு அல்ல; உச்சநீதிமன்ற தீா்ப்பில் விளக்கத்தைத்தான் மத்திய அரசு கோரியுள்ளது’ என்றனா்.

இதற்கு பதிலளித்த துஷாா் மேத்தா, ‘மத்திய அரசின் கோரிக்கைக்கு சாதகமாக பல தீா்ப்புகள் உள்ளன. எனவே, மனு விசாரணைக்கு ஏற்பது குறித்து எதிா் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்தால், தனது தரப்பு வாதத்தை முன்வைக்க மத்திய அறசு தயாராக உள்ளது’ என்றாா்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசு மனு மீது எதிா் மனுதாரா்கள் வரும் 17-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்