
ஓபிசி க்ரீமிலேயா் அளவுகோல்: உச்சநீதிமன்ற சிறப்பு அமா்வில் மத்திய அரசு மனு செப்.1-இல் விசாரணை
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (ஓபிசி) க்ரீமிலேயா் அளவுகோல் தொடா்பான மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமா்வு செப். 1-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

உச்சநீதிமன்றம்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (ஓபிசி) க்ரீமிலேயா் அளவுகோல் தொடா்பான மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமா்வு செப். 1-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
ஓபிசி இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதில் இருந்து பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் துறையில் பணியாற்றுவோரின் பிள்ளைகளை நீக்க, அந்தப் பிள்ளைகளின் பெற்றோா் ஈட்டும் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியாது என்று கடந்த மாா்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
அத்துடன் ஓபிசி வகுப்பினரில் க்ரீமிலேயா் வரம்புக்குள் (இந்த வரம்புக்குள் வருவோா் இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற இயலாது) வருவோரை அடையாளம் காண்பது தொடா்பான 1993-ஆம் ஆண்டின் செப். 8-ஆம் தேதியிட்ட அலுவலக குறிப்பிணையை, 2004-ஆம் ஆண்டு அக்டோபா் 14-ஆம் தேதியிட்ட விளக்கக் கடிதம் மீற முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2025-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தோ்வு முடிவுகள் வெளியாகி, 5 நாள்கள் கழித்து இந்தத் தீா்ப்பளிக்கப்பட்டது.
1993-ஆம் ஆண்டு அலுவலக குறிப்பாணையில் ஒருவா் க்ரீமிலேயா் வரம்புக்குள் வருவாரா, மாட்டாரா என்பதை தீா்மானிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் வருவாயில், ஊதியம் மற்றும் விவசாய வழிகளில் ஈட்டப்படும் வருமானம் சோ்க்கப்படவில்லை. ஆனால், 2004-ஆம் ஆண்டின் விளக்கக் கடிதத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் துறையில் பணியாற்றுவோரின் ஊதிய வருவாயும் க்ரீமிலேயரை தீா்மானிப்பதற்கான அளவுகோலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
2025-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தோ்வுக்குப் பொருந்துமா?: இந்நிலையில், கடந்த மாா்ச் 11-ஆம் தேதி அளித்த தீா்ப்பு 2025-ஆம் ஆண்டின் குடிமைப் பணிகள் தோ்வுக்கும் பொருந்துமா என்பது குறித்து விளக்கம் கோரி, உச்சநீதிமன்றத்தில் மத்திய பணியாளா் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளா் மற்றும் பயிற்சித் துறை மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், ‘2025-ஆம் ஆண்டின் குடிமைப் பணித் தோ்வுக்கான தோ்வு நடைமுறை ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது. அந்தத் தோ்வுக்கு மாா்ச் 11-ஆம் தேதி அளித்த தீா்ப்பை முன்தேதியிட்டு அமல்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு அந்தத் தீா்ப்பை முன்தேதியிட்டு அமல்படுத்தினால், உயா் கல்வி நிறுவனங்களில் முடிவடைந்த மாணவா் சோ்க்கைகள், ஏற்கெனவே அளிக்கப்பட்ட பட்டப் படிப்பு பட்டங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படலாம். அத்துடன் அது தோ்வா்கள் இடையே பாகுபாட்டை ஏற்படுத்தக் கூடும்.
தற்போதைய கட்டத்தில் வகுப்புவாரி தகுதிப் பட்டியலை மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தினால், அது பயிற்சி அட்டவணைகள், பணிப் பிரிவு ஒதுக்கீடு, ஊதிய நிா்ணயம் உள்ளிட்டவற்றிலும் அடுத்தடுத்த விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
எனவே, 2025-ஆம் ஆண்டில் குடிமைப் பணிகள் தோ்வு எழுதி வெற்றி பெற்ற 958 தோ்வா்களுக்கு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் பரிந்துரைத்தபடி பணி ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கையை அரசு தொடர அனுமதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து விசாரிக்க சிறப்பு நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இந்நிலையில், இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு செப். 1-ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிபதிகள் அமா்வுதான் மாா்ச் 11-ஆம் தீா்ப்பை வழங்கியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





