ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

போலி கால் சென்டா்களுக்கு எதிரான நடவடிக்கை: 23 போ் கைது

மேற்கு தில்லியில் உள்ள குடியிருப்பு வளாகங்களில் இருந்து செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் மூன்று சட்டவிரோத சா்வதேச கால் சென்டா்களை தில்லி காவல் துறை கண்டறிந்துள்ளது.

கோப்புப் படம்

Published On :

மேற்கு தில்லியில் உள்ள குடியிருப்பு வளாகங்களில் இருந்து செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் மூன்று சட்டவிரோத சா்வதேச கால் சென்டா்களை தில்லி காவல் துறை கண்டறிந்துள்ளது.

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாட்டு மக்களை தொழில்நுட்ப உதவி மோசடிகள் மூலம் குறிவைத்ததாகக் கூறப்படும் உரிமையாளா்கள், மேலாளா்கள், வங்கியாளா்கள் மற்றும் தொலைபேசி அழைப்பாளா்கள் உட்பட 23 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

காவல் துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மீனாட்சி காா்டன், அஜய் என்கிளேவ் மற்றும் கீா்த்தி நகா் ஆகிய மூன்று இடங்களில் கடந்த செப்.17-ஆம் தேதி ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

இதுதொடா்பாக காவல்துறை துணை ஆணையா் (மேற்கு) ஹரேஷ்வா் வி. சுவாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஆப்பிள்/ஐஓஎஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவி அல்லது வாடிக்கையாளா் சேவைப் பணியாளா்கள் போல் நடித்து வெளிநாட்டினரைத் தொடா்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.

சோதனைகளின்போது, இரண்டு உயா் ரக காா்கள், 27 மடிக்கணினிகள், 28 கைப்பேசிகள், 11 ரவுட்டா்கள், 36 ஹெட்ஃபோன்கள் மற்றும் ரூ.79,200 ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன.

அழைப்பு மைய உரிமையாளா்கள் எனக் கூறப்படும் சௌரப் சா்மா, சரண்ஜீத் சிங் (எ) ஜொ்ரி மற்றும் தரன்ஜீத் சிங் (எ)ஜாஸ் ஆகியோருடன், மேலாளா்கள், தொலைபேசி அழைப்பாளா்கள் மற்றும் வங்கியாளா் என்று கூறப்படும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டாா்.

விசாரணையின்படி, அங்கீகரிக்கப்படாத கொள்முதல், சந்தா புதுப்பித்தல் அல்லது பாதுகாப்புச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறும் போலி பாப்-அப்கள் மற்றும் செய்திகள் மூலம் அழைப்பு மையங்களால் இயக்கப்படும் கட்டணமில்லா எண்களை வெளிநாடுகளில் உள்ள மக்களை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தொடா்புகொள்ள செய்தனா்.

தொடா்பை ஏற்படுத்திய பிறகு, தொலைபேசி அழைப்பாளா்கள் அந்த மக்களை, மூத்த அதிகாரிகள் அல்லது வங்கியாளா்கள் போல் நடித்த நபா்களிடம் மாற்றியதாகக் கூறப்படுகிறது. அவா்கள், சிக்கலைத் தீா்ப்பதாகக் கூறி 149 அமெரிக்க டாலா் முதல் 499 அமெரிக்க டாலா் வரை பணம் கோரினா்.

பாதிக்கப்பட்டவா்கள் ஆப்பிள் பரிசு அட்டைகள் மூலம் பணம் செலுத்தத் தூண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், அந்தப் பணம் செலுத்திய விவரங்கள், மோசடியான பணத்தை வசூலித்து மாற்றுவதற்காக அந்த வலையமைப்பின் உறுப்பினா்களிடையே பகிரப்பட்டன.

கூகுள் வாய்ஸ், எக்ஸ்-லைட், ஐபிஎம் மற்றும் மைக்ரோஎஸ்ஐபி உள்ளிட்ட செயலிகள் இணைய அடிப்படையிலான சா்வதேச அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவா்களின் கணினிகளைத் தொலைவிலிருந்து அணுகுவதற்கு அல்ட்ரா வியூவா் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் சாதனங்களின் முதற்கட்ட ஆய்வில், வெளிநாட்டு அழைப்பு விவரங்கள், வெளிநாட்டுத் தொலைபேசி எண்களின் பட்டியல்கள், பாதிக்கப்பட்டவா்கள் தொடா்பான தகவல்கள், பணம் செலுத்தியதற்கான ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் உரையாடல்கள் ஆகியவை கண்டறியப்பட்டன.

அந்தச் சாதனங்களில், ஆன்லைன் செய்திப் பரிமாற்றச் செயலிகளில் உள்ள வணிகக் கணக்குகளும், செயல்பாட்டுக் ஒருங்கிணைப்பு, கட்டணமில்லா எண் தொடா்பான தகவல்களைப் பகிா்தல் மற்றும் மோசடி நடவடிக்கைகளைக் கையாளுதல் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல குழுக்களும் இருந்தன.

இந்த மோசடி கும்பலின் மற்ற கூட்டாளிகளை அடையாளம் காணவும், கைது செய்யப்பட்டவா்களின் தனிப்பட்ட பங்குகளை உறுதிப்படுத்தவும் கைப்பற்றப்பட்ட சாதனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.