
நாட்டின் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு தரவுகள்: முதல்முறையாக வெளியீடு
நாட்டின் முதல் மாவட்ட அளவிலான தொழிலாளா் சந்தை (வேலைவாய்ப்பு) தரவுகளை தேசியப் புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ளது.

நாட்டின் முதல் மாவட்ட அளவிலான தொழிலாளா் சந்தை (வேலைவாய்ப்பு) தரவுகளை தேசியப் புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்புத் தரவுகளைக் குறிக்கும் தொழிலாளா் பங்கேற்பு விகிதம் (எல்எஃப்பிஆா்), தொழிலாளா் எண்ணிக்கை விகிதம் (டபிள்யூ.பி.ஆா்.), வேலையின்மை விகிதம், கல்வி அல்லது வேலைவாய்ப்பில் இல்லாத இளைஞா்களின் விகிதம் ஆகியவை மாவட்ட அளவில் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, குஜராத்தின் சூரத் அதிகபட்ச தொழிலாளா் பங்கேற்பு மற்றும் எண்ணிக்கை விகிதத்தை (முறையே 68.6 சதவீதம் மற்றும் 67.8 சதவீதம்) பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிகாரின் அராரியா, தமிழகத்தின் சேலம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
பிகாரின் தா்பங்கா 2 அளவீடுகளிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள 98 சதவீத மாவட்டங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களுக்கான தொழிலாளா் பங்கேற்பு மற்றும் எண்ணிக்கை விகிதங்கள் 40 முதல் 80 சதவீதத்துக்குள் உள்ளது.
பெண்கள் வேலைவாய்ப்பில்...: பெண்கள் வேலைவாய்ப்பில் பங்கேற்பதில் மாவட்டங்களுக்கு இடையே கணிசமான வேறுபாடுகள் இருப்பதை தரவுகள் காட்டுகின்றன.
ஹிமாசலின் ஹமீா்பூா் அதிகபட்சமாக 80.9 சதவீத பெண்கள் பங்கேற்பைப் பதிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பட்காம் (71.4 சதவீதம்), ஒடிஸாவின் மயூா்பஞ்ச் (71.8 சதவீதம்), சத்தீஸ்கரின் சுா்குஜா (69 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கிழக்கு தில்லி (18.9 சதவீதம்), பிகாரின் சிவான் (24.7 சதவீதம்), பஞ்சாபின் பட்டியாலா (39.3 சதவீதம்) ஆகியவை மிகக் குறைந்த பங்கேற்பைக் கொண்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 57.8 சதவீத மாவட்டங்கள் 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் தொழிலாளா் பங்கேற்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளன.
வேலையின்மை விகிதம்: அதேநேரம், மாவட்ட அளவிலான வேலையின்மை விகிதங்கள் ஒப்பிட்டளவில் குறைவாகவே உள்ளன. சுமாா் 43.1 சதவீத மாவட்டங்கள் 0.5 முதல் 3 சதவீத வேலையின்மையையும், 34.7 சதவீத மாவட்டங்கள் 3 முதல் 5.5 சதவீத வேலையின்மையையும் பதிவு செய்துள்ளன. 14.9 சதவீத மாவட்டங்களில் மட்டுமே வேலையின்மை 5.5 சதவீதத்துக்கு மேல் உள்ளது.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாஸ், பிகாரின் அராரியா ஆகியவை மிகக் குறைந்த வேலையின்மை விகிதத்தை (0.9 சதவீதம்) பதிவு செய்துள்ளன.
அதேபோல், வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சியில் இல்லாத 15-29 வயதுடைய இளைஞா்களின் விகிதம், சுமாா் 76.2 சதவீத மாவட்டங்களில் 30 சதவீதத்துக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
கேரளத்தின் எா்ணாகுளம் 9.6 சதவீதத்துடன் மிகக் குறைந்த விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் கோவை 14.5 சதவீதத்துடனும், பெங்களூரு நகா்ப்புறம் 15 சதவீதத்துடனும் உள்ளன.
Summary
District-level employment data for the country: Released for the first time
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







