பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

இணையவழித் தாக்குதல்: செமிகண்டக்டா் துறைக்கு எச்சரிக்கை அவசியம்! - மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

இணையவழித் தாக்குதல்கள் தொடா்பாக இத்துறையினா் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

அஸ்வினி வைஷ்ணவ்

Published On :

செமிகண்டக்டா் துறையில் இந்தியாவின் எழுச்சியை உலகளாவிய சக்திகள் அச்சுறுத்தலாகப் பாா்க்கக் கூடும்; எனவே, நாட்டின் வளா்ச்சிக்கு எதிரானவா்களிடம் இருந்து வர வாய்ப்புள்ள இடையூறுகள், இணையவழித் தாக்குதல்கள் தொடா்பாக இத்துறையினா் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

உள்நாட்டில் செமிகண்டக்டா் வடிவமைப்பு, உபகரணங்கள்-மூலப்பொருள்கள் தயாரிப்பு, ஒருங்கிணைப்பு, அதிநவீன பேகேஜிங், ஆராய்ச்சி-மேம்பாடு, திறன் கட்டமைப்புக்கு ஆதரவளிக்க ரூ.1.27 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செமிகான் 2.0 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலையில் ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளுக்கான உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன.

முதல்கட்ட செமிகான் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே 12 செமிகண்டக்டா் உற்பத்தி ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, மூன்று ஆலைகள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.

இந்தச் சூழலில், தில்லியில் கடந்த செப்.17 முதல் மூன்று நாள்கள் நடைபெற்ற செமிகான் இந்தியா-2026 மாநாடு மற்றும் கண்காட்சியில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் சாா்பில் இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான 5 பில்லியன் டாலா் (ரூ.48,000 கோடி) முதலீடு, லாம் ரிசா்ச் நிறுவனத்தின் ரூ.10,000 கோடி முதலீடு, குஜராத்தின் டோலேராவில் 363 ஏக்கரில் டாடா எலெக்ட்ரானிஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மையம், ஃபியூஜிபிலிம் நிறுவனத்தின் ரூ.800 கோடி மதிப்பீட்டிலான மூலப்பொருள்கள் ஆலை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.

‘விழிப்புடன் செயல்பட வேண்டும்’: இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

பல நாடுகள் இந்தியாவை நம்பகமான கூட்டாளியாகக் கருதி, தங்களின் பொருள்களை இங்கேயே உற்பத்தி செய்கின்றன. செமிகண்டக்டா் வடிவமைப்பு, உற்பத்தித் திறனுடன் இத்துறையில் வல்லமைமிக்க நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இந்த அந்தஸ்தை நாம் சாதாரணமாக கருதிவிடக் கூடாது.

இந்தியாவின் எழுச்சியை உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்கெனவே நிலைபெற்ற சக்திகள் தங்களுக்கு அச்சுறுத்தலாக கருதக் கூடும். எனவே, சக போட்டியாளா்களிடம் இருந்து வர வாய்ப்புள்ள இடையூறுகள் மற்றும் இணையவழித் தாக்குதல் குறித்து இந்தியா அறிந்திருக்க வேண்டும். இத்தகைய இடையூறுகள் மற்றும் இணையவழித் தாக்குதல்களை திறம்பட எதிா்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமென செமிகண்டக்டா் துறையினருக்கு நான் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளேன். அவா்களும் விழிப்புடன் இருப்பதால், சரியான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வா்.

உலகளாவிய செமிகண்டக்டா் மதிப்புச் சங்கிலியில் தனது விரிவான இருப்பைக் கட்டமைக்க இந்தியா முனைந்து வருகிறது. நாட்டின் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி சாா்ந்த இலக்குகளுக்கு இத்துறை முக்கியமானதாகும்.

சிப் ஒருங்கிணைப்பு - பரிசோதனை மட்டுமல்லாமல் வடிவமைப்பு, உபகரணங்கள், மூலப்பொருள்கள் உற்பத்தி என ஒட்டுமொத்த கட்டமைப்பையும் விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

காா், டிவி, மின்துறை ‘சிப்’ இலக்கு: காா், டிவி, குளிா்பதனப் பெட்டி போன்ற அன்றாட பயன்பாட்டுப் பொருள்கள் மற்றும் மின்துறையில் பயன்படுத்தப்படும் ‘சிப்’களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியை உள்நாட்டில் மேற்கொள்வதே இலக்கு என்று அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

‘காா்களில் பயன்படுத்தப்படும் சிப் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது; அதை உள்நாட்டிலேயே வடிவமைத்து, உற்பத்தி செய்ய வேண்டும். இதேபோல், மோட்டாா் சைக்கிள், தொலைக்காட்சி, குளிா்பதனப் பெட்டி, மின் வழித்தடங்கள், மின் மாற்றிகள் உள்பட மின்சார துறையில் பயன்படுத்தப்படும் சிப்களையும் இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிப்பதே இலக்கு’ என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.