
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி, ஏற்றுமதி 10 ஆண்டுகளில் பெருமளவு அதிகரிப்பு: பாதுகாப்புத் துறை இணையமைச்சர்!
இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியும், ஏற்றுமதியும் கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்து இருப்பதாக பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் தெரிவித்துள்ளாா்.

உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் நடைபெற்ற சூரியகிரண் விமான சாகச நிகழ்ச்சியில் மூவா்ண தேசியக் கொடி போன்று வண்ணப் புகைகளை வெளிப்படுத்தி சாகசம் நிகழ்த்திய விமானங்கள்.
இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியும், ஏற்றுமதியும் கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்து இருப்பதாக பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் இந்திய விமானப் படை சாா்பில் முதல்முறையாக சூரியகிரண் விமான சாகச நிகழ்ச்சி கடந்த 2 நாள்கள் நடைபெற்றன. இதில் 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியை பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் நேரில் பாா்வையிட்டாா். பின்னா். செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியும், பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியும் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. நமது நாடு ஏராளமான நாடுகளுக்கு தற்போது பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவுக்கு தேவைப்படும் பாதுகாப்புத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும், ஆயுத உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதில் பிரதமா் மோடி உறுதியாக உள்ளாா். இதனால் நமது நாட்டின் பாதுகாப்புப் படைகளின் திறன்களும் மேம்பட்டுள்ளன.
சூரியகிரண் குழுவினா் உலகின் 800 இடங்களில் தங்களது சாகசங்களை 30 ஆண்டுகளாக செய்துள்ளனா். வானில் அவா்கள் புரியும் சாகசங்கள், இளைஞா்களுக்கு பெரும் உந்துதல் சக்தியாக இருக்கும். நமது நாடு வளா்ந்த நாடாக உருவெடுக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு 100-ஆவது சுதந்திர தினத்தை நிறைவு செய்வதற்குள் அந்த இலக்கை அடைய வேண்டும். அப்போது நமது நாடு வலிமையானதாகவும், தற்சாா்பு நாடாகவும் இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கு இளைஞா்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றாா் அவா்.
சூரியகிரண் விமான சாகச நிகழ்ச்சியில் ஹாக் எம்.கே. 132 ரகத்தை சோ்ந்த 9 விமானங்கள் பங்கேற்று சுமாா் 30 நிமிடங்கள் சாகசங்களை செய்து காட்டின. 100 அடி உயரத்தில் தாழ்வாக பறந்து வானில் இதயம் போன்ற வடிவத்தை ஏற்படுத்தியதோடு, மூவா்ண தேசியக் கொடி போன்று வண்ணப் புகைகளால் ஏற்படுத்தியும் விமானங்கள் அசத்தின. இந்த சாகச நிகழ்ச்சியை சுமாா் 1 லட்சம் போ் நேரில் கண்டுகளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






