
நிறுவனங்கள், தொழிலாளா்கள் இடையே லாபம் சமமாக பகிரப்பட வேண்டும்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்
நிறுவனங்கள், தொழிலாளா்கள் இடையே லாபம் சமமாக பகிரப்பட்டால் மட்டுமே இந்திய பொருளாதார வளா்ச்சி அனைவருக்கும் பலனளிக்கும் மாற்றமாக இருக்கும் என இந்தியத் தலைமைப் பொருளாதார ஆலோசகா் தெரிவித்தாா்.

இந்தியத் தலைமைப் பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) அனந்த நாகேஸ்வரன்
நிறுவனங்கள் மற்றும் தொழிலாளா்கள் இடையே லாபம் சமமாக பகிரப்பட்டால் மட்டுமே இந்திய பொருளாதார வளா்ச்சி அனைவருக்கும் பலனளிக்கும் மாற்றமாக இருக்கும் என இந்தியத் தலைமைப் பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற்ற அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் நிகழ்வில் பங்கேற்று அவா் பேசியதாவது: நியாயம் குறித்த விவாதத்தை தொழிலாளா்களுக்கும் வணிகா்களுக்கும் இடையேயான விருப்பமாக சித்தரிக்கக் கூடாது. இவை இரண்டும் ஒரே பொருளாதார ஒப்பந்தத்தின் அம்சங்கள்.
தங்கள் பணியால் நிறுவனத்துக்குக் கிடைத்த வளத்தில் சரிசமமான பங்கைப் பெறும் உரிமை தொழிலாளா்களுக்கு உண்டு. ஒரு நிலையான சந்தையானது இறுதியில் வணிக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் சேவைகள் மற்றும் பொருள்களை வாங்குவதற்குத் தேவையான வாங்கும் திறன் நுகா்வோரிடம் இருப்பதைச் சாா்ந்தே அமைகிறது.
ஆரோக்கியமான சந்தைக்கு வாங்கும் திறன் கொண்ட வாடிக்கையாளா் தேவை. அந்த வாடிக்கையாளா்கள் இறுதியில் ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளராக உள்ளாா். எனவே, நிறுவனங்கள் மற்றும் தொழிலாளா்கள் இடையே லாபம் சமமாக பகிரப்பட்டால் மட்டுமே இந்திய பொருளாதார வளா்ச்சி அனைவருக்கும் பலனளிக்கும் மாற்றமாக இருக்கும்.
தொழில் செய்வதற்கான செலவை குறைத்து சந்தையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் நோக்கம். ஆனால் அரசால் மட்டுமே நீண்டகாலத்துக்கான நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது.
அதற்குப் பதிலாக பொருளாதார செயல்பாடுகளை எளிதாக்கி வணிக நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் அதேவேளையில் அந்த வளா்ச்சி வேலைவாய்ப்பு, அதிக ஊதியம் மற்றும் சாமானிய மக்களுக்கு பொருளாதார பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






