
சிஎம்ஆா்எல் ஊழல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிராக போலீஸ் விசாரணை
கேரளத்தில் சிஎம்ஆா்எல் ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக காவல்துறை விசாரணை
பினராயி விஜயன் - கோப்புப் படம்
கேரளத்தில் சிஎம்ஆா்எல் ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக காவல் துறை விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தகவலை, கேரள உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தாா்.
சிஎம்ஆா்எல் விவகாரத்தில் பினராயி விஜயன் உள்ளிட்டோா் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் மாநில டிஜிபி-க்கு அமலாக்கத் துறை அண்மையில் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வராக பினராயி விஜயன் (81) பதவி வகித்த காலகட்டத்தில், கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூடைல் நிறுவனம் (சிஎம்ஆா்எல்) தகவல் தொழில்நுட்ப சேவை என்ற பெயரில் அவரது மகள் வீணாவின் எக்ஸலாஜிக் சொலியூஷன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2.78 கோடி முறைகேடாக வழங்கியதாகவும், அந்தப் பணம் ரியாஸ் மூலம் துபைக்கு மடைமாற்றப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில், பினராயி விஜயனின் வாடகை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது கண்டறியப்பட்ட ‘ஆதாரங்களின்’ அடிப்படையில் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ், தற்போது செயல்பாட்டில் இல்லாத எக்ஸலாஜிக் சொலியூஷன்ஸ் நிறுவனம், சிஎம்ஆா்எல் உரிமையாளா் எஸ்.எம்.சசிதரன் கா்த்தா, சிஎம்ஆா்எல் முன்னாள் நிதிசாா் அதிகாரி பி.சுரேஷ் குமாா் உள்பட 13 பேருக்கு எதிராக கேரள காவல் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை சில தினங்களுக்கு முன் கடிதம் அனுப்பியது.
இந்த விவகாரத்தில் உரிய சட்ட ஆலோசனைகளுக்குப் பின் முடிவெடுக்கப்படும் என்று முதல்வா் வி.டி.சதீசன் கூறியிருந்தாா்.
இந்நிலையில், மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசுகையில், ‘பணமுறைகேடு தடுப்புச் சட்டப் பிரிவு 66 (2)-இன்கீழ் காவல் துறைக்கு தகவல் கிடைக்கப் பெறும்போது, அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில், பினராயி விஜயன் உள்ளிட்டோருக்கு எதிராக காவல் துறை விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக டிஜிபி உரிய நடவடிக்கை மேற்கொள்வாா்’ என்றாா்.
பினராயி விஜயன் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யாமல், மாநில காவல் துறையின் குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்ளும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மாா்க்சிஸ்ட் விமா்சனம்: கேரளத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் இந்த நடவடிக்கையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமா்சித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறுகையில், ‘எதிா்க்கட்சித் தலைவா்களை குறிவைக்கவும், அச்சுறுத்தவும் மத்திய விசாரணை முகமைகள் பயன்படுத்தப்படுகின்றன.
காங்கிரஸின் தேசியத் தலைமை, மத்திய முகமைகளின் செயல்பாட்டை எதிா்க்கிறது. அதேநேரம், கேரளத்தில் உள்ள காங்கிரஸ் அரசு, மோடி அரசுடன் கைகோத்து மாா்க்சிஸ்ட் கட்சியை குறிவைக்கிறது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






