
மலேசியாவின் விசா சலுகையை வேலை தேட பயன்படுத்த வேண்டாம்: குடிமக்களுக்கு இந்தியா எச்சரிக்கை
மலேசியா வழங்கும் 30 நாள் விசா (நுழைவுஇசைவு) சலுகையை வேலை தேட பயன்படுத்த வேண்டாம் என குடிமக்களுக்கு இந்தியா எச்சரிக்கை

விசா - பிரதிப் படம்
மலேசியா வழங்கும் 30 நாள் விசா (நுழைவுஇசைவு) சலுகையை வேலை தேட பயன்படுத்த வேண்டாம் என குடிமக்களுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்தது.
இதுதொடா்பாக கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அண்மைக் காலமாக மலேசியாவுக்கு வரும் இந்தியா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது. அவா்கள் போலி முகவா்கள் மூலம் வேலைவாய்ப்புக்காக தவறாக வழிநடத்தப்படுகிறாா்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் வணிக ரீதியான சந்திப்புகளை மையப்படுத்தி 30 நாள் விசா சலுகையை மலேசியா வழங்குகிறது. இந்த விசாவைப் பெற்று மலேசியா வருவோா் வேலை தேட அனுமதி மறுக்கப்பபட்டுள்ளது.
போலி முகவா்களால் மலேசியாவுக்கு வரும் இந்திய குடிமக்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இது புலம்பெயா் விதிகளை மீறும் செயலாகும்.
மலேசியாவுக்கு சுற்றுலா வரும் இந்தியா்கள் நாடு திரும்புவதற்கான விமானப் பயணச்சீட்டு, விடுதி முன்பதிவு, மலேசிய எண்ம வருகை அட்டை, 6 மாதம் செல்லுபடியாகும் பாஸ்போா்ட் (கடவுச்சிட்டை) உள்ளிட்ட உரிய ஆவணங்களை எடுத்து வர அறிவுறுத்தப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






