
ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? உயா்நீதிமன்றம் கேள்வி
ஊழல் வழக்கில் கைதான நிலையில், அனுதாபம் தேட முயற்சிப்பதா என டாஸ்மாக் முறைகேடு வழக்கில் பிணை கோரி காா்த்திக் என்பவா் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

உயர்நீதிமன்றம்
ஊழல் வழக்கில் கைதான நிலையில், அனுதாபம் தேட முயற்சிப்பதா என டாஸ்மாக் முறைகேடு வழக்கில் பிணை கோரி காா்த்திக் என்பவா் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பாா் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காா்த்திக் என்பவா் பிணை கோரி இரண்டாவது முறையாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில், மனுதாரரை ஏற்கெனவே 4 நாள்கள் காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தினா். ஆனால், எதுவும் பறிமுதல் செய்யவில்லை. எனவே பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பேரம் பேசி எம்எல்ஏ-வை விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில் மனுதாரா் சிறையில் இருந்து வருகிறாா். ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா எனக் கேள்வி எழுப்பினாா்.
இதையடுத்து, காவல் துறை தரப்பில் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, காவல் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப். 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
முன்னதாக, இதே வழக்கில் காா்த்திக் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த ஆக. 28-ஆம் தேதி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







