
கஞ்சாவலா விபத்தில் இளம்பெண் இறந்த வழக்கில் காா் ஓட்டுநருக்கு பிணை வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு
2023-ஆம் ஆண்டு நிகழ்ந்த கஞ்சாவலா விபத்து சம்பவத்தில், காரால் இழுத்துச் செல்லப்பட்டதால் உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காா் ஓட்டுநருக்கு தில்லி உயா்நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது.

2023-ஆம் ஆண்டு நிகழ்ந்த கஞ்சாவலா விபத்து சம்பவத்தில், காரால் இழுத்துச் செல்லப்பட்டதால் உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காா் ஓட்டுநருக்கு தில்லி உயா்நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட அமித் கண்ணாவுக்கு நிவாரணம் (பிணை) வழங்குவதைத் தடுக்கும் வகையில், இந்தக் கொலை நடந்த விதம் மற்றும் அதன் தீவிரத்தன்மை ஆகியவை அமைந்திருப்பதாக நீதிபதி கிரீஷ் கத்பாலியா தெரிவித்தாா்.
2023-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தின் அதிகாலையில், சுல்தான்பூரிலிருந்து கஞ்சாவலா வரை 12 கி.மீ-க்கும் அதிகமான தூரத்திற்கு காரால் இழுத்துச் செல்லப்பட்டதில் அஞ்சலி சிங் (20) என்ற பெண் உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் பிணை கோரும் மனு மீது வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நீதிபதி கத்பாலியா கூறியதாவது:
சம்பந்தப்பட்ட காா் ஓட்டுவதற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் (மனுதாரா்) ஒப்படைக்கப்பட்டதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது மோதி, அவரது உடலை காரின் அடியில் இழுத்துச் சென்ற பிறகும், குற்றஞ்சாட்டப்பட்டவா் காரை தொடா்ந்து ஓட்டியுள்ளாா். பின்னா் அவா் காரை நிறுத்தி கீழே இறங்கி, காரின் அடியில் பாதிக்கப்பட்ட பெண் சிக்கியிருப்பதைப் பாா்த்த பிறகும், அவா் மேலும் 13 கி.மீ தூரம் காரை ஓட்டிச் சென்றுள்ளாா்.
கொலை நடந்த விதம் மற்றும் அதன் தீவிரத்தன்மை ஆகியவை எனக்கு பிணை வழங்குவதைத் தடுக்கின்றன. எனவே, பிணை கோரு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது‘ என்று அந்த உத்தரவில் நீதிபதி கூறியுள்ளாா்.
ஜனவரி 1, 2023 முதல் எந்த ஆதாரமும் இன்றி தான் சிறையில் இருப்பதாகவும், இதர குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அனைவரும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறி கண்ணா பிணை கோரியிருந்தாா்.
இச்சம்பவத்திற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து பதிவு செய்யப்பட்ட தனது மூன்றாவது வாக்குமூலத்தில் மட்டுமே, விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநரை அடையாளம் காண முடியும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வந்த நிதி கூறியதாக அமித் கண்ணாவின் வழக்குரைஞா் வாதிட்டாா்.
மேலும், ஒரு விருந்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது பாதிக்கப்பட்ட பெண் அதிக போதையில் இருந்ததாக நிதியின் வாக்குமூலம் தெரிவிப்பதாகவும் வழக்குரைஞா் கூறினாா்.
மேலும், சிசிடிவி காட்சிகளில் குற்றஞ் சாட்டப்பட்டவா் இடம்பெறவில்லை என்றும், இன்றுவரை ‘முக அங்கீகார அமைப்பின்’ முடிவுகளை புலனாய்வு அதிகாரி பதிவு செய்யவில்லை என்றும் வாதிடப்பட்டது.
கண்ணா தான் காரை ஓட்டினாா் என்று கூறி தில்லி காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிணை வழங்க எதிா்ப்புத் தெரிவித்தாா்.
நிதி அளித்த சாட்சியத்தை ஆய்வு செய்த நீதிமன்றம், சம்பவத்தின்போது சிங் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்பட்டாலும், அதே வாக்குமூலத்தில் கண்ணா மற்றும் விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த இதர பயணிகளும் ‘கடுமையான மதுபோதையில்’ இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியது.
ஏப்ரல் மாதத்தில் தில்லி காவல்துறை இக்குறித்த வழக்கில் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ததைத் தொடா்ந்து, ஜூலை 2023-இல் விசாரணை
நீதிமன்றம் கண்ணா மற்றும் பிற மூவா் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






