
கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி
இண்டி தொகுதியை வறட்சி பாதித்த பகுதியாக காங்கிரஸ் அரசு அறிவிக்காததைக் கண்டித்து, அக்கட்சியின் எம்எல்ஏ யஷ்வந்த்ராய கெüடா பாட்டீல் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

விஜயபுரா மாவட்டம், இண்டி தொகுதியை வறட்சி பாதித்த பகுதியாக காங்கிரஸ் அரசு அறிவிக்காததைக் கண்டித்து, அக்கட்சியின் எம்எல்ஏ யஷ்வந்த்ராய கெüடா பாட்டீல் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கர்நாடகத்தில் தற்போது கடும் வறட்சி காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், விஜயபுரா மாவட்டத்தில் உள்ள தனது இண்டி சட்டப்பேரவைத் தொகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கும்படி விடுத்த கோரிக்கையை காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள இண்டி தொகுதியின் காங்கிரஸ்
எம்எல்ஏ யஷ்வந்த்ராய கெüடா பாட்டீல் தனது பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜி.எஸ். பாட்டீலுக்கு அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தனது தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தற்போதைய அரசியல் சூழலில் செல்வாக்கு மிக்கவர்களுக்கும், அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்படுபவர்களுக்குமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது ராஜிநாமா குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: நான் பிரதிநிதித்துவப்படுத்தும் விஜயபுரா மாவட்டம் இண்டி வட்டம், 2026-27-ஆம் ஆண்டு காரீஃப் பருவத்தில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பருவத்தின் தொடக்கத்தில் ஓரளவு மழை பெய்ததால், விவசாயிகள் கடன் வாங்கி விதைகள், உரங்களை வாங்கி பயிர்செய்தனர். ஆனால், உரிய காலத்தில் மழை பெய்யாததால் பயிர்கள் கருகிவிட்டன. மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
எனவே, இண்டி வட்டாரத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரி ஆகஸ்ட் 28-இல் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் மனு அளித்தேன். விஜயபுரா மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் இதுவரை 11 வட்டாரங்கள் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், இண்டி, சடச்சணா ஆகிய 2 வட்டாரங்கள் மட்டுமே விடுபட்டுள்ளன. மாநிலம் முழுவதும் இதுவரை 188 வட்டாரங்கள் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில், அரசுக்கு சங்கடம் ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு கோரிக்கைகளை அமைதியான முறையில் முன்வைத்து வந்தேன். ஆனால், தற்போது எனது கருத்துகளுக்கும் உணர்வுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில் செல்வாக்குமிக்கவர்களுக்கும், நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்படுபவர்களுக்குமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
எனவே, எனது தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற முடியாத நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வறட்சி பாதித்த வட்டாரங்களின் எண்ணிக்கை 177 ஆக உயரும் என்றும், வரும் நாள்களில் அது 200-ஐ எட்டக்கூடும் என்றும் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வர் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்பும் ராஜிநாமா:
முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தின்போது தனக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தியடைந்த யஷ்வந்த்ராய கெüடா பாட்டீல், கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
பின்னர் கட்சித் தலைவர்கள் சமரசம் செய்ததைத் தொடர்ந்து ராஜிநாமாவைத் திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






