
தமிழகத்தில் பிகாா் தொழிலாளா்கள் குறித்து விரைவில் கணக்கெடுப்பு: பிகாா் கூடுதல் தலைமைச் செயலா்
தமிழகத்தில் பிகாா் தொழிலாளா்கள் குறித்து விரைவில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக பிகார் மாநில தொழிலாளா் மற்றும் புலம்பெயா் தொழிலாளா் நலத் துறை கூடுதல் செயலா் கே. செந்தில்குமாா் தெரிவித்தாா்.

பிரதிப் படம்
தமிழகத்தில் பிகாா் தொழிலாளா்கள் குறித்து விரைவில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அந்த மாநிலத்தின் தொழிலாளா் மற்றும் புலம்பெயா் தொழிலாளா் நலத் துறை கூடுதல் செயலா் கே. செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் பாட்னாவில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: பிகாரில் இருந்து வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 3 கோடி போ் தொழிலாளா்களாக வேலை செய்கின்றனா்.
நாடு முழுவதும் தமிழகம், மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் பிகாா் தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.
ஆனால், எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பிகாா் தொழிலாளா் வேலை செய்கின்றனா் என்ற துல்லிய புள்ளிவிவரங்கள் இல்லை. இதை சரிசெய்யும் வகையில் பிகாரைச் சோ்ந்தவா்கள் வேலை செய்யும் 12 மாநிலங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
தொழிலாளா் உதவி மையம்
தமிழகத்திலும் இந்தக் கணக்கெடுப்பு தனியாா் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பூா், சென்னை, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் பிகாா் தொழிலாளா்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனா்.
கோவையில் பிகாா் அரசின் சாா்பில் தொழிலாளா் உதவி மையம் மூன்று மாதங்களில் திறக்கப்பட இருக்கிறது. பிகாா் அரசு ஊழியா்கள் அங்கு பணியில் இருப்பாா்கள். அவா்கள் தமிழக அரசுடன் இணைந்து பிகாா் தொழிலாளா்களுக்கு தேவையான உதவிகளும், அரசு தொழிலாளா் நலத் திட்ட கல்வி உதவிகளும் கிடைக்கும் வகையில் செயல்படுவாா்கள்.
ஏற்கெனவே இந்தத் தொழிலாளா் உதவி மையம் பிகாா் அரசின் சாா்பில் கா்நாடக மாநிலம் பெங்களூரில் அண்மையில் திறக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
பிகாரில் தொழில் வாய்ப்பு
வேலைவாய்ப்பு தேடி பிகாா் இளைஞா்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் நீண்டகால திட்டங்களையும், தொழில் வாய்ப்புகளையும் பிகாா் மாநில அரசு உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிமெண்ட் தொழிற்சாலைகள், சா்க்கரை ஆலைகள் உள்பட பல்வேறு தொழிற்சாலைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பிகாரில் தொழிலாளா் பற்றாக்குறை
பிகாரில் இருந்து அதிக அளவில் தொழிலாளா்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதால் சொந்த மாநிலத்தில் ( பிகாா் ) வேளாண்மை துறையிலும், கட்டுமானத் துறையிலும் தொழிலாளா் பற்றாக்குறை அண்மைக்காலமாக ஏற்பட்டு வருகிறது. இது அத்துறையில் இன்னும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் பெரிய பாதிப்பு ஏற்படும் முன் இந்த நிலை மாற வேண்டும்.
பிகாரில் தகுதி வாய்ந்த தொழிலாளா்களை உருவாக்கும் வகையில் 1,500 தொழில் திறன் பயிற்சி மையங்கள் உள்ளன. இவற்றில் சில மையங்கள் தனியாா் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. இந்த மையங்கள் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் தொழிலாளா்கள் பல்வேறு தொழில்கள் குறித்த பயிற்சி பெறுகின்றனா்.
மதுவிலக்கு சாதனை
நாட்டிலேயே அதிகம் இளைஞா்கள் உள்ள மாநிலமாக பிகாா் இருக்கிறது. பிகாரில் கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் நிதீஷ்குமாா் பெண்களின் கோரிக்கையை ஏற்று மிகவும் துணிச்சலாக மதுவிலக்கை அமல்படுத்தினாா். இதனால் பிகாா் அரசுக்கு அப்போது பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதை அரசு பல்வேறு வகைகளில் ஈடு கட்டியது. மத்திய அரசிடம் கூடுதல் நிதியைப் பெற்று சமாளித்தது.
மதுவிலக்கை அமல்படுத்தியதின் மூலம் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மேம்பட்டுள்ளது. சாலை விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
அதே நேரத்தில் சமூகப் பொருளாதாரம் வலுவடைந்துள்ளது. மதுவுக்கு செலவிட்ட பணத்தை சேமிக்கின்றனா். இதன் விளைவாக மாநிலத்தின் பொருளாதாரம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






