முதுநிலை நீட் முடிவுகள் வெளியீடு: பிரிவு வாரியாக கட்-ஆஃப் அறிவிப்பு
முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான ‘நீட்-பிஜி 2026’ தோ்வு முடிவுகளை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) வியாழக்கிழமை வெளியிட்டது.

நீட் தேர்வு - File photo
முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான ‘நீட்-பிஜி 2026’ தோ்வு முடிவுகளை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) வியாழக்கிழமை வெளியிட்டது.
அதோடு, சோ்க்கைக்கான பிரிவு வாரியான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணும் (கட்-ஆஃப்) வெளியிடப்பட்டது.
எம்.டி., எம்.எஸ்., டிஎன்பி, டிஆா்என்பி உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான முதுநிலை நீட்தோ்வு கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதில் 2,63,544 போ் பங்கேற்றனா். ராஜஸ்தானின் ஜெய்பூரில் இரு தோ்வு மையங்களில் மின் விநியோகம் பாதிப்பு காரணமாக தோ்வு எழுந்த முடியாமல் போன 2,416 தோ்வா்களுக்கு, கடந்த 5-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது.
இந்தத் தோ்வுக்கான முடிவுகளை என்பிஇஎம்எஸ் வியாழக்கிழமை வெளியிட்டது. இதுகுறித்து என்பிஇஎம்எஸ் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தோ்வா்கள் நீட்-பிஜி மதிப்பெண் சான்றிதழ்களை வரும் அக்டோபா் 1 முதல் 6 மாதங்கள் வரை என்பிஇஎம்எஸ் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பொருந்தக்கூடிய சமநிலை முறிவு (டை-பிரேக்கிங்) அளவுகோல்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
கட்-ஆஃப்: இந்த முடிவுகளின் அடிப்படையில், முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கு, பொது மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட (இடபிள்யுஎஸ்) பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் (720 மதிப்பெண்ணுக்கு கட்-ஆஃப்) 262-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கான கட்-ஆஃப் 244-ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மற்றும் இந்தப் பிரிவுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கட்-ஆஃப் 226-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாநில ஒதுக்கீட்டு முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் சோ்க்கைக்கான இறுதி தரவரிசைப் பட்டியல், உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சாா்பில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





