
தேர்தல் வந்ததும் தொல்லை கொடுக்கத் தொடங்கிவிடுகிறீர்கள்! தேர்தல் ஆணையம் குறித்து நீதிமன்றம் விமர்சனம்
தேர்தல் வந்ததும் தொல்லை கொடுக்கத் தொடங்கிவிடுகிறீர்கள் என்று தேர்தல் ஆணையம் குறித்து கொல்கத்தா நீதிமன்றம் விமர்சனம்

கொல்கத்தா நீதிமன்றம் - கோப்புப் படம்
தேர்தல் ஆணைய நிர்வாகத்தால் சலிப்படைந்திருக்கிறோம் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது.
உண்மையில், தேர்தல் ஆணைய நிர்வாகத்தால் சலிப்படைந்திருக்கிறோம், தேர்தல் தொடங்கியதுமே, நீங்கள் தொல்லைக் கொடுக்க தொடங்கி விடுகிறீர்கள். உடனே அரசியல் கட்சிகள் நேராக நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். இது நீதிமன்றத்துக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கொல்கத்தா நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருக்கிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 'இந்திய மதச்சார்பற்ற முன்னணி' (Indian Secular Front) பயன்படுத்திய 'உறை' (envelope) சின்னத்தை, அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதற்காகத் தேர்தல் ஆணையத்தை விமர்சித்திருக்கும் நீதிமன்றம், இது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கி, நீதிமன்றத்துக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் நியாயமாகவும் நடுநிலையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கருத்துக் கூறியிருக்கும் நீதிபதி கிருஷ்ணா ராவ், தேர்தல் ஆணையத்திடம் 183 தேர்தல் சின்னங்கள் இருக்கும்போதே, ஏற்கனவே ஒரு கட்சிக்குக் கொடுத்த உறை சின்னத்தை மற்றொரு கட்சிக்கு ஏன் ஒதுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மிகவும் அதிருப்தி அடைந்த நீதிபதி, தேர்தல் ஆணையம் ஏன் அரசியல் கட்சிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தி, சட்ட நிவாரணம் கோரும் வகையில் நடந்து கொள்கிறது? இதுதான் தேர்தல் ஆணையம் செயல்படும் முறையா? என்றும் கேள்வி கேட்டுள்ளார்.
பேரவைத் தேர்தலில் உறை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இந்திய மதச்சார்பற்ற முன்னணி, உறை சின்னத்தை முடக்குமாறு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. தற்போது இடைத் தேர்தலில் உறை சின்னத்தை ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய தேர்தல் ஆணையம், அலமாரி சின்னத்தை இந்திய மதச்சார்பற்ற முன்னணிக்கு ஒதுக்கியிருக்கிறது.
இது குறித்து இந்திய மதச்சார்பற்ற முன்னணி தாக்கல் செய்த மனுவில், வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும், உறை சின்னத்தில் பேரவைத் தேர்தலில் நாங்கள் போட்டியிட்டோம். தற்போது இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிடுகிறோம். ஆனால் எங்களுக்கு வேறு சின்னம் ஒதுக்கப்படுகிறது. எனவே உறை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இதற்கு நீதிமன்றத்தில் பதிலளித்த தேர்தல் ஆணையம், இந்திய மதச்சார்பற்ற முன்னணி பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சி, இதற்கு ஒரே சின்னத்தை ஒதுக்க முடியாது என்று வாதிட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி, நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு கட்சிக்கு ஒரு சின்னத்தை ஒதுக்கியிருக்கிறீர்கள், தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிலும் இதே சின்னத்தை மற்ற கட்சிகளுக்கு ஏன் ஒதுக்குகிறீர்கள். அதனை ஒதுக்கி வையுங்கள், இதுபோன்ற சின்னங்களை ஏன் ஒதுக்கி வைக்க மறுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





