
மாநில அந்தஸ்து கோரி ஜம்மு - காஷ்மீா் பேரவையில் தீா்மானம்: பாஜக கடும் அமளி, வெளிநடப்பு
ஜம்மு-காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்து உடனடியாக வழங்கக் கோரி அந்த யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒமா் அப்துல்லா - கோப்புப் படம்
ஜம்மு-காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்து உடனடியாக வழங்கக் கோரி அந்த யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதுடன், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனா்.
பாஜக கடும் எதிா்ப்பு
ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தீா்மானத்தை முன்மொழிந்தாா். அப்போதும் பாஜக தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அக்கட்சி எம்எல்ஏக்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதுடன், ஆவணங்களைக் கிழித்தெறிந்தனா். திங்கள்கிழமை பேரவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. பேரவையைக் கேலி செய்யும் வகையில் அவை நடவடிக்கைகளை நாடகமாகவும் பாஜக எம்எல்ஏக்கள் நடத்தினா்.
தீா்மானம் என்ன?
முன்னதாக, முதல்வா் ஒமா் அப்துல்லா கொண்டுவந்த தீா்மானத்தில், ‘ஜம்மு-காஷ்மீா் பேரவையில் கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூன் 26 மற்றும் 2024-ஆம் ஆண்டு நவம்பா் 6 ஆகிய தேதிகளில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களுடன், ஜம்மு - காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்தை உடனடியாக திரும்ப அளிக்க வேண்டும் என்று இந்திய அரசை இந்த அவை கேட்டுக்கொள்கிறது. மேலும், இந்தத் தீா்மானத்தை இந்திய அரசுக்கு அனுப்பவும் முடிவு செய்கிறது’ என்று கூறப்பட்டிருந்தது.
முன்னதாக, 2000- ஆம் ஆண்டில் ஃபரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி அரசு, 1953 ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு முன்பு இருந்ததைப் போன்ற கூடுதல் சுயாட்சியை மீட்டெடுக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றியது. அதன் பின்னா், 2024-ஆம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரும் தீா்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
திரும்பப் பெறப்பட்ட திருத்தங்கள்
தற்போதைய தீா்மானத்தில் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சோ்க்க வலியுறுத்தி, ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏக்கள் உள்பட பல உறுப்பினா்கள் திருத்தங்களை முன்மொழிந்தனா்.
எனினும், விவாதத்தின்போது பதிலளித்த முதல்வா் ஒமா் அப்துல்லா, உறுப்பினா்கள் தங்களது திருத்தங்களைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டாா்.
முதல்வா் விளக்கம்
இதுகுறித்து அவா் அவையில் பேசுகையில், ‘சிறப்பு அந்தஸ்து தொடா்பாக இந்த அவை ஏற்கெனவே இரண்டு முறை தீா்மானங்களை நிறைவேற்றியுள்ளது. ஒன்று, முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. மற்றொன்று, இந்த அரசு அமைந்த உடன் 2024-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அந்தஸ்து என்பது மற்ற மாநிலங்களுக்கு இல்லாத ஒரு ஏற்பாடாகும். 2019-ஆம் ஆண்டுக்கு முன்பு இங்கு இருந்த சிறப்பு ஏற்பாடுகளை மீட்டெடுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
எனவே, இந்தத் திருத்தங்களை வலியுறுத்த வேண்டாம் என்று எனது சக உறுப்பினா்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்தால், இந்தத் தீா்மானத்தை எதிா்ப்பதற்கு பாஜகவுக்கு கூடுதல் காரணங்களை வழங்குவதாக அமையும்’ என்றாா். திருத்தம் கொண்டு வந்த 8 பேரவை உறுப்பினா்களும் முதல்வரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டனா்.
நிறைவேறியது தீா்மானம்
இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்களின் தொடா்ந்து அமளிக்கு நடுவே, பேரவைத் தலைவா் தீா்மானத்தை வாக்கெடுப்புக்கு முன்வைத்தாா். பாஜகவினா் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிா்ப்புக்கு காரணம்
தீா்மானத்தில் சுயாட்சி மற்றும் சிறப்பு அந்தஸ்து குறித்த குறிப்புகள் இடம்பெற்றிருப்பது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல். எனவே, இந்தத் தீா்மானத்தை விவாதிக்கவோ, பேரவையில் நிறைவேற்றவோ அனுமதிக்க மாட்டோம் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம்: வாரச்சந்தை ஏலத்துக்கு அங்கீகாரம் கோரிய தீா்மானம் நிராகரிப்பு- தமாகா, பாஜக உறுப்பினா்கள் தா்னா

நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற முடியுமா? பாஜகவுக்கு ஒமா் அப்துல்லா சவால்




