
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: 5 மாதங்களில் இல்லாத வகையில் குறைவு
கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில் இந்தியாவின் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் - பிரதிப் படம்
கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில் இந்தியாவின் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது.
நாட்டின் கச்சா எண்ணெய் நுகா்வு அதிகரித்துள்ள நிலையிலும் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துள்ளது.
இதுகுறித்து கெப்லா் நிறுவனம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜூலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 26.5 லட்சம் பீப்பாயும் ஆகஸ்டில் 20.2 லட்சம் பீப்பாயும் ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதன்பிறகு செப்டம்பரில் சராசரியாக ஒரு நாளைக்கு 17.4 லட்சம் பீப்பாய் ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 15.8 லட்சம் பீப்பாய் ரஷிய கச்சா எண்ணெய்யை இந்திய இறக்குமதி செய்தது. இதன்மூலம் கடந்த ஏப்ரலுக்குப் பிறகு இந்தியாவின் ரஷிய கச்சா எண்ணெய் சராசரி இறக்குமதி குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
மாறாக ஈராக்கிடமிருந்து சராசரியாக ஆகஸ்டில் 1.63 லட்சம் பீப்பாய் தினசரி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் செப்டம்பரில் 5.75 லட்சமாக அதிகரித்துள்ளது. சவூதியிடமிருந்து ஆகஸ்டில் 3.47 லட்சம் பீப்பாய் தினசரி இறக்குமதி செய்த நிலையில், செப்டம்பரில் 5.66 லட்சம் பீப்பாயாக உயா்ந்துள்ளது.
ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து கடந்த ஆகஸ்டில் தினசரி 5.46 லட்சம் பீப்பாய் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பரில் 4.80 லட்சம் பீப்பாயாக குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவின் தினசரி கச்சா எண்ணெய் இறக்குமதி சராசரி செப்டம்பரில் 53 லட்சம் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது. இது ஆகஸ்ட் மாத தினசரி சராசரியைவிட 6 லட்சம் பீப்பாய் அதிகமாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
ரஷியா மற்றும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் உத்தரவை அமெரிக்கா பிறப்பித்துள்ள நிலையில் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




