6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நயதந்திர சவால்!

இந்தியாவின் நயதந்திரம் (டிப்ளோமசி) எதிர்கொள்ளும் அடுத்த சவால்...

Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP

Published On :

ரஷியக் கச்சா எண்ணெய்யை ஏனைய நாடுகள் இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கான தடைச் சட்டத்துக்கு, அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட ரஷியாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருள்களுக்கு, அதிகபட்சமாக 100% இறக்குமதி வரி விதிக்க அந்த மசோதா அதிபர் டிரம்ப்புக்கு அதிகாரம் வழங்குகிறது. இதனால், இந்திய ஏற்றுமதிகள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கடந்த ஜூலை மாதம் காலமான தெற்கு கரோலினா எம்.பி.யான லிண்ட்சே ஓ கிரஹாமால் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதா ஏற்கெனவே செனட் எனப்படும் மேலவையின் ஒப்புதலைப் பெற்றிருந்தது. இப்போது அமெரிக்காவின் மக்களவையான காங்கிரஸ் எனப்படும் பிரதிநிதிகள் அவையும் அதற்கு ஒப்புதல் வழங்கி, அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டதைத் தொடர்ந்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.

நான்கு ஆண்டுகளாக ரஷியா-உக்ரைன் இடையேயான போர் நீடிக்கும் நிலையிலும், ரஷியாவின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியால்தான் தாக்குப்பிடிக்க முடிகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதன் மூலம் ரஷியாவை பலவீனப்படுத்த முடியும் என்பதுதான், இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த சட்டத்தின் நோக்கம்.

கடந்த ஆண்டு ஏற்கெனவே விதித்த 50% இறக்குமதி வரி என்பது அதிபரின் உத்தரவு மட்டுமே. அதை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். ஆனால், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் அப்படியல்ல. அமெரிக்க நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டிருக்கும் சட்டம் என்பதால், இந்தச் சட்டத்தின்படி விதிக்கப்படும் வரியைக் குறைப்பதற்கோ, அதிகரிப்பதற்கோ அமெரிக்க அதிபர் நாடாளுமன்றத்துக்குத் தமது முடிவை எழுத்துமூலம் நியாயப்படுத்தியாக வேண்டும்.

100% என்பது அதிகபட்சம் என்பதும், எந்த அளவிலான வரி விதிப்பை எந்த நாட்டுக்கு விதிப்பது என்பது அதிபரின் முடிவுதான் என்பதும் ஓரளவுக்கு ஆறுதல் என்றாலும், அதிபராக இருப்பவர் டொனால்ட் டிரம்ப் என்பதால், அவர் எந்த முடிவை எப்படி எடுப்பார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

இதற்கு முன்பு இந்திய இறக்குமதிகளுக்கு அதிபர் டிரம்ப் 50% வரி விதித்தபோது, அது நமது ஏற்றுமதிகளை முழுமையாகப் பாதித்தது. அப்போது தங்களது லாபத்தில் கணிசமான பங்கை விட்டுக் கொடுத்து, அமெரிக்க வாடிக்கையாளர்களை நமது ஏற்றுமதியாளர்கள் தக்கவைத்துக் கொண்டனர். அதனால் ஏற்பட்ட இழப்பு சாதாரணமானதல்ல. அதிபர் டிரம்ப், இப்போதைய சட்டத்தைப் பயன்படுத்தி அதிகபட்சமாக 100% வரி விதிப்பை அமல்படுத்தினால், நமது குறு, சிறு, நடுத்தர ஏற்றுமதியாளர்களால் அந்தப் பாதிப்பை எதிர்கொள்ள முடியாது.

ஏற்கெனவே முந்தைய 50% வரி விதிப்பும், தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதற்காக விதிக்கப்படும் 10% வரி விதிப்பும் இருக்கும் நிலையில் இரும்பு எஃகு, அலுமினியம் உள்ளிட்ட முக்கியமான ஏற்றுமதிகள் அமெரிக்கச் சந்தையில் போட்டியிட முடியாத நிலையை எதிர்கொள்ளக் கூடும். நமது மொத்த ஏற்றுமதியில் கணிசமான 20% அமெரிக்கச் சந்தையை நம்பி இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இன்றைய மேற்காசிய போர்ச்சூழலில் ரஷியா அல்லாமல் கச்சா எண்ணெய்த் தேவைக்கு வேறு நாடுகளைத் தேடுவது சாத்தியமில்லை. ஜூலை 2026 நிலவரப்படி, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 51% ரஷியாவில் இருந்துதான் கொண்டுவரப்படுகிறது. ஏற்கெனவே கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 100 டாலரை கடந்து நிற்கும் நிலையில், நமக்குச் சாதகமாகக் குறைந்த விலையில் வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இயலாத நிலை காணப்படுகிறது.

2022-இல் ரஷியா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து அதிக அளவில் ரஷிய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகள் சீனா (50%), இந்தியா (37%), துருக்கி (5%), ஐரோப்பிய யூனியன் (5%) ஆகியவை. கடந்த ஆண்டு 15%-க்கும் அதிகமாக இயற்கை எரிவாயு இறக்குமதி செய்த நாடுகள் மீதும் புதிய சட்டம் பாயும்.

சட்டம் கடுமையாக இருந்தாலும், அமெரிக்க அதிபரால் எந்த அளவுக்கு இதை நடைமுறைப்படுத்த முடியும் என்பது சந்தேகமாக இருக்கிறது. ரஷியக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்க வேண்டாம் என்று உக்ரைனை அமெரிக்கா எச்சரித்திருப்பதைப் பார்க்கும்போது, ரஷியக் கச்சா எண்ணெய்யை முற்றிலுமாக முடக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் துணிய மாட்டார் என்றுதான் தோன்றுகிறது.

சர்வதேசச் சந்தையில் ஏற்கெனவே பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டி விற்கப்படும் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு வந்தால், விலை மேலும் அதிகரிக்கும். அதன் தாக்கத்தை அமெரிக்க நுகர்வோரும் எதிர்கொள்ள நேரிடும். அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், புதிய சட்டம் தரும் அதிகாரத்தைப் பயன்படுத்த அதிபர் டிரம்ப் துணிய மாட்டார் என்று நம்பலாம்.

இந்தியாவால் அமெரிக்காவை முற்றிலுமாகப் புறக்கணிக்கவும் முடியாது; பாகிஸ்தானைப்போல அமெரிக்காவின் அடிவருடியாக மாறிவிடவும் முடியாது. இந்தியாவின் நயதந்திரம் (டிப்ளோமசி) எதிர்கொள்ளும் அடுத்த சவால் இது!

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு.

(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.

திருக்குறள் (எண் 634) அதிகாரம்: அமைச்சு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.