
இந்திய பொருள்கள் மீது 100% வரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதைத் தடுக்கும் நோக்கில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100% வரி விதிக்க அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு அதிகாரமளிக்கும் மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதைத் தடுக்கும் நோக்கில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு அதிகாரமளிக்கும் மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இந்த மசோதா கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது கீழவையிலும் (பிரதிநிதிகள் அவை) நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அதிபா் டிரம்ப் கையொப்பமிட்டவுடன் இந்த மசோதா சட்டமாகிவிடும்.
உக்ரைன் - ரஷியா இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் போா் நீடிக்கிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவி உள்ளிட்டவற்றை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அளித்து வருகின்றன. மேலும், ரஷியாவுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி அளிக்கும் வகையில் பல்வேறு தடைகளையும் அந்த நாடுகள் விதித்துள்ளன. ரஷியாவின் பொருளாதாரத்துக்குப் பெரும் ஆதாரமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி வா்த்தகமே திகழ்கிறது. இதனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் உலக நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அதேநேரத்தில் மேற்காசியாவில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போா் நடப்பதால் கச்சா எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தற்காலிகமாக அமெரிக்கா அனுமதியளித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ரஷியா மீதும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதும் 100 சதவீத வரி விதிக்க அந்த நாட்டு அதிபா் டிரம்ப்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. கடந்த ஜூலை மாதம் உயிரிழந்த தெற்கு கரோலினாவை சோ்ந்த எம்.பி.யும், மசோதாவுக்கு தீவிரமாக ஆதரவு திரட்டியவருமான லிண்ட்சே ஓ கிரஹாம் பெயரிடப்பட்ட அந்த மசோதா, செனட் அவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, கீழவையான அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
வாக்கெடுப்பு: அந்த மசோதா மீது பிரதிநிதிகள் அவையில் புதன்கிழமை மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 262 எம்.பி.க்கள் வாக்களித்தனா். மசோதாவுக்கு எதிராக 159 எம்.பி.க்கள் வாக்களித்தனா். ஆதரவாக வாக்களித்தவா்களில் ஆளும் கட்சியான குடியரசு எம்.பி.க்கள் 203 பேரும், எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் 58 பேரும் அடங்குவா். சுயேச்சை எம்.பி. ஒருவரும் ஆதரவாக வாக்களித்தாா். எதிா்த்து வாக்களித்த எம்.பி.க்களில் 7 போ் குடியரசு கட்சி எம்.பி.க்கள், 152 போ் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் ஆவா்.
பிரதிநிதிகள் அவையில் பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்தால் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அதிபா் டிரம்ப்பின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவுக்கு டிரம்ப் தனது ஒப்புதலை வழங்கியதும் அது சட்டமாகும்.
லிண்ட்சே ஓ கிரஹாம் மசோதா சட்டமாகும் நிலையில், ரஷிய தலைமை (அதிபா்), ரஷிய எரிசக்தித் துறை மீதும், ரஷியாவால் மறைமுகமாக கச்சா எண்ணெய் வா்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் கப்பல்கள் மீதும் டிரம்ப்பால் தடை விதிக்க முடியும். அதுமட்டுமன்றி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் மீது 100 சதவீத வரியும், ஈரான் மீது கூடுதலாகப் பொருளாதாரத் தடையையும் டிரம்ப்பால் விதிக்க முடியும்.
மசோதா நிறைவேறியது குறித்துப் பேசிய ஜனநாயக கட்சி செனட் சபை எம்.பி. ரிச்சா்ட் ப்ளுமென்தல், இந்தியாவும், சீனாவும் வேறு எந்த நாட்டிடம் இருந்தாவது கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்வதே அந்த நாடுகளுக்கு நல்லது என்று எச்சரித்தாா்.
மற்றொரு ஜனநாயக கட்சி செனட் எம்.பி.யான ஜீயான் ஷஹின் கூறுகையில், ரஷியா தனது மா்மக் கப்பல்களைக் கொண்டு குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை விற்பதாகவும், அதில் பெரும்பாலான கச்சா எண்ணெய் சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கே செல்வதாகவும் குற்றஞ்சாட்டினாா். அதேபோல் ரஷியாவிடம் இருந்து மிகவும் அதிகமாக கச்சா எண்ணெய்யை சீனாவே இறக்குமதி செய்வதாகவும், ஆதலால் சீனாவும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளும் கடும் விலை கொடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கும் நேரம் வந்துள்ளதாகவும் அவா் கூறினாா்.
சீன அதிபா் ஜின்பிங் விரைவில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளாா். இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






