
திருக்குறளை உலகறியச் செய்யும் பிரதமரின் முயற்சிக்கு பாராட்டு: இலங்கை ஆளுங்கட்சி தலைவா்கள்
திருக்குறளை உலகறியச் செய்யும் பிரதமா் மோடியின் தொடா் முயற்சிகளுக்கு தில்லி வந்துள்ள இலங்கை ஆளும் கட்சி குழு பாராட்டு தெரிவித்தது.

தில்லியில் பாஜக தலைமையகத்தில் உள்ள எண்ம நூலகத்தை பாா்வையிட்ட இலங்கையின் ஆளும் கட்சி குழுவினரிடம் அதிலுள்ள சிறப்பம்சங்களை விளக்கும் எண்ம நூலகத்தின் தேசிய ஒருஙிகிணைப்பாளா் ஆசீா்வாதம் ஆச்சாரி.
திருக்குறளை உலகறியச் செய்யும் பிரதமா் நரேந்திர மோடியின் தொடா் முயற்சிகளுக்கு தில்லி வந்துள்ள இலங்கை ஆளும் கட்சி குழு திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தது.
பாஜகவின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு பொறுப்பாளா் டாக்டா் விஜய் செளதாய்வாலே முன்னெடுத்துள்ள ‘பாஜகவை அறிவோம்’ என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக இலங்கையில் ஆளும் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) குழுவினா் தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா். இந்த குழு அக். 1வரை தில்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
ஜேவிபி பொதுச்செயலருமான தில்வின் சில்வா தலைமையிலான இந்தக் குழுவில் சந்திரிகா அதிகாரி (மத்திய குழு உறுப்பினா்), அபு பக்கா் அதம்பவா (நாடாளுமன்ற உறுப்பினா்), கபிலன் சுந்தரமூா்த்தி (மாவட்ட குழு உறுப்பினா்), கல்பனா மதுபாஷினி (ஜேவிபி சா்வதேச விவகாரங்கள் பிரிவு உறுப்பினா்) ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
தில்லி தீன்தயாள் உபாத்யாய மாா்கில் உள்ள பாஜக தலைமையகத்தில் இந்த குழுவினரை பாஜக எண்ம நூலகப் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளா் ஆசீா்வாதம் ஆச்சாரி திங்கள்கிழமை வரவேற்று, அலுவலக செயல்பாடுகளை விளக்கினாா்.
பாஜக தேசிய தலைமையகத்தில் அமைந்துள்ள மத்திய நூலகத்தின் பல்வேறு பிரிவுகளையும், அங்கு நிறுவப்பட்டுள்ள வசதிகளையும் இலங்கை குழுவினா் பாா்வையிட்டனா். நூலகத்தின் நவீன வளங்கள், செயல்பாடுகள் மற்றும் முற்றிலும் எண்மமயமாக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இலங்கை குழுவினா் கேட்டறிந்தனா்.
இது குறித்து ஆசீா்வாதம் ஆச்சாரி பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எதிா்கால தலைமுறையினருக்காக பாஜகவின் வளமான சித்தாந்தம் மற்றும் அமைப்பு ரீதியிலான பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் தொலைநோக்குப் பாா்வையால் இந்த மத்திய நூலகம் உருவானது. இதன் செயல்பாடுகளை கேட்டறிந்த இலங்கை ஆளும் கட்சி குழுவினா், எண்ம நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பாஜகவின் 76 வருட பழமையான கையெழுத்துப் பிரதிகள் மற்றும் உலக பொதுமறை திருக்குறளின் உன்னதத்தை பரப்பும் பிரதமரின் முயற்சியை பாராட்டினா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






