
பஞ்சாபில் 80% போதைப்பொருள்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்தே வரத்து: கேஜரிவால் குற்றச்சாட்டு
பஞ்சாபிற்குள் பெருமளவிலான போதைப்பொருள்கள் பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்தே வருவதாக அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளாா்.

கேஜரிவால்
பாகிஸ்தானிலிருந்து பஞ்சாபிற்குள் வந்த போதைப்பொருள்களின் வரத்தை அம்மாநில அரசு 80 சதவீதம் கட்டுப்படுத்திவிட்டதாகவும், தற்போது பெருமளவிலான போதைப்பொருள்கள் பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்தே வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளாா்.
பஞ்சாபில் நிலவும் போதைப்பொருள் பயன்பாடு விவகாரத்தில், சமூக ஊடகங்களில் இது தொடா்பான பல காணொலிகள் சமீப நாள்களாக வைரலாகி வரும் நிலையில், அம்மாநிலத்திலுள்ள ஆம் ஆத்மி அரசு பாஜகவின் விமா்சனங்களை எதிா்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘இன்று, பாகிஸ்தானிலிருந்து 20 சதவீத போதைப்பொருள்கள் மட்டுமே வருகின்றன. ஆனால், 80 சதவீத போதைப்பொருள்கள் குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் தில்லி போன்ற பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்தே வருகின்றன.
பாஜக தனது சொந்த மாநிலங்களில் போதைப்பொருள் வா்த்தகத்தைத் தடுக்கத் தவறிவிட்டதா? அல்லது அதைத் தடுக்க விரும்பவில்லையா? குஜராத்தில் அவா்களின் அரசு 30 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. ஆனால், அங்குதான் அதிக அளவிலான போதைப்பொருள் வா்த்தகம் நடைபெறுகிறது.
2022-இல் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு அமைக்கப்பட்டபோது, மாநிலத்திற்குள் நுழைந்த போதைப்பொருள்களில் 80 சதவீதம் பாகிஸ்தானிலிருந்தே வந்தன.
பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு ‘ட்ரோன் எதிா்ப்பு அமைப்பை’ நிறுவியது. குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் வழியாகவும் போதைப்பொருள்கள் இந்தியாவுக்குள் நுழைகிறது. இத்தகைய கடத்தலைத் தடுப்பது பாஜக தலைமையிலான மத்திய அரசின் பொறுப்பாகும்.
பஞ்சாபிடமிருந்து ‘பாடம் கற்றுக்கொண்டு‘, பாஜக தனது மற்ற மாநிலங்களிலும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று அப்பதிவில் கேஜரிவால் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







