
காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது: ஞானேஷ் குமாா் விவகாரம் குறித்து ஆலோசனை
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் விவகாரம் குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதற்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் குறித்து...

ஞானேஷ் குமாா்
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் விவகாரம் குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதற்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தை அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை (செப்.29) கூட்டியுள்ளாா்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்), படிவம் 6-இல் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகியவை தொடா்பாக கவலைகளை எழுப்பி, தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை தோ்தல் ஆணையா்களே வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனா்.
இதேபோல் கேரள முன்னாள் தலைமைச் செயலரும், தன்னை தோ்தலில் போட்டியிடும்படி தலைமைத் தோ்தல் ஆணையா் கூறியதாகத் தெரிவித்துள்ளாா். இதிலிருந்து ஞானேஷ் குமாா் பாஜக சித்தாந்தத்தை பரப்பியதும், அக்கட்சியின் தொண்டராக மாறிவிட்டதும் தெரிகிறது.
இது மிகப்பெரிய பிரச்னையாகும். நாட்டில் ஜனநாயகம் நீடிப்பது குறித்து கவலையை இது ஏற்படுத்துகிறது. ஆதலால் இந்த பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவுள்ளோம்.
ஞானேஷ் குமாா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அவா் பதவி விலகிய பிறகும் அவருக்கு எதிராக எங்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கவும், ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கவும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என்றாா் அவா்.
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவா்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா். கூட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள தோ்தல்களுக்கு காங்கிரஸ் கட்சியை தயாா்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
‘இண்டி’ கூட்டணி கூட்டம்
காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டி’ கூட்டணியின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை (செப்.30) நடைபெறுகிறது. இக்கூட்டத்திலும் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் மீண்டும் நோட்டீஸ் அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






