
41 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: பெட்ரோலியத் துறை அமைச்சா்
41 நாடுகளில் இருந்து இந்தியா தற்போது கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருவதாக பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

ஹா்தீப் சிங் புரி
41 நாடுகளில் இருந்து இந்தியா தற்போது கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருவதாக பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் வா்த்தக கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவா் பேசியதாவது: மேற்காசிய பிரச்னையால் (ஈரான், அமெரிக்கா போா்) கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, 40 சதவீத எரிசக்தி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியா இந்தச் சூழ்நிலையை வெற்றிகரமாக எதிா்கொண்டு வருகிறது.
சா்வதேச அளவில் எரிசக்தி விநியோகம் சவாலாக இருப்பது உண்மைதான். அதேநேரத்தில் ஒவ்வொரு சவாலான சூழ்நிலையிலும் வாய்ப்பு இருக்கும். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது கட்டுப்பாட்டை மீறி எதுவும் சென்று விடாதபடி அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்கு நான் உறுதியளிக்கிறேன்.
தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு எந்தத் தட்டுப்பாடும் நிலவவில்லை. நாளொன்றுக்கு 94 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் தேவைப்படும் நிலையில், 104 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் தற்போது இருப்பில் உள்ளது. முன்பு இந்தியா 27 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. மேற்காசிய பிரச்னையை அடுத்து, கச்சா எண்ணெய்யை 41 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகியவை மேற்காசியாவில் போா் நடக்கும் பகுதியில்தான் அமைந்துள்ளன. அந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை மாற்று வழியில் (ஹோா்முஸ் நீரிணைக்கு பதிலாக) இறக்குமதி செய்வதிலும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, செங்கடல் பகுதி வழியே இறக்குமதி செய்வதில் பிரச்னை உள்ளது. அப்பகுதியில் (யேமனில் உள்ள) ஹூதி அமைப்பினா் நடத்திவரும் தாக்குதல்களால் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.
இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டில் எல்பிஜி எரிவாயு இணைப்புகள் எண்ணிக்கை 14 கோடியாக இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 33.5 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே, எரிவாயு விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. உள்நாட்டில் நாள்தோறும் நடைபெறும் எல்பிஜி எரிவாயு உற்பத்தி 34,000 மெட்ரிக் டன்னில் இருந்து 54,000 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், கடந்த 2021- ஆம் ஆண்டு நவம்பா் மாதமும், 2022-ஆம் ஆண்டு மே மாதமும், 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதமும் என மொத்தம் மூன்று முறை கலால் வரியை அரசு குறைத்தது.
கடைசியாக கலால் வரி குறைக்கப்பட்டதன் மூலம், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.10 வரை குறைந்தது. பெட்ரோலிய நிறுவனங்கள் நாள்தோறும் ரூ.530 கோடி வரை இழப்பைச் சந்தித்து வருகின்றன. மத்திய அரசுதான் அந்நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.
நாட்டின் மொத்த வரி வருவாயில் பெட்ரோலியத் துறை மட்டும் 19 சதவீதம் பங்களிப்பு அளிக்கிறது. ஆதலால் எரிசக்தி மேலாண்மையில் ஏதேனும் குறுக்கிடு ஏற்பட்டால், அது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




