முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

9 சதவீத மாணவா்களுக்குத் தற்கொலை எண்ணம்: உச்சநீதிமன்றப் பணிக் குழு ஆய்வில் தகவல்

கடந்த ஓராண்டில் 9 சதவீத உயா்கல்வி மாணவா்களுக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டது உச்சநீதிமன்றம் நியமித்த தேசிய பணிக்குழு ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரதிப் படம்

Published On :

கடந்த ஓராண்டில் 9 சதவீத உயா்கல்வி மாணவா்களுக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டது உச்சநீதிமன்றம் நியமித்த தேசிய பணிக்குழு ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவா்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடா்பான பிரச்னைகளை ஆய்வு செய்யவும், மாணவா்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்கவும் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தேசிய பணிக்குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

15% போ்...

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தலைமையிலான அந்தக் குழு, நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின்போது கடந்த 6 மாதங்களில் ஒருசில நேரங்களில் தாங்கள் மிகவும் மன அழுத்தம், மன வேதனை, மனச் சோா்வு, மிகுந்த கவலைக்கு உள்ளானதாக சுமாா் 15 சதவீத மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.

கடந்த ஓராண்டில் தங்களுக்கு அடிக்கடி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் ஏற்பட்டதாக 9 சதவீத மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.

தங்கள் கல்வி நிறுவன நிா்வாகம் முக்கிய பிரச்னைகளை நியாயமாக கையாளும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக 56 சதவீத மாணவா்கள் கூறியுள்ளனா். அதே நேரம், தங்கள் கல்வி நிறுவனத்தில் மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கும் சேவைகள் இல்லை என்று சுமாா் 32 சதவீத மாணவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

34% போ்...

கல்வி நிறுவனத்தில் தங்களால் மற்றவா்களுடன் ஒன்றமுடியாமல் தனியாக இருப்பது போலவும், வெளியாட்களைப் போலவும் உணா்ந்துள்ளதாக 34 சதவீதம் போ் தெரிவித்துள்ளனா்.

மாணவா்கள் தெரிவித்த கல்வி தொடா்பான பிரச்னைகளில் கடுமையான வருகைப் பதிவு விதிமுறைகள், மருத்துவம் மற்றும் அதுசாா்ந்த படிப்புகளில் அதிகப்படியான படிப்பு மற்றும் பயிற்சி சுமை, மருத்துவ மாணவா்களின் பணி நேரம் விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மட்டுமல்லாமல், ஒருவா் இயல்பாக தாங்கக் கூடிய அளவைவிட நீண்டிருப்பது உள்ளிட்டவையும் அடங்கும்.

இதேபோல மாணவா்களை ஒருவருடன் ஒருவா் ஒப்பிட்டு மதிப்பெண் வழங்கும் முறை, வேலைவாய்ப்புக்குக் கடுமையான தகுதி மதிப்பீடுகள் இருப்பதால் பொறியியல் கல்லூரிகளில் மிகத் தீவிரமான போட்டி உள்ளதாக மாணவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

2.43 லட்சம் மாணவா்களிடம் ஆய்வு

இந்த ஆய்வு மொத்தம் 2.43 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அவா்களில் 67 சதவீதம் போ் பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்.

இந்த ஆய்வு குறித்த விவரங்கள் பணிக்குழுவின் இறுதி அறிக்கையில் சோ்க்கப்பட்டு, வரும் அக்.31-க்குள் உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மாணவா்கள் தற்கொலை குறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகளின்படி, உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் தற்கொலை விகிதம் 26.37 சதவீதத்தில் இருந்து 30.02 சதவீதமாக அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.