இயற்கையும், ஈயடிச்சான் காப்பியும்..

முதன்முதலில் இதை பெருமளவு பயன்படுத்தியது நாஸாதான். விண்வெளி வீரர்களின் உடைகளில் பட்டனெல்லாம் வைத்துப் படுத்தாமல், சட்டென்று அணியும்படி வடிவமைக்கக் கைகொடுத்தது.
Published on
Updated on
3 min read

அந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை பாட்டில், பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்று ஒரு வரி வரும். நாம் இயற்கையைப் பார்த்துதான் கற்றுக்கொள்கிறோம். இயற்கையை பல நேரங்களில் ஈயடிச்சான் காப்பி அடிக்கிறோம். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல பொருட்களின் வடிவத்தை, செயல்பாட்டை நாம் இயற்கையில் இருக்கும் ஏதோ ஒன்றில் இருந்துதான் பெறுகிறோம்.

காரணம் ஒன்றே ஒன்றுதான். இயற்கையும் பரிணாம வளர்ச்சியும் பல கோடி வருடங்களாகத் தன் வடிவத்தில், செயல்பாட்டில் பல மாற்றங்களை உருவாக்கிப் பார்த்து, அதன் சாதக பாதகங்களை அலசி, தேறியதை மட்டும் வைத்துக்கொண்டு, தேறாததை ஏறக்கட்டுவது என்று பெரிய ஆய்வையே செய்துவைத்திருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நாம் ஆராய்ச்சியெல்லாம் செய்ய முடியாது. அவ்வளவு நாள் உயிருடன் இருக்கமாட்டோம் என்றாலும், இருந்தாலும் நமக்கெல்லாம் அவ்வளவு பொறுமை கிடையவே கிடையாது. இந்த விஷயத்தில் யாருக்கு வேண்டுமானாலும் நாம் வெற்றுத்தாளில் கையெழுத்து போட்டுக்கொடுக்கலாம். நமக்கு முடிவுகள் உடனுக்குடன் வேண்டும். ஆற அமர செய்வதெல்லாம் நமக்கு லாயக்கில்லை. அதனால் வடிவத்தை, செயல்முறையை இயற்கையில் இருந்து எடுத்துக்கொண்டு விடுகிறோம். 

அதற்கு மிகச்சிறந்த உதாரணம், நாம் ஏகப்பட்ட இடங்களில் பயன்படுத்தும் வெல்க்ரோ (Velcro). செருப்புகளில், முக்கால்பேன்ட்டின் பாக்கெட்களில், இளசுகளின் கைக்கடிகாரங்களில் கோலோச்சுகிறதல்லவா அதே வெல்க்ரோதான். வெல்க்ரோவில் இரண்டு பக்கம் இருக்கும். ஒரு பக்கத்தில் வளைந்த முனைகளையுடைய கொஞ்சம் அழுத்தமான ப்ளாஸ்டிக். மற்றொரு பக்கத்தில் ஏகப்பட்ட சிக்கல்களை உடைய, மென்மையான நூல்களால் ஆன ஒரு அமைப்பு. ஒட்டுகையில் வளைந்த முனைகள் சிக்கலில் போய் மாட்டிக்கொள்ளும். இதற்கான பொறி, 1941-ல் ஒரு சுவிஸ் நாட்டு இன்ஜினீயரான ஜார்ஜ் டி மெஸ்ட்ரல் (George de mestral) என்பவருக்கு, தன் நாயுடன் காட்டுக்குள் ஒரு வாக் போய்விட்டு வந்தபோது கிடைத்திருக்கிறது. வீட்டுக்குத் திரும்பி வந்து தன்னுடைய நாயின் உடலில் ஒட்டியிருந்தவற்றை நீக்கும்போது, அவை எல்லாவற்றிலும் வெளிப்புறத்தில் வளைந்த முனையுடைய கொக்கிகள் இருப்பதைக் கவனிக்கிறார். அவை, விலங்குகளின் உடலில் இருக்கும் முடி, உடைகள் போன்றவற்றில் அந்தக் கொக்கிகளைக் கொண்டு ஒட்டிக்கொள்ளக்கூடியவை. 

இந்தக் கொக்கிகளால் இரண்டு பயன்பாடுகள் உண்டு. ஒன்று, அவை தாவர உண்ணிகளால் உண்ணப்படுவதில்லை. கடித்தால், வாய் வெத்தலைபாக்கு போட்டுக்கொள்ளும் அல்லவா? இரண்டாவதுதான் முக்கியமான பயன்பாடு. அதாவது, சில மரம், செடிகொடிகள் தங்களுடைய விதைகளை நெடுந்தொலைவுக்கு பரவச் செய்ய பிற உயிரினங்களையே நம்பவேண்டி இருக்கிறது. அதற்காகவே, இத்தகைய கொக்கிகள் உடைய விதைகளை அவ உற்பத்தி செய்கின்றன. அதன்படி, கூட்டம் நெருக்கியடிக்கும் பஸ்ஸில் ரன்னிங்கில் ஏறிக்கொள்வதுபோல், உரசிக்கொண்டு செல்லும் விலங்குகளின் உடலில் விதைகள் ஒட்டிக்கொள்ளும். அந்த விலங்கு எங்கெல்லாம் செல்கிறதோ, அந்தப் பகுதிகளில் அந்த விதைகள் விழுந்து முளைக்கும். இப்படித்தான் செடி கொடிகள் புதுப் புது இடங்களில் பரவி வளர்கின்றன. இவ்வாறு மரம், செடிகொடிகளின் விதைகள் இன்னொரு விலங்கின் வெளிப்புறத்தில் ஒட்டிக்கொண்டு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு விதைகள் பரவுவதை epizoochory என்கிறார்கள். இது ஜார்ஜ் டி மெஸ்ட்ரல் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறது.

இதைப்போல, பொருட்களை ஒட்டவும் பிரிக்கவும் ஒரு வழி கண்டுபிடிக்கலாம் என்று அவர் வடிவமைப்பில் இறங்குகிறார். அதற்குமுன்பு வரை, காலணிகளுக்கு லேஸ்கள் மட்டும் இருந்தன. அணியும் பொருட்கள் எல்லாம் பட்டன் அல்லது கயிறு போட்டு கட்டிக்கொள்ளும் வகையில்தான் இருந்தன. தொடக்கத்தில் இவருடைய ஐடியாவை யாருமே மதிக்கவில்லை. 'இதுல எப்புடிண்ணே வெளிச்சம் வரும், போங்கண்ணே' என்று ஒதுக்கிவிட்டார்கள். அப்புறம் ஒருவழியாக, ஒரு நெசவாளர் பஞ்சை வைத்து ஒரு மாதிரியைச் செய்து கொடுத்தார். ஆனால், பஞ்சு எளிதில் பயனற்றுப் போய்விடுகிறது. காரணம், இழைகள் சில முறை பயன்பாட்டுக்குப் பின் அறுந்துபோய்விடுகின்றன. பின்னர்தான் அதற்குத் தீர்வாக நைலான் இழையை உபயோகிக்கிறார். அந்நாளில், கண்டுபிடிக்கப்பட்டு சில வருடங்கள் மட்டுமே ஆகியிருந்த நைலான், பல சிறப்பு அம்சங்களைக் கொண்டிருந்தது. அகச்சிவப்பு ஒளியின் சூட்டில் நெய்யப்பட்டால் உறுதியான அமைப்பு உருவாகிறது என்று கண்டுகொள்ளும் அவர், அடுத்த பத்தாண்டுகளில் இந்த ஜிப் இல்லாத ஜிப்பர் என்று அழைக்கப்பட்ட வெல்க்ரோவை தயாரிக்கும் முறையை இயந்திரமயமாக்குகிறார். உண்மையில், அவர் வைத்த பெயர் touch fastener அல்லது hook and loop fastener. அமெரிக்காவில் அதனை விற்க ஏகபோக உரிமை வாங்கிய நிறுவனத்தின் பெயர்தான் வெல்க்ரோ இன்கார்ப்பரேட்டட். காலப்போக்கில், வனஸ்பதி தயாரித்த டால்டா என்னும் நிறுவனத்தின் பெயராலேயே நாம் அந்தப் பொருளையும் அழைக்கத் தொடங்கினோம் அல்லவா? அதுபோலவே, இந்த டச் அன்ட் லூப் பாஸ்ட்னர்களை நாம் வெல்க்ரோ என்று அழைக்கத் தொடங்கிவிட்டோம். 

முதன்முதலில் இதை பெருமளவு பயன்படுத்தியது நாஸாதான். விண்வெளி வீரர்களின் உடைகளில் பட்டனெல்லாம் வைத்துப் படுத்தாமல், சட்டென்று அணியும்படி வடிவமைக்கக் கைகொடுத்தது. மேலும், விண்வெளியில் ஈர்ப்புவிசை இல்லாததால் பொருட்கள் மிதந்து சென்றுவிடாமல் இருக்க பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஒரு சுவாரசியமான உபயோகம் என்னவெனில், விண்வெளி வீரருக்கு மூக்கு அரித்தால், ஹெல்மெட்டுக்குள் கைவிட்டு சுகமாகச் சொறிந்துகொள்ள முடியாதல்லவா? அதற்காக, வெல்க்ரோவின் சொரசொரப்பான பகுதி ஒன்றை ஹெல்மெட்டின் உட்பகுதியில் ஒட்டி வைத்திருப்பார்களாம். அதை வைத்து அவர்கள் சொறிந்துகொள்ளலாம். அதன்பின்னரே பிற உடைகளில், பாக்கெட்டுகளை மூடுவதற்கு, கார் பைக் போன்றவற்றில் நாம் பயன்படுத்தும் உறைகளில் என்று சக்கைப் போடு போட ஆரம்பித்தது. 

மாற்றுத் திறனாளிகள், நரம்புத் தளர்ச்சி உடையவர்களுக்கான ஆடைகளில், பட்டன்களுக்கு பதில் வெல்க்ரோக்களை பயன்படுத்த, அவர்களால் பிறரின் உதவியின்றி ஆடை அணிய முடிந்தது. வேட்டி கட்டத் தெரியாதவர்களுக்குக்கூட கட்டிக்கோ ஒட்டிக்கோ என்று வந்துவிட்டது. ஆனாலும், ஒரு எட்டு முழம் வேட்டியை ஜீன்ஸ் பேன்ட் கணக்காய் பக்கம் மாற்றி மாற்றி நான்குவிதமாக அணிவது வெல்க்ரோவில் வராதே. அடுத்த முறை சரக்கென்று பிரித்து ஒட்டும்போது, இதற்கு விதை போட்டது இயற்கை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com