8. மக்களே முக்கியம்

இந்தியத் திருநாட்டுக்குப் பல சிறப்புகள் உண்டு. ஆனாலும் மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்களும் நிறைய உண்டு. சிங்கப்பூரிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம், மக்கள் நலனை யோசித்தே எதையும் செய்ய வேண்டும்.

மதராஸ் ஜானேவாலி காடீ, கோவை எக்ஸ்பிரஸ், தோ, தோ, ச்சே, ச்சே, ஷூன்ய, தோ நம்பர் ப்ளாட்ஃபார்ம் பர் ரவானா ஹோகீ…

இது என்ன என்கிறீர்களா? இது அநேகமாக நீங்கள் அடிக்கடி கேட்ட பெண் குரல் அறிவிப்பாக இருக்கும். ஆமாம். நமது ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில்கள் வரும் போகும் அறிவிப்புகள் இப்படித்தான் இருக்கும். இதில் சிறப்பு (!) என்னவெனில், நீங்கள் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கிராமத்து ஸ்டேஷனில் நின்றுகொண்டிருந்தாலும், அது ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் சொல்லும்! நம்ம படிக்காத கிராமத்து மக்களுக்கு ஹிந்தியும் ஆங்கிலமும் தெரியாதே என்ற அறிவு அதற்குக் கிடையாது! ஒரேஒரு முறைகூட தமிழில் சொல்லாது. இதேபோலத்தான் நம் நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் ரயில்வே அறிவிப்புகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் சொல்லப்படுகின்றன. மலையாளத்திலோ, தெலுங்கிலோ, கன்னடாவிலோ, ம்ஹும் சொல்லவே மாட்டார்கள். ஒருசில நிலையங்களில் விதிவிலக்குகள் இருக்கலாம்!

ரயில்வே, மத்திய அரசின் துறையாக இருப்பதால், அதிகாரப்பூர்வ அரசு மொழிகளான ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் அறிவிப்பு வருகிறது. அது சரிதான். ஆனால் அதுமட்டுமே சரியல்ல. கூடுதலாக குடிமக்கள் மனம் குளிரும் ஒரு சேவையைச் செய்யலாமே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. மக்கள் நலனைப் பற்றி யோசிக்கும் அரசுக்கு அப்படிப்பட்ட சிந்தனை நிச்சயம் வரும். இப்போது இன்னொரு நாட்டின் ரயில்வே அறிவிப்பைப் பார்க்கலாம் வாருங்கள்.

சிங்கப்பூர் எம்.ஆர்.டி.

“அடுத்த இறங்கு நிலையம் பிடோக். நடைமேடை இடைவெளியை கவனித்து இறங்கவும். The next station is Bedok. Mind the gap between the platform and the MRT”.

இது, எம்.ஆர்.டி. எனப்படும் சிங்கப்பூர் ரயிலுக்குள் வரும் அறிவிப்பு. தமிழிலும் ஆங்கிலத்திலும்!

ப்ளாட்ஃபாரத்துக்கும் நிற்கும் ரயிலுக்கும் இடையில் இருக்கும் ஒரு சிறிய இடைவெளியில் கால் வைத்து யாரும் விழுந்துவிடக் கூடாது என்று அக்கறையான எச்சரிக்கையோடு! இதுமட்டுமல்ல. ரயிலின் உள்ளேயும் தமிழில் எழுதப்பட்ட அழகான பலகைகள் இருக்கின்றன.

74 விழுக்காடு சீனர்கள் வாழும் ஒரு நாட்டில் தமிழும், ஆங்கிலமும், மண்டரின் சைனீஸும், மலாயும் அரசு அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ மொழிகள். ஆனால், எல்லா ரயில் நிலையங்களிலும் (MRT) தேமதுறத் தமிழ் ஒலிக்கிறது! தமிழுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்டதற்கு, சிங்கப்பூரின் விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் அதிகம் பங்குகொண்டார்கள் என்று பதில் கிடைக்கிறது! நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட சமுதாயத்தை, அதன் தலைமுறையினரை நேசிக்கிறது சிங்கை அரசு.

அதுமட்டுமல்ல. சிங்கப்பூர் முழுவதும் தமிழில் அறிவிப்புப் பலகைகள், தெருக்களின் பெயர்கள், உணவகங்கள் என எங்கும் தமிழ் மணக்கிறது. அவற்றைக் கண் குளிரப் பார்க்கும் நமது ஆன்மா சந்தோஷமடைகிறது. இந்த சந்தோஷம் நமது நாட்டில் நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் எழுகிறது.

நம்ம ஊர் மின்சார ரயில்களில்கூட டிஜிடல் அறிவிப்பைப் பார்த்தேன். அடுத்த ஸ்டேஷன் அம்பத்தூர் என்று அம்பத்தூரில் காட்டிக்கொண்டிருந்தது! அம்பத்தூர் தாண்டியபோதும் அதையே காட்டிக்கொண்டிருந்தது!

நான் முதல் முறையாக சிங்கப்பூர் சென்றபோது, என் தம்பி என்னை ஒரு எம்.ஆர்.டி. (Mass Rapid Transit) ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். என்னிடம் ஒரு அறிவிப்புப் பலகையைக் காட்டினார். அதில் ரயில் வரும் நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு ஒரு நிமிடம் பாக்கி இருக்கும்போது, தண்டவாளத்தைப் பார் என்று சொன்னார். பார்த்தேன். ரயில் வந்துகொண்டிருந்தது!

ஒரு தமிழ்த் திரைப்படத்தில் வந்த ‘ஜோக்’ ஞாபகம் வருகிறது. ஒருவன் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தண்டவாளத்தின் குறுக்கே படுத்துவிடுகிறான். ரயில் வந்து தன் மேலே ஏறி நசுக்கிச் சாகடிக்கட்டும் என்று. கடைசியில் அவன் செத்தும் போனான். ஆனால் ரயில் ஏறி அல்ல; ரயில் வரும் வரும் என்று காத்திருந்து காத்திருந்து பசியிலேயே செத்துப்போனானாம்!

நம்முடைய ரயில்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதைப்பற்றி (!) இன்னொரு நகைச்சுவைக் கதையும் உண்டு. ஒருநாள், மிகச்சரியாக எட்டு மணிக்கு வர வேண்டிய ரயில், ஸ்டேஷனுக்குள் வந்து நின்றதாம். ரொம்ப சந்தோஷமடைந்த அனைவரும் டிரைவருக்கு மாலைகளெல்லாம் போட்டு வரவேற்று பாராட்டினர். மிகச்சரியாக எட்டு மணிக்கு வந்ததற்கு பாராட்டுகள் என்று வாழ்த்தினர். எல்லாவற்றையும் கேட்ட ஓட்டுனர், ‘சரிதான், மிகச்சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்கிறது. ஆனால் இது நேற்று எட்டு மணிக்கு வர வேண்டிய ரயில்’ என்றாராம்!

ஊஃபூ சைக்கிள்

சிங்கப்பூரின் இன்னொரு சேவையின் பெயர் Ofo Bicycle. ஓஃபோ என்றுதான் நான் படித்தேன். ஆனால் அதன் உச்சரிப்பு ‘ஊஃபூ’ என்று போட்டிருக்கிறது. சரி எதோ ஒன்று. உச்சரிப்பு முக்கியமல்ல; சேவைதான் முக்கியம். நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றிருந்தபோது இந்த ஊஃபூ சைக்கிள் சேவை இல்லை. 2017-ல்தான் இது அறிமுகமாகியுள்ளது என்று தெரிந்துகொண்டேன். இது என்ன சேவை?

அழகான, அற்புதமான சேவை. மங்கலமான மஞ்சள் நிறத்தில் ஒரு சைக்கிள். அதற்கான அப்ளிகேஷனை (‘ஆப்’பை) நீங்கள் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்தோ ஆப்பிள் ஸ்டோரிலிருந்தோ தரவிறக்கிக்கொள்ளலாம். பின்னர் அதில் உங்கள் அலைபேசி எண், பெயர் இத்யாதி போன்ற அது கேட்கும் இன்னபிற தகவல்களைக் கொடுத்தால், அது உங்களுக்கென்று ஒரு எண்ணைக் கொடுத்துவிடும். இதற்கு நீங்கள் சிங்கப்பூர் குடிமகனாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வெளிநாட்டவரும் ஊஃபூ சைக்கிள்களைப் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூரில் நீங்கள் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அழகிய மஞ்சள் நிறத்தில் ஏகப்பட்ட சைக்கிள்கள் ஆங்காங்கு நின்று கொண்டிருப்பதையும், சிலர் ஓட்டிக்கொண்டு போவதையும் பார்க்கலாம். எல்லாமே ஊஃபூ சைக்கிள்கள். நீங்கள் எங்காவது செல்ல வேண்டுமெனில் முதலில் உங்கள் ‘ஆப்’பைத் திறந்து குறிப்பிட்ட குறைந்த தொகையை முன்பணமாகச் செலுத்த வேண்டும். அது உங்கள் டெபிட் கார்டு, கிரெடிக் கார்டு அல்லது ‘பேபால்’ போன்றவற்றின் மூலமாகவும் செய்யலாம்.

பின்னர் உங்களுக்கு வாகான, நன்றாகக் காற்றடிக்கப்பட்ட, பார்த்தவுடன் சட்டென்று உங்களுக்குப் பிடித்த நல்ல சைக்கிளுக்கு அருகில் சென்று அதில் உள்ள ‘பார்கோட்’-ஐ உங்கள் அலைபேசி மூலம் ‘ஸ்கேன்’ செய்தால், ‘லாக்’ ஆகியிருக்கும் சைக்கிள் திறந்துகொள்ளும். ‘அண்டா கா கஸம், அபூ கா ஹுகும், திறந்திடு சீசே’ மாதிரி! ‘வெப் வாட்ஸப்’ பயன்படுத்த மடிக்கணிணியில் செய்வது மாதிரி. அவ்வளவுதான். நீங்கள் அந்த சைக்கிளை எடுத்து ஓட்டிக்கொண்டு, சிங்கப்பூரில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்!

இதில் இன்னொரு விசேஷம் ஒன்று உண்டு. அதுதான் சைக்கிளை விட வேண்டிய இடம். எடுத்த இடத்திலேயே சைக்கிளை விட வேண்டும் என்ற அவசியமில்லை! உதாரணமாக, ஹௌகாங் என்ற பகுதியிலிருந்து தமிழர்கள் அதிகமாகக் கடைகள் வைத்திருக்கும் தேக்கா அல்லது லிட்டில் இண்டியா என்ற பகுதிக்கு நீங்கள் அரை மணி நேரம் சைக்கிளை ஓட்டிச்சென்று, அங்கிருக்கும் ஆனந்த பவனில் ஒரு காஃபி குடித்துவிட்டு, அப்படியே ஹனிஃபா என்ற புகழ்பெற்ற கடையில் – கடையா அது, கடல்! - கொஞ்சம் ‘ஷாப்பிங்’ செய்துவிட்டு, திரும்பி பேருந்தில் போக வேண்டும் என்று விரும்பினால் - எல்லா அரசுப் பேருந்துகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை - உங்களுக்கு சௌகரியமான ஏதாவதொரு இடத்தில் சைக்கிளை வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றுவிடலாம்!

அதாவது, எங்கிருந்தும் ஊஃபூ சைக்கிள்களை எடுத்துக்கொள்ளலாம். எங்கும் விட்டுவிட்டுச் செல்லலாம்! ஊஃபூ சிங்கை முழுவதும் ‘சேஃபு’ (safe)! யாராவது திருடிக்கொண்டு போய்விடுவார்களோ என்று எண்ண வேண்டியதில்லை. ஏனெனில், அந்த மஞ்சள் அழகிகள் அனைவரும் ‘டிஜிடலாக லாக்’ செய்யப்பட்டவர்கள். அவர்களை டிஜிடலாகத்தான் ‘ஓபன்’ செய்ய வேண்டும்! Technology at the service of citizens!

இந்த ஊஃபூ சைக்கிள்கள் ஒரு சீனக் கம்பெனியின் தயாரிப்பு. உலகில் சிங்கைபோல பல நாடுகளிலும் இம்முறை செயல்படுத்தப்படுகிறது என்கிறது விக்கி.

மீட் த பீப்பிள் செஷன்

சிங்கையில், எம்.பி. ஒருவர் தங்கள் தொகுதி மக்களை வாராவாரம் ஒருநாள் சந்தித்துப் பார்ப்பது அரசாங்க அமைப்பாகும். மாலை ஏழு மணி வாக்கில் தொடங்கும் சந்திப்பு நள்ளிரவு வரைகூட தொடருமாம். அதிலும் ஒரு விஷேசம் உள்ளது. மக்கள் கொடுக்கும் குறைதீர்க்கும் கடிதங்கள் உரிய அதிகாரிகளிடம் கொடுக்கப்படும். ஆனால் புகார் கொடுத்த மக்களிடமே குறை இருக்குமானால், அந்தக் கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. உதாரணமாக, ஒருவன் குடித்துவிட்டு கன்னா பின்னாவென சாலை விதிகளை மீறி காரை ஓட்டிக்கொண்டு சென்று பிரச்னை செய்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அவனது மனைவி எம்.பி.யிடம் வந்து என் கணவர் மீது நடவடிக்கை எடுத்தால் என் வாழ்க்கையே பாதிக்கும் என்று முறையிடுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், கணவன்தான் குடித்துவிட்டு தவறாக நடந்துகொண்டதாக ட்ராஃபிக் போலீஸ் சொல்லிவிட்டால், அவரது சாட்சியம்தான் இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும். அன்றையை சிசிடிவி பதிவுகளும் சரிபார்க்கப்படும். மக்களிடம் இருந்து வரும் புகார்கள் உண்மையாகத்தான் இருக்கும் என்று குருட்டுத்தனமாக அரசு செயல்படுவதில்லை. தவறு யார் செய்தாலும் தண்டனை உண்டு.

நம் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு தேர்தலுக்குப் பின் நாம் சந்திப்பது அடுத்த தேர்தலில்தான்! ‘மீட் த பீப்பிள் செஷன்’ என்பது நமக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைதான்! சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களது ஊர்க்காரர்களாக நாம் இருந்தால் அவரது அலுவலகம் சென்று நம் குறைகளைச் சொல்லலாம். ஆனால் மக்கள் குறை கேட்பதற்கென்று எந்தக் குறிப்பிட்ட நாளையும் ஒதுக்கிப் பார்க்கும் பழக்கம் நம்மிடம் இதுவரை இல்லை.

லீ க்வான் யூ

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் சாதனையாளர் லீ க்வான் யூ அவர்கள், தனது 91-வது வயதில் 23 மார்ச், 2015-ல் இறந்தார். அவரோடு ஒரு மாபெரும் சகாப்தம் முடிந்தது. அவர் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இது எல்லா நாடுகளிலும் நடப்பதுதானே என்கிறீர்களா? ஆமாம். ஆனால் எல்லா நாடுகளிலும் நடக்காத ஒன்றும் நடந்தது. அது என்ன? அவர் உடலைப் பார்க்க வந்த பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளின் அவசர உடலுபாதைகளைச் சமாளிப்பதற்காக ‘போர்டபிள்’ கழிவறைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டன! அரசின் மூளைக்குள் மக்கள் நலன் பிரதானமாக இருந்தால் மட்டுமே அந்த நேரத்தில்கூட அப்படிச் செய்ய முடியும்?

இந்த நேரத்தில் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் அவசரமாக சிறுநீர் கழிப்பதற்காக வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்த கட்டணக் கழிப்பறையை அணுகினேன். மூக்கைப் பொத்திக்கொண்டுதான்! அவ்வளவு துர்நாற்றம்! இரண்டு ரூபாய் கட்டணம் வேறு! உள்ளே போன வேகத்தில் வெளியே வந்தேன். ‘உள்ள தண்ணியே இல்லயே’ என்று கேட்டேன். அவன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்! பிறகு கேட்டானே பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி! ‘நீ ஒன்னுக்குத்தானே போற? அதுக்கு எதுக்கு தண்ணி?’!

இந்தியத் திருநாட்டுக்குப் பல சிறப்புகள் உண்டு. ஆனாலும் மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்களும் நிறைய உண்டு. குறிப்பாக, சிங்கப்பூரிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்: மக்கள் நலனை யோசித்தே எதையும் செய்ய வேண்டும்.

சிங்கப்பூர் போன்ற சின்ன நாடுகளில் இதெல்லாம் சாத்தியம். ஆனால் இந்தியா போன்ற துணைக்கண்டங்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை என்று நினைத்தால், அதற்கும் பதில் மறைந்த மாமனிதர் லீ க்வான் யூவிடம் உண்டு. சிங்கைபோல இந்தியாவை சுத்தமாக வைக்க முடியுமா என்ற கேள்விக்கு, ஒரு டிவி நேர்காணலில் அவர் சொன்னார். ‘Give me India for two years’!

இன்னும் உண்டு…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com