5. மூன்றாவது உணவு

உலகமகாக் கொலைகாரனான ஹிட்லர் ஒரு சைவன்! ஆனால், அடுத்தவர் தொடக்கூடத் தயங்கும் மனிதர்களுக்கு வாழ்நாள் பூராவும் தன் கைகளால் சேவை செய்த அன்னை தெரஸா ஒரு அசைவர்!
5. மூன்றாவது உணவு

நாம் எதற்காக வாழ்கிறோம்? இது என்ன கேள்வி என்கிறீர்களா? ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம், இலக்கு இருக்கும். அதற்காகத்தான் நான் வாழ்கிறேன் என்று அவர்கள் சொல்வார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம். நான் அதைப்பற்றி இங்கே பேசவில்லை. உயிர் வாழ்வதைப் பற்றி நான் இங்கே பேசுகிறேன் என்று இப்போதைக்கு வைத்துக்கொள்ளலாம். உயிர் வாழ்வது வேறு, வாழ்வது வேறு. கோமாவில் இருப்பவர் உயிரோடு இருப்பார். ஆனால் அவர் வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சொல்ல முடியாது. அல்லவா?

ஒருவர் உயிரோடு இருந்தால்தானே லட்சியத்தை அடைவதற்காகப் பாடுபட முடியும்? அந்த உயிர் வாழ்தலுக்கு எது அவசியம் என்று கேட்கிறேன். இதற்கான பதிலை பதினோறாம் நூற்றாண்டில் ஒரு ஞானி அழகாகச் சொல்லிவிட்டார். மனிதன் வாழ்வதற்குக் காரணம் பசி என்று அவர் சொன்னார். அந்த ஞானியின் பெயர் இமாம் கஸ்ஸாலி.

பயங்கரப் பசியில் இருக்கும் மாணவனிடம் ‘ரெண்டும் ரெண்டும் எத்தனை’ என்று கேட்டால் ‘நாலு’ என்று சொல்லமாட்டான். அவன் வடநாட்டுப் பையனாக இருந்தால் ‘நாலு சப்பாத்தி’ என்றோ, தமிழ்நாட்டுப் பையனாக இருந்தால் ‘நாலு இட்லி’ என்றோ சொல்லலாம்! பசி மட்டும் இல்லையெனில், உலகில் ஒரு வேலையும் நடக்காது. எல்லா முயற்சிகளும், சாதனைகளும், வேதனைகளும் வயிற்றுக்காகத்தான். நாம் வாழ்வதே ஒருவகையில் உணவுக்காகத்தான் என்று சொல்லிவிடலாம். உணவே மருந்து, உணவே நோய், உணவே ஆரோக்கியம், உணவுதான் நாம், நாம்தான் உணவு.

நாம் உண்ணும் உணவு சில மணி நேரங்களில் நாமாக மாறிவிடுகிறது என்ற கருத்து நம் உடலுக்குள் நடக்கும் விஞ்ஞான மாற்றங்களைச் சுட்டுகிறது. ஆனால் பெரும்பாலும் அசைவ உணவு உண்பவர்களுக்கு எதிரான வாதமாகவே இந்தக் கருத்து முன்வைக்கப்படுகிறது. கோழி, மீன், ஆடு, மாடு போன்ற சமாசாரங்களை உண்ணும்போது மிருக உணர்வுகளே நம்மை ஆட்கொள்ளும். அதுவே மெல்லமெல்ல ஆட்கொல்லி உணர்வை மேலோங்கச் செய்யும் என்பது பெரும்பாலான சைவக்கொக்குகளின் மொக்கை வாதம்.

அசைவ உணவில் உயிர்க்கொலை நடைபெறுகிறது என்ற வாதம் விஞ்ஞானப்பூர்வமாக எடுபடுவதில்லை. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டு ரொம்ப காலமாகிவிட்டது. ஆடு, கோழியாவது அறுக்குமுன் ஓடிப்போய்விடும் சாத்தியம் உள்ளது, செடிகொடிகள் பாவம், ஓடக்கூட முடியாது என்கிறார் ஆதியோகியைக் கண்டுபிடித்த நம்ம சத்குரு ஜக்கி அவர்கள்! சமயங்களில் அவர் இப்படி சரியான விஷயங்களையும் சொல்லிவிடுவார்!

சைவத்தை ஓரங்கட்டவோ அசைவத்துக்கு வக்காலத்து வாங்கவோ இதை நான் சொல்லவில்லை. ‘டேய், முட்டாப்பயல்களெல்லாம் ஏந்திரிச்சு நில்லுங்கடா’ என்று ஒரு வாத்தியார் சொன்னாராம். எந்த மாணவனும் எழவில்லை. ஆனால் ஒருவன் மட்டும் எழுந்து நின்றான். ‘என்னடா, இந்த வகுப்புல நீ மட்டும்தான் முட்டாள்னு புரிஞ்சிகிட்டியா?’ என்றாராம் வாத்தியார் கிண்டலாக. ஆனால் ‘சொந்தக்காலில் நின்ற’ அந்த மாணவன் சொன்ன பதில்தான், முட்டாள் யாரென்று புரியவைக்கிறது. அவன் சொன்னானாம்: ‘சார், பாவம் நீங்க மட்டும் தனியா நிக்கிறிங்களேன்னுதான் நானும் எந்திரிச்சேன்’! முன்முடிவுகளின்றி சில உண்மைகளை நாம் புரிந்துகொண்டால் நன்மை பயக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவே உங்களுக்குத் தெரிந்த இக்கதையைச் சொன்னேன்!

உணவுதான் நம்மை உருவாக்குகிறது என்பது சரிதான். ஆனால் உணவு என்றால் என்ன என்று உங்களை நான் கேட்டால், நீங்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கலாம். இருந்தாலும் பரவாயில்லை. நான் சொல்லிவிடுகிறேன். உணவு என்று சொல்லப்படும்போதெல்லாம் ஒரு வாயால் உண்டு, இன்னொரு வாயால் கழிவு வெளியேற்றம் செய்யப்படுவதுதான் உணவு என்பதாக நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால், அது மட்டுமே மனிதனுக்கான உணவல்ல.

உண்மையில், ஒரு மனிதன் அன்றாடம் மூன்று வகையான உணவுகளை எடுத்துக்கொள்கிறான் என்று எனக்கு முதன்முதலில் புரியவைத்தவர், என் ஞானாசிரியர் மறைந்துவாழும் ஹஸ்ரத் மாமா அப்துல் வஹ்ஹாப் அவர்கள்தான்.

முதல் வகை வாயால் எடுத்துக்கொள்ளும் சைவ / அசைவ உணவுகள். தோசை இட்லி, இடியாப்பத்தில் தொடங்கி, பறப்பன, நடப்பன, நீந்துவன என்று அது விரியும். இரண்டாம் வகை உணவானது, மூக்கால் எடுத்துக்கொள்ளும் மூச்சாகும். ஆமாம். முந்திய உணவின்றி பல மணி நேரங்கள் மனிதனால் இருக்க முடியும். நோன்பு இருக்கும்போதெல்லாம் நாம் அதைத்தான் செய்கிறோம்.

ஆனால் மூச்சு என்ற உணவின்றி சில விநாடிகளுக்கு மேல் நம்மால் இருக்க முடியாது. மூச்சை அடக்கவல்ல யோகிகள், சித்தர்கள், ஞானிகளை இந்த வரிசையில் சேர்க்க முடியாது. அவர்கள் விதிவிலக்குகள். எனவே, முதல் வகை உணவைவிட இரண்டாவதான மூச்சு அதிமுக்கியமானது. உயிர் வாழவைப்பதால் மட்டுமல்ல, நம்முடைய ‘கேரக்டரையே’ மாற்றவல்ல தகுதியும் மூச்சு என்ற உணவுக்கு உண்டு.

ஆசையோடு நீங்கள் உங்கள் காதலியை அல்லது மனைவியை அணுகும்போது விடும் மூச்சு வேறு, அன்போடு ஒரு குழந்தையை அணைத்துக்கொள்ளும்போது விடும் மூச்சு வேறு. அச்சத்தில் விடும் மூச்சு வேறு, புகழின் உச்சத்தில் இருக்கும்போது விடும் மூச்சு வேறு. ஆத்திரத்தில் விடும் மூச்சு வேறு, அவசரத்தில் விடும் மூச்சு வேறு. வெயிலில் விடும் மூச்சு வேறு, மழையில் விடும் மூச்சு வேறு. தியானத்தில் விடும் மூச்சோட்டத்தை வீடுகூடும்போது கொண்டுவர முடிந்தால், செக்ஸ்கூட ஒரு தியானமாகிவிடும் என்கிறார் ஓஷோ. ரொம்ப அனுபவித்துச் சொல்லியிருப்பார்போல!

மூச்சை மாற்றினால் உங்கள் மனநிலை மாறும். வேண்டுமானால், கோபம் வரும்போது வேண்டுமென்றே மூன்று முறை நிதானமாக, கவனித்து நீண்ட மூச்சு விட்டுப்பாருங்கள். உங்களால் கோபப்பட முடியாமல் போய்விடும். எவனாவது கோபப்படும்போது கவனித்து மூச்சுவிட்டுக்கொண்டிருப்பானா என்று நீங்கள் கோபமாகக் கேட்பது என் காதில் விழுகிறது!

கிரண் பேடி காவல் துறை அதிகாரியாக இருந்த காலத்தில், சிறைக் கைதிகளுக்கு மூச்சுப்பயிற்சி கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. மூச்சு பற்றிய உண்மை கிரணுக்குத் தெரிந்திருக்கிறது. இப்போதுகூட அதிகாரத்தில் இருப்பவர்கள் பத்திரிகையாளர்களுடன் பேசும்போது ஆழமான மூச்சொன்றை விட்டுக்கொண்டு அவர் பேசினால், காக்கிச் சட்டை கதர்ச்சட்டைகளுக்கு இடையிலான உரசல்கள் இன்றி இன்னும் சிறப்பாகச் செயல்படலாம். ஏனெனில், மூச்சு என்ற இரண்டாம் வகை உணவு உங்களை, உங்கள் வாழ்க்கையை மாற்றவல்லது.

மூன்றாவது வகை உணவு ஒன்று உள்ளது. இது மூச்சைவிட முக்கியமானது, நுட்பமானது. இதையும் அன்றாடம் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கணமும் அவனுக்கே தெரியாமல் எடுத்துக்கொண்டேதான் இருக்கிறான். இது இல்லாமலும் அவனால் வாழ முடியாது. இந்த உணவின் பெயர், பதிவுகள் (Impressions). அன்றாடம் நம் மனத்தில் நமக்கே தெரியாமல் போடப்பட்டுக்கொண்டே இருக்கின்ற பதிவுகள், கருத்துகள்.

ஒரு சோப்பு விளம்பரத்தை ஒரு மாதம்பூரா பார்த்துக்கொண்டிருக்கும் நாம், என்றைக்காவது சோப்பு வாங்க கடைக்குச் சென்றால், நம் கை நம்மை அறியாமல் விளம்பரத்தில் பார்த்த சோப்புக்குத்தான் போகும்!

ஒரு மகளை அவள் அம்மா தன் ஸ்கூட்டரில் ஏற்றாமல் தூசியிலும் சேற்றிலும் ஓடவிட்டு ஓடவிட்டு, கடைசியில் அவள் கையில் ஒரு சோப்பைக் கொடுத்து அது உனக்குப் பாதுகாப்பு தரும் என்று சொல்கிறாள்! அந்தப் ‘பாதுகாப்பை’ வைத்து பாலியல் வன்முறையைத் தடுக்க முடியுமா என்று தெரியவில்லை! ஒரு இளம்பெண் (என்று நினைக்கிறேன்) ஒரு கண்ணாடிக் கதவை அல்லது ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து தாடிவைத்த ஒரு இளைஞனிடம் ‘உங்கள் டூத்பேஸ்ட்ல உப்பிருக்கா?’ என்று கேட்கிறாள்! ஒரு பற்பசையில் உப்பு கலந்துள்ளதா என்று கேட்பதற்கு அவள் ஏன் ஒரு கண்ணாடிக் கதவை உடைக்க வேண்டும் என்று தெரியவில்லை!

யோகாசனங்கள் செய்துகாட்டுவதில் பிரபலமானவர் அவர். சட்டென்று தன் வயிற்றை அஷ்டகோணலாக்கி படுவேகமாக உருட்டிக்காட்டுவார். சர்க்கஸ் கூண்டுக்குள் சுற்றும் மோட்டார் வாகனங்களைப்போல, ஒரு சதைப் பகுதி இன்னொன்றைத் துரத்துவதுபோல, துரத்தப்படும் பகுதி பிடிபடாமல் ஓடுவதைப்போல அவரது வயிறு மட்டும் சுற்றிக்கொண்டே இருக்கும்! அப்படி எல்லோராலும் செய்யமுடியுமா? ஏன் செய்ய வேண்டும்? அப்படிச் செய்வது ஆரோக்கியம் தரும் என்றால், இந்தியத் திருநாட்டில் எத்தனை பேருக்கு அந்த வயிற்று சர்க்கஸ் ஆரோக்கியம் சாத்தியம்?

நமக்குத் தெரியாமலே, நம்மைக் கலக்காமலே, திரும்பத் திரும்ப காட்டப்படும் விளம்பரங்கள், சர்க்கஸ்கள், செய்திகள் எல்லாம் நமக்குள் பல கருத்துகளை ஒவ்வொரு கணமும் விதைத்துக்கொண்டே இருக்கின்றன. இது நல்லது, இது கெட்டது, இது சரி, இது தவறு, இவன் மேலானவன், அவன் கீழானவன், இவன் நண்பன், அவன் பகைவன், இவன் தாடி, அவன் கேடி, அவன் ஒஸ்தி, இவன் மட்டம் – இப்படிப்பட்ட கருத்துகள் காலம்காலமாக நம் மூளை வழியாக அனுதினமும், ஒவ்வொரு கணமும் ஊட்டப்பட்டு அவற்றை ரசித்து ருசித்து நாம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம், அதைப் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லாமலே.

இரண்டாவது உணவான மூச்சுவிடுதலை semi-conscious eating என்றும், மூன்றாவது வகையை unconscious eating என்றும் சொல்லலாம். ஏனெனில், மூச்சு நம்மைக் கேட்காமல் அதுவாகவே வந்து போய்க்கொண்டிருந்தாலும், நாமாக விழிப்புணர்வோடு மூச்சுப் பயிற்சியும் செய்யலாம். ஆனால் கொஞ்ச நேரம்தான் அப்படிச் செய்யமுடியும். மீதி நேரமெல்லாம் அதுவாகவே வந்துபோய்க்கொண்டிருக்கும். அப்படித்தான் வாழ முடியும். எனவே அது ‘செமி-கான்ஷியஸ்’ செயல்பாடு. ஆனால் நமக்குள் வந்து புகுந்துகொள்கின்ற, நம்மை ஆட்டிப் படைக்கின்ற, நம்முடைய பாத்திரத்தை உருவாக்குகிற, நதிமூலம், ரிஷிமூலம் அறியப்படாத எண்ணங்கள், சிந்தனைகள், கருத்துகள் எங்கிருந்து, யார் மூலம் வருகின்றன என்று கண்டுபிடிக்கவே முடியாது. அவை ‘அன்கான்ஷியஸ் ஈட்டிங்’ வகையாகும்.

பதிவுகள் எனப்படும் இந்த மூன்றாவது வகை உணவுதான் முன்னது இரண்டையும்விட உயர்ந்தது அல்லது மோசமானது. ஏனெனில், நமக்கே தெரியாமல் நமக்குள் போடப்பட்டுக்கொண்டே இருக்கும் விதைகள் அவை. அவை எவ்வளவு பெரிய மரங்களாகிவிட்டன என்று நமக்கே தெரியாது. அவை ஆலமரங்களாக இருந்தால் நல்லது. ஆலகால விஷமாக இருந்தால்?

யூதர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு கோடிப் பேரைக் கொன்ற ஹிட்லர் அன்றாடம் சாப்பிட்ட உணவின் பெயர் யூதவெறுப்பு. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸா, ‘வழக்கமான விருந்து வேண்டாம்; அதற்குச் செலவாகும் பணத்தை (1,92,000 டாலர்கள்) இந்தியாவில் உள்ள ஏழைகளுக்குக் கொடுத்துவிடுங்கள்’ என்று கேட்டாரே, அவர் உண்டது அன்பு, கருணை ஆகிய உணவுகள்.

இங்கே இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்லவேண்டி உள்ளது. உலகமகாக் கொலைகாரனான ஹிட்லர் ஒரு சைவன்! ஆனால், அடுத்தவர் தொடக்கூடத் தயங்கும் மனிதர்களுக்கு வாழ்நாள் பூராவும் தன் கைகளால் சேவை செய்த அன்னை தெரஸா ஒரு அசைவர்! நாம் வாயால் உண்ணும் உணவு நமது அடிப்படைக் குணத்தை மாற்றிவிடுவதில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ள அவர்கள் நல்ல சான்றுகள்.

தீவிரவாதம் தப்பு, அதற்கு நம் மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று சொன்னதற்காக, தன் அம்மா என்றுகூடப் பாராமல் அவரை அங்கேயே ஒரு தீவிரவாதி சுட்டுக்கொன்றான் என்று எதிலோ படித்த செய்தி மனத்தைப் பிழிந்தது. வேனில் தூங்கிக்கொண்டிருந்த க்ரஹாம் ஸ்டெய்ன் என்ற மிஷனரியையும் அவரது இரண்டு மகன்களையும், வேனிலிருந்து வெளிவர முடியாமல் செய்து சில மதவெறியர்கள் எரித்துக்கொன்றார்கள். இது நடந்தது 1999-ல் ஒரிஸ்ஸாவில்.

என் மார்க்கம் சரி, உன் மார்க்கம் தப்பு என்பதே கொலைகாரர்களின் உணவு. செக்ஸ் உணர்வை அன்றாட உணவாகக் கொள்பவர்கள்தான் சிறுமிகளை, குழந்தைகளையெல்லாம் வன்புணர்ச்சி செய்து கொல்கிறார்கள். அன்பு, மென்மை, பாசம், சகிப்புத்தன்மை, கருணை, மன்னிப்பு ஆகியவற்றுக்கு எதிரான கருத்துகள்தான் எல்லாத் தீவிரவாதிகளின் உணவாக உள்ளது.

நமக்கு சோம்பு பிடிக்கும் என்றால் சீனர்களுக்குப் பாம்பு ரொம்பவும் பிடிக்கும். பிடிக்குமென்றால், பிடிப்பதற்கல்ல; கடிப்பதற்கு! பாம்பு மட்டுமல்ல, நாம் எதையெல்லாம் கண்டு அஞ்சுவோமோ அவர்கள் அதையெல்லாம் எடுத்துக் கொஞ்சுவார்கள்! சின்ன வயசு சீனக் குழந்தைகள்கூட பாம்பை வெட்டி சூப் செய்து குடிக்கிறார்கள்!

கரப்பானைப் பார்த்தாலே காத தூரம் ஓடுவார்கள் நமது பெண்கள். ஆனால், தேளைக் கடித்துச் சாப்பிட்டுவிட்டு(!) நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள், சீனர்களும் ஜப்பானியர்களும்!

நம் ஊரில் ஆட்டுக்கறி தொங்கவிட்டிருப்பது மாதிரி, சீனாவில் யூலின் என்ற ஊரில் உள்ள சந்தையில் நாய்க்கறிகள் வெட்டிக் கொடுக்கப்படுகின்றன! தவளைகளை வெட்டிச் சமைத்துச் சாப்பிடும் சீன சிறுவர்களின் காணொளி யூடியூபில் காணக் கிடைக்கிறது. கல்லையும் மண்ணையும்கூட உணவாக எடுத்துக்கொள்பவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். நீங்களும் பார்த்திருக்கலாம்.

கொரியாவில் நடந்தது அல்லது நடப்பது இன்னும் கொடூரமானது. கருவில் கலைந்த அல்லது கலைக்கப்பட்ட குழந்தையின் சதையைப் பொடிசெய்து மாத்திரைகளின் உள்ளே வைத்துக் கொடுத்தார்கள்! தைவான் நாட்டில் கலைக்கப்பட்ட கருக்குழந்தையைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஒருவனின் ஒளிப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி நம்மையெல்லாம் கலக்கியது. அதைப்பற்றி ‘ஏழாவது சுவை’ என்ற தலைப்பில் நான் ஒரு கவிதைகூட எழுதினேன். அதிலிருந்து கொஞ்சம் உங்களுக்காக:

தட்டில் வைத்து

வாஷ்பேசினில் கழுவும்போது

சற்றே தெரிகிறது

சந்தேகத்தின் தலை..

வருத்த இளம் தொடையை

வழுக்கைத் தலையன் ஒருவன்

வாயில் வைத்துக் கடிக்கும்போது

விளங்கிவிடுகிறது.

கருவறையிலேயே கலைந்து போன

அல்லது கலைக்கப்பட்ட

கம்பனோ காளிதாசனோ

ஏசுவோ லாசூ வோ?!

தெரியவில்லை எனினும்

ஆரோக்கியமான வாழ்வுக்கு

அமோக விற்பனையாம்

தைவானில்!

ஆன்மாவின் நாக்குகள்

அறுந்துபோனவர்களுக்கான

ஏழாவது சுவை..

வாய்வழியாக உண்ணப்படும் உணவுகள் எல்லாம் சூழல் மற்றும் பண்பாடு சார்ந்த பழக்கங்கள்தானே தவிர வேறில்லை. ஆனால், மனிதகுலத்தையும் மனிதத்தன்மையையும் வாழவைக்கும் அல்லது வீழவைக்கும் மூன்றாவது வகை உணவைப் பற்றித்தான் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டி உள்ளது.

*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com