Enable Javscript for better performance
2. டேட்டா மார்க்கெட்டிங்- Dinamani

சுடச்சுட

  

   

  20 ஆண்டு காலம் என்பது இறந்துபோன காலமாகிவிட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவையே நம்மவர்களுக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள் இருந்தது, பேஸ்புக் இருந்தது. ஆனால், இந்தளவுக்குப் பயன்பாட்டில் இருந்ததில்லை. 5 எம்பி அளவுள்ள சினிமா பாடலை தரவிறக்க, குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது ஆகும். தற்போது 50 ஜிபி டேட்டாவை, 5 நொடிகளில் தரவிறக்கம் செய்துவிடலாம். வேகம் வேகம்… போகும் போகும்... மேஜிக் ஜர்னி!

  அதிக வேகம் ஆபத்தானது என்பது நெடுஞ்சாலைகளில் மட்டுமல்ல, இணைய வழி சாலைகளுக்கும் பொருந்தும். இனி, வரும் காலத்திலும் இணையத்தின் வேகம் இதைவிட பல மடங்கு அதிகமாகத்தான் இருக்கப்போகிறது. அதிக வேகத்தினால் நம்முடைய பணிகள் சுலபமாக முடிகின்றன. ஆனால், உளவியல் ரீதியாக எழும் சிக்கல்களையும் நாம் பார்த்தாக வேண்டும். 300 ரூபாய் பணத்தை வங்கியிலிருந்து எடுப்பதற்காக டோக்கன் பெற்று, 30 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்தோம். இன்று ஏடிஎம் வாசலில் சில நொடிகள் ஏற்படும் தாமதத்தை பொறுத்துக்கொள்ளாத அதே மனிதர்கள், எளிதாக எரிச்சலடைகிறார்கள். வேகம்.. வேகம்.. அதுவே இன்று பிரதானம்.

  டேட்டாவை உடனடியாகப் பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்பம் அதற்கு வெகுவாக கைகொடுத்திருக்கிறது. தகவல்களைப் பெறுவதிலும், அவற்றை பத்திரப்படுத்துவதும் பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது. பாதுகாப்பின்மை குறித்த கேள்விகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகின்றன. டேட்டா திருடர்கள் அதிகமாகிவிட்டார்கள். இணைய பூச்சாண்டிகளிடம் சிக்கிக்கொண்டு பணத்தை இழப்பவர்கள் ஏராளம். வேகத்தோடு, நிதானம் என்பதும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. குறித்த நேரத்தில், பிழையில்லாமல் சரியான தகவல்களைத் தருவதற்கான அவசியம் ஏற்படுகிறது.

  இதுவொரு டிஜிட்டல் உலகம். டேட்டா பரிமாற்றங்களுக்கு நடுவே நாம் உட்கார்ந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு டேட்டாவை உருவாக்குகின்றன. அவை கட்டமைக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இவைதான் டேட்டாபேஸ் என்னும் சட்டக அமைப்பின் சூத்திரம்.

  ஏன் டேட்டாவை வகைப்படுத்த வேண்டும்? அப்போதுதான் டேட்டாவை நம்மால் புரிந்துகொள்ள முடியும். நாம் பகிர்ந்துகொள்ளும் டேட்டாவை வைத்து, நம்மையும் புரிந்துகொள்ள மற்றவர்களால் முடிகிறது. உங்களிடமிருந்து எந்தவொரு அசைவும் இல்லாவிட்டால், உங்களை யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது. உலகத்தின் ஒவ்வொரு அசைவையும் புரிந்துகொள்ள, என்ன செய்வார்கள் என்பதை கணிக்க டேட்டா அவசியமாகிறது.

  நம்முடைய அன்றாட நடவடிக்கை, பழக்க வழக்கங்களை ஆராய்ந்து, நம்மை வகைப்படுத்துகிறார்கள். நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகிறது. செலவாளிகள், தாராள பிரபுக்கள், சிக்கனவாதிகள், கஞ்சர்கள் என்று மனிதர்களில் எத்தனையோ நிறங்கள்! அத்தனையும் இனம் காணப்படுகிறது.

  வாடிக்கையாளர்களை இனம் பிரித்தபின்னர் வேட்டை ஆரம்பமாகிறது. சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ தொடர்புகொள்கிறார்கள். தொலைபேசி அழைப்புகள் தொடர்கின்றன. மின்னஞ்சல் அனுப்பும்போது, அதற்குப் பக்கத்தில் விளம்பரங்கள் நம்மைப் பார்த்து கண்சிமிட்டுகின்றன. கூகுளில் எதையாவது தேடினால், அது சம்பந்தமான பொருள்கள் குறித்த விளம்பரம் சட்டென்று நமக்கு எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளாக குவிகிறது. மெல்ல, மெல்ல ஒரு கண்ணுக்குத் தெரியாத வலைக்குள் நாம் வீழ்த்தப்படுகிறோம். ஒவ்வொருவரும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறோம். அதற்கெல்லாம் முழுமுதற் காரணம், அன்றாடம் நாம் பகிர்ந்துகொள்ளும் டேட்டா!

  சென்னை, சிறுசேரியில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் நண்பருக்கு அவ்வப்போது தொலைபேசி அழைப்பு வருவதுண்டு. கிழக்கு கடற்கரைச் சாலை ரிசார்ட் தங்குமிடங்கள் பலவற்றிலிருந்து தொடர்புகொண்டு வீக் எண்ட் ஆஃபர் இருப்பதை விவரிக்கிறார்கள். தொலைபேசி இணைப்பில் DND ஆக்டிவேட் செய்தும் அழைப்புகள் தொடர்கின்றன. ஏராளமான புகார்கள் அளித்து அப்போதைக்கு நிவாரணம் தேடினாலும், தொல்லைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு கால் டாக்ஸி பயணத்துக்குப் பின்னரும், தொலைபேசி அழைப்புகள் அதிகரிப்பதை நண்பர் ஒருவழியாகக் கண்டுபிடிக்கிறார்.

  கால் டாக்ஸி நிறுவனத்திலிருந்து டேட்டா கசிந்திருக்கிறது. நண்பரின் டிரிப் ஷீட்டை யாரிடமோ பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அலுவலக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நண்பர் செல்லுமிடங்கள், அங்கே அவர் செலவழிக்கும் நேரம், என்ன செய்கிறார், யாரை எத்தனை முறை சந்திக்கிறார், எப்போது சந்திக்கிறார் என்பதெல்லாம் அலசப்படுகின்றன. நண்பரின் செலவழிக்கும் திறன், அவரது பொருளாதார வசதியெல்லாம் கண்டுபிடிக்கப்படுகின்றன. பின்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மார்க்கெட்டிங் ஆசாமிகள் களத்தில் இறங்குகிறார்கள். அவர்களது மொழியில் நண்பர், வேல்யூ கஸ்டமராக்கப்படுகிறார்.

  இது தவறில்லை. உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி இது. ஆனால், டேட்டாவை சேகரிப்பதில்தான் அத்துமீறல் நடந்திருக்கிறது. உலகெங்கும் நடந்தாலும், இந்தியாவில் அதிகமான அளவில் நடந்தேறுகின்றன. ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை விவரங்கள் பொது இடங்களில் பெரிய அளவில் பகிரப்படும்போது, இத்தகைய முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உண்டு.

  டேட்டா, நேர்மையான வழியில் பெறப்பட்டாலும், இத்தகைய மார்கெட்டிங் நல்ல பயன்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. நிறைய சாம்பிள்கள் தேவைப்படும். நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு விஷயமும் பதிவு செய்யப்படுகின்றன. நம்மை புரிந்துகொள்வதற்கான முயற்சிகள் இவை. நம்முடைய ஆர்வம், கவனம், தகுதி ஆகியவற்றுக்கு ஏற்ப மார்கெட்டிங் திட்டம் உருவாக்கப்படுகிறது. டிஜிட்டல் மார்கெட்டிங்கின் அடிப்படை சூத்திரம் இதுதான்.

  டிஜிட்டல் மார்கெட்டிங்கில் ஆதார சுருதி என்பது டேட்டா. அதுதான் முடிவெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்தளவுக்கு நேர்மையான வழியில், முறைப்படி டேட்டா பெறப்பட்டு, ஆராயப்படுகிறதோ அந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமானதாக இருக்கும்.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai