4. ஃபேஸ்புக் பித்தலாட்டங்கள்

தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியலில், ஃபேஸ்புக்கில் படம் வெளியானதால் உயிரை மாய்த்தவர்கள் அதிகம் என்பதை சொல்லவே தேவையில்லை.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட்டர் சபை கூடியிருக்கிறது. இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருக்கிறார் ஃஃபேஸ்புக்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க். கடந்த பத்தாண்டுகளாக இணைய உலகத்தை ஆட்டிப்படைக்கும் ஒரு முன்னணி நிறுவனத்தின் மாஸ்டர் மைண்ட், ஒரு முக்கியமான விசாரணைக்குத் தயாராகிறார். ஆளுக்கொரு கேள்வியோடு அமெரிக்க செனட்டர் சபை சுறுசுறுப்பாகிறது.

அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள், மீடியா என பலரும் அவரைச் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள். கேள்விகளை எதிர்கொள்வதற்குமுன் தண்ணீர் பாட்டிலை திறந்து ஒரு மடக்கு குடித்துவிட்டு, மார்க் தயாராகிறார். இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் நிலைமை வேறு. சர்ச்சை வந்தால், பலிகடாவாக நேர்ந்து கொடுப்பதற்காகவே யாரையாவது ஒருவரை தலைமைப்பொறுப்பில் வைத்திருப்பார்கள். இல்லாவிட்டால், ஃபிளைட் பிடித்து வேறு எங்கேயோவது போய் தலைறைவாகியிருப்பார்கள். அது அமெரிக்கா! ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாவால் அமெரிக்கக் குடிமக்களின் பிரைவஸி கேள்விக்குறியாகிறது, இதுவொரு பெரிய ஆபத்து என்று கவலையோடு ஆரம்பித்தார் ஒரு செனட்டர். சட்டென்று இடைமறித்த மார்க், நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார். ‘நடந்திருப்பது பெரிய தவறு. எங்களுடைய பொறுப்புகளைப் புரிந்துகொள்ள தவறிவிட்டோம். தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி எது நடந்தாலும் நானே பொறுப்பு’ என்றார். ஒரு நிறுவனத்தை படிப்படியாகக் கட்டமைத்திருக்கிறோம். ஒரு சில சறுக்கல்கள் இருக்கலாம். ஆனால், விரைவில் சரிசெய்து விடுகிறோம் என்று நம்பிக்கையுடன் பேசினார், மார்க்.

செனட்டர் விடவில்லை. ‘ஃபேஸ்புக் பயனாளிகளிடமிருந்து எதையும் பெறாமல், முற்றிலும் இலவசமாக ஒரு சேவையை எப்படித் தரமுடிகிறது?’ என்றார். நியாயமான கேள்வி! ‘எங்களுக்கான வருவாய், விளம்பரங்களின் மூலமாகக் கிடைக்கிறது’ என்று சொல்லிவிட்டு, மெலிதான ஒரு புன்னகையை உதிர்க்கிறார் மார்க். ஒரு சில விநாடிகள் மார்க்கை உற்று நோக்கும் செனட்டர், சரி என்றபடி அடுத்த கேள்விக்கு நகர்கிறார்.

இதுதான் யதார்த்தம்! எந்தவொரு இலவச சேவைக்கும் பின்னால் ஏராளமான பூதங்கள் ஒளிந்திருக்கின்றன. ஒரு விஷயத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ள நாம் தயார் என்றால், இலவசமாக இழந்துவிடவும் தயாராக இருக்க வேண்டும். ஃபேஸ்புக் போன்று இணையத்தில் கடைவிரிக்கும் நிறுவனங்களிடம் நாம் பறிகொடுத்திருப்பது, விலைமதிப்பில்லாத பிரைவஸி. அவற்றையெல்லாம் நாம் மதிப்பிடுவதில்லை. முக்கியத்துவம் கொடுத்ததில்லை. நம்முடைய ஆசைகள், விருப்பங்கள், வெறுப்புகள், சுகம், துக்கம்.. அனைத்தையும் நெருங்கியவர்களிடம் பகிர்ந்திருக்கிறோம். இப்போது, முகம் தெரியாத மனிதர்களிடமும் அதை பகிர்கிறோம். ஆபத்து, அங்குதான் ஆரம்பமாகிறது.

தெரியட்டுமே.. தாராளமாக தெரியட்டும்.. என்ன, குடியா மூழ்கிப்போய்விட்டது? எதைப்பற்றியும் கவலைப்படாமல், நம்மைப் பற்றி தினமும் ஏதாவது ஒன்றை பொதுவெளியில் ஷேர் செய்துகொண்டிருந்தோம். உலகம் முழுவதும் பிக் பாஸ் பலர் உண்டு. அடுத்தவர்களைக் கண்காணிப்பதுதான் அவர்களுடைய பொழுதுபோக்கு. நமக்கோ, நிற்கவே நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு சிலர் புரிந்துகொண்டார்கள். எல்லோரும் கவனிக்கிறார்கள், ஆராதிக்கிறார்கள் என்பது தெரியவந்ததும், உள்ளிருக்கும் மிருகம் விழித்துக்கொண்டது. மாங்காய் ஊறுகாயோடு பழைய சாதம் சாப்பிட்டாலும், கே.எப்.சி.யில் ஒரு டபுள் டிரிபிள் பர்கர் சாப்பிட்டதாக ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்டு கதைக்க ஆரம்பித்தோம். அதையும் உண்மையென்று உலகம் நம்பியது. உண்மை தெரிந்தவர்களோ, நம்முடைய பழைய ஸ்டேட்டஸை தோண்டிப் பார்த்து, எல்லாவற்றையும் சந்தேகிக்க ஆரம்பித்தார்கள்.

யார் நம்பினார்களோ இல்லையோ, ஃபேஸ்புக்கும் கூகுளும் நம்மை நம்ப ஆரம்பித்தார்கள். 500 ரூபாய்க்கு டிரிபிள் ட்ரிட் வாங்கிக்கொள்ளுமாறு கே.எப்.சி. விளம்பரங்கள் கண்ணில் பட ஆரம்பித்தன. ஏன் திடீரென்று பர்கர் விளம்பரங்கள் துரத்துகின்றன என்று நாம் கவனித்ததில்லை. அலட்சியப்படுத்திவிட்டு கடந்துவிடுகிறோம். ஆனால், ஆசைப்பட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் பலர் உண்டு. இதுதான் ஃபேஸ்புக் மற்றும் அவற்றை சார்ந்திருப்பவர்களின் பலம். நம்முடைய பலவீனம்!

சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், நம்பர் ஒன் என்பதில் சந்தேகமில்லை. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்னும் நிறுவனத்தால், 5 கோடி தனி நபர்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளியே கசிந்துவிட்டதாக சமீபத்தில் பெரிய பரபரப்பு எழுந்தது. உலகளவில் இதுவொரு ஊழல் விவகாரமாக சித்தரிக்கப்பட்டதால், ஃபேஸ்புக் நிறுவனத்துக்குப் பேரிழப்பு. அமெரிக்க பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் மதிப்பு சட்டென்று சரிந்து, ஆறரை லட்சம் கோடி டாலர்களை விழுங்கிவிட்டது. ஃபேஸ்புக் போன்று வாடிக்கையாளர்களின் தகவல்களைக் ‘கவரும்’ வாய்ப்புள்ள தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உலகம் முழுவதும் உண்டு.

‘நேற்றிரவு நீங்கள் தங்கிய ஹோட்டலின் பெயர் ஞாபகமிருக்கிறதா?’ என்று கேட்கிறார் ஒரு செனட்டர். இல்லை என்கிறார் மார்க். ‘கடந்த வாரம் நீங்கள் யாருக்காவது மெசேஜ் அனுப்பினீர்களா? அது பற்றிய விவரங்களை எங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியுமா?’ என்கிறார் செனட்டர். இல்லை, எனக்கு நினைவில் இல்லை. யாரை தொடர்பு கொண்டேன் என்பதையும் வெளிப்படையாகச் சொல்ல இயலாது’ என்கிறார் மார்க். ‘ரொம்ப சரி, அதுதான் நாம் இங்கே விவாதிக்க வேண்டிய விஷயம். உங்களது பிரைவஸி என்பது நவீன அமரிக்கா உங்களுக்கு அளித்திருக்கும் பிரத்யேக உரிமை. அதை நீங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள நினைப்பது சரியானதுதான். உலகெங்கும் உள்ள மக்களுடன் தொடர்புகொள்கிறோம் என்பதற்காக, நம்முடைய உரிமையை விட்டுக்கொடுப்பது நியாயமில்லை’ என்றார் செனட்டர்.

செனட்டர்களில் பெரும்பாலானவர்களுக்கு தொழில்நுட்பம் தெரியாது. அதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களது கவலைகளும் வருத்தங்களும் வேறு ரகம். தொழில்நுட்ப வளர்ச்சிகளெல்லாம் நம்முடைய கவலைகளைத் தீர்த்துவிடும் என்றால், யாரும் கவலைப்படவே தேவையில்லை. ஆனால், தொழில்நுட்பம் ஏராளமான புதிய பிரச்னைகளைக் கொண்டுவருகிறது. அது சாமானியர்களின் வாழ்க்கையில் தடுமாற்றங்களை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியலில், ஃபேஸ்புக்கில் படம் வெளியானதால் உயிரை மாய்த்தவர்கள் அதிகம் என்பதை சொல்லவே தேவையில்லை.

செனட்டர் சபை, சாமானியர்களின் பிரதிநிதியாகக் குரல் எழுப்புகிறது. அதை ஃபேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டாக வேண்டும். ‘கேம்பிரிட்ஸ் அனாலிட்டிகா, எங்களுடைய விளம்பரதாரர். எங்களது டேட்டாவை நாங்கள் விற்கவில்லை. விளம்பரதராரர்களுக்கு என்ன வேண்டுமோ, யாரை தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை அனுமதிக்கிறோம்’ என்கிறார் மார்க்.

ஆம். நாங்கள் பெட்டிக்கடை வைத்திருக்கிறோம். ஆனால் வியாபாரம் செய்வதில்லை. தேவைப்படுபவர்கள் எங்களுடைய கல்லாப் பெட்டியில் காசை வைத்துவிட்டு, கடையில் இருப்பதை எடுத்துச்செல்லலாம் என்று சொல்வதுபோல், ஒரு வித்தியாசமான வியாபாரம்! அதனால்தான் பேஸ்புக்கை, ஃபேக்புக் என்கிறார்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com