2. உடல் வெப்பநிலையை எப்படி அளப்பது?

உடல் வெப்பநிலை லேசாகக் கூடினாலோ, குறைந்தாலோ, காய்ச்சல் இருக்கிறது என்றோ, காய்ச்சல் இல்லை என்றோ உறுதியாகச் சொல்ல முடியாது. மேலும், தொட்டுப் பார்ப்பவரின் உடல் வெப்பநிலையைப் பொறுத்தும் இது மாறுபடும்.

நமது உடல் சாதாரண வெப்பநிலையில் இருக்கிறதா, இல்லை அதிகமாக இருக்கிறது, இல்லை குறைவாக இருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

நாம் பொதுவாக, உடலுக்கு முடியாதவர்களை தொட்டுப் பார்த்து, உடல் சூடாக இருந்தால், காய்ச்சல் இருக்கிறது என்று சொல்லலாம். உடல் குளிர்ந்துபோய் இருந்தால், சாதாரண உடல் வெப்பநிலையில் இருந்து குறைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், அது எவ்வளவு தூரம் மருத்துவ ரீதியாகச் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

உடல் சூடு அதிகமாக இருந்தால், உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கிறது என்றும், உடல் குளிர்ந்துபோய் இருந்தால், உடல் வெப்பநிலை குறைவாக இருக்கிறது என்றும் நம் அனுபவத்தில் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால், உடல் வெப்பநிலை லேசாகக் கூடினாலோ, குறைந்தாலோ, காய்ச்சல் இருக்கிறது என்றோ, காய்ச்சல் இல்லை என்றோ நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. மேலும், தொட்டுப் பார்ப்பவரின் உடல் வெப்பநிலையைப் பொறுத்தும் இது மாறுபடும்.

எனவே, உடல் வெப்பநிலை துல்லியமாக அளக்கப்பட வேண்டும். அப்போதுதான், உடல் வெப்பநிலை எவ்வளவு கூடியிருக்கிறது, எவ்வளவு குறைந்திருக்கிறது என்பது உறுதியாகச் சொல்ல முடியும். இப்படி, உடல் வெப்பநிலையை அறிவதற்கும், அளவிடுவதற்கும் நமக்குப் பயன்படும் கருவிதான் உடல் வெப்பமானி. இது பற்றித் தெரிந்துகொள்வோம்.

ஆரம்பகாலத்தில் உடல் வெப்பமானிகள்

காற்று, சூடுபடுத்தினால் விரிவடையும், குளிரச் செய்தால் சுருங்கும் என்பது அறிவியல்கூறு. இந்தப் புரிதலுக்குப் பிறகுதான் வெப்பத்தை அளவிட அறிஞர்கள் முயன்றார்கள். ஆக, ‘வெப்பமானி’ என்ற ஒரு கருவியை ஒரே ஒருவர் மட்டும்தான் கண்டுபிடித்தார் என்று சொல்ல முடியாது. பல அறிஞர்களின் முயற்சியாலும், ஆராய்ச்சிகளாலும் உருவானது என்றுதான் சொல்லமுடியும்.

முதலில் காற்றை கண்ணாடிக் குழாயில் அடைத்து, அதில் நீரை நிரப்பி ஆராய்ந்தனர். வெப்பநிலைக்கேற்ப காற்று விரிவடைவதற்கும், சுருங்கவும் செய்ய அதற்கேற்றார்போல் நீர்நிலையில் மாற்றம் வருவதைக் கண்டனர். கலீலியோ கலீலி, இந்த வகையில் ஆரம்பக் கட்டத்தில் முன்முயற்சிகளை மேற்கொண்டார்.

அதன்பிறகு தண்ணீருக்குப் பதிலாக ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு, 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை ‘தெர்மோஸ்கோப்’ என்று அழைக்கப்பட்டன.

டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட்

டச்சு விஞ்ஞானியான டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் (Daniel Gabriel Fahrenheit) என்பவர்தான், பாதரசத்தைப் பயன்படுத்தி முதல் வெப்பமானியான தெர்மோமீட்டரை உருவாக்கினார். பாதரசத்தின் வெப்பத்தால் விரிவடையும் தன்மையைப் பயன்படுத்தி இந்த வெப்பமானி உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, ஆண்டெர்ஸ் செல்சியஸ் என்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர், நீரின் உறைநிலை மற்றும் கொதிநிலை அடிப்படையில் ஒரு வெப்பமானியை உருவாக்கினார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவரின் உடல் வெப்பநிலையைக் கண்டறிய வெப்பமானியைப் பயன்படுத்திய முதல் முருத்துவர், டச்சு நாட்டைச் சேர்ந்த ஹெர்மன் போஹேஹேவே.

பல்வேறு வகையான வெப்பமானிகள்

பாதரச வெப்பமானி: டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் உருவாக்கிய பாதரச வெப்பமானிதான் இன்றும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில், ஃபாரன்ஹீட் மற்றும் செல்ஷியஸ் என்ற இரண்டு வகையான அளவுகளையும் அறிந்துகொள்ளலாம்.

நெற்றியில் வைத்துப் பார்க்கும் பட்டை: குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் உடல் வெப்பநிலையை அறிய அவர்களது நெற்றியில் வைத்துப் பார்க்கும் வகையில் பட்டை போன்ற வெப்பமானியை மருத்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பட்டையில், வெப்பத்தை உணரும் சென்சார் இருப்பதால், அதில் ஏற்படும் நிற மாற்றத்தைக் கொண்டு அதற்கேற்ப உடல் வெப்பநிலையை அறிந்துகொள்ளலாம்.

டிஜிட்டல் தெர்மோமீட்டர்: நவீன கண்டுபிடிப்பான டிஜிட்டல் தெர்மோமீட்டர் கருவியும் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இக் கருவி மூலம், உடல் வெப்பநிலை எவ்வளவு என்பதை டிஜிட்டல் திரையில் எண்களாகப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இது பெரும்பாலும், ஃபாரன்ஹீட் அளவில்தான் உடல் வெப்பநிலையை அளவிட்டுக் காட்டும்.

அகச்சிவப்பு வெப்பமானி: நவீன யுகத்தின் தேவைக்கு ஏற்ப, உடலைத் தொடாமலேயே உடலின் வெப்பநிலையைக் கண்டறிவதற்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கருவி மூலம் அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு, ஒருவரின் உடல் வெப்பநிலையைத் தெரிந்துகொள்ளலாம். இவை பெரும்பாலும் விமான நிலையங்களில், பயணம் மேற்கொள்ள வருபவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளவும், வெளிநாட்டுப் பயணிகள் மூலம் பன்றிக் காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவாமல் தடுப்பதற்காகவும் பயன்படுகிறது.

அகச்சிவப்பு தெர்மோமீட்டரைத் தவிர, மற்ற வெப்பமானிகளை உடலில் எங்காவது வைத்துப் பார்த்துத்தான் உடல் வெப்பநிலையையும், காய்ச்சலையும் தெரிந்துகொள்ள முடியும்.

பட்டை போன்ற வெப்பமானியை நெற்றியில் வைத்தும், மற்ற வெப்பமானிகளை நாக்குக்கு அடியிலும், அக்குள் பகுதியிலும், மலத் துவாரத்திலும் வைத்து உடல் வெப்பநிலையைத் தெரிந்துகொள்ளலாம்.

அக்குள் பகுதியில் வைத்துப் பார்க்கும்போது தெரியும் வெப்பநிலை, வாயில் வைத்துப் பார்க்கும் அளவைவிட ஒரு டிகிரி ஃபாரன்ஹீட் குறைவாகவும், மலத் துவாரத்தில் வைத்துப் பார்க்கும்போது தெரியும் வெப்பநிலை, வாயில் வைத்துப் பார்க்கும் அளவைவிட ஒரு டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாகவும் இருக்கும்.

இப்படி, வெப்பமானிகளை வைத்து ஒருவரின் உடல் வெப்பநிலையை எப்படி அளப்பது என்று தெரிந்துகொண்டோம். அடுத்து, மனித உடல் வெப்பநிலை எப்படி சீராக காக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்வோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com