18. ஜிகா வைரஸ் காய்ச்சல்

பிறக்கும் குழந்தைகளின் தலை சிறிதாக இருக்கும் (Microcephaly).  இதன் காரணமாக, மூளையின் வளர்ச்சியும் குறைவாக இருக்கும். குழந்தையின் கண்களையும் இந்த வைரஸ் பாதிக்கலாம்.
18. ஜிகா வைரஸ் காய்ச்சல்

ஜிகா என்ற வைரஸ் பாதிப்பினாலும் காய்ச்சல் வரலாம். அதனால், இந்த வகைக் காய்ச்சலை ஜிகா காய்ச்சல் அல்லது ஜிகா வைரஸ் பாதிப்பு என்று அழைக்கிறார்கள்.

உலக அளவில் ஜிகா வைரஸின் பாதிப்பு

இந்த வைரஸ் பாதிப்பு முதன்முதலாக 1947-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் குரங்குகளிடம் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 1952-ம் ஆண்டில்தான் உகாண்டா மக்களும் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருந்தது தெரியவந்த்து.

அதன்பிறகு, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசிய நாடுகள் பலவற்றிலும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தது. 2007-ல் மைக்ரோநேசியா (Micronesia - Island of YAP) என்ற நாட்டிலும், 2013-ல் பிரெஞ்ச் பாலிநேசியா (French Polynesia) என்ற பகுதியிலும், 2015-ல் பிரேஸில் நாட்டிலும் இந்த வைரஸால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 86 நாடுகளில் இந்த வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு

இந்தியாவிலும் ஜிகா வைரஸின் பாதிப்பு 2017-ல் ஏற்பட்டது. முதலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும், தமிழகத்தில் கிருஷ்ணகிரியிலும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவில், பரவும் நிலையிலேயே இந்த வைரஸ் பாதிப்பு இருக்கிறது. ஜெய்ப்பூரில் ஏற்பட்ட ஜிகா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு, புகை அடிக்கப்பட்டு, 6000-க்கும் மேற்பட்ட வீடுகளில் பரிசோதனை செய்து, இந்த வைரஸ் பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எப்படி பரவுகிறது - ஏற்படுகிறது?

இந்த வைரஸை பரப்புவதும் ஏடீஸ் வகை பெண் கொசுக்கள்தான். அது மட்டுமல்லாமல், இவ்வகை வைரஸ் பாதிப்பு உடலுறவின் மூலமாகவும் பரவக்கூடியது. ரத்தம் செலுத்தும்போதும் இவ்வகை வைரஸ் பாதிப்பு ஏற்படலாம். கர்ப்பிணியிடம் இருந்து குழந்தைக்கும் இந்த வைரஸ் பரவலாம்.

வைரஸ் குறித்து..

இந்த வைரஸ் ஃப்ளாவி வைரஸ் (Flavi virus) வகையைச் சேர்ந்தது. இது சுமார் 40 நானோமீட்டர் அளவு கொண்டதாக இருக்கும். இது ஒரு ஆர்.என்.ஏ. வகை வைரஸ். 

பாதிப்பின் அறிகுறிகள்

இந்த ஜிகா வைரஸ் காய்ச்சல், கொசு கடித்த மூன்று நாள்களில் இருந்து 12 நாள்களுக்குன் ஏற்படும்.

பெரும்பாலான நோயாளிகளுக்கு தொந்தரவுகள் இருக்காது. அப்படி ஏற்பட்டாலும், அது பெரிய பாதிப்பாக நோயாளிகளுக்குத் தெரிவதில்லை.

சிலருக்கு லேசான காய்ச்சல் இருக்கலாம். குளிர், வியர்வை ஏற்படலாம். சிலருக்கு தோலில் தடிப்புகள் தென்படும். சிலருக்கு மூட்டு வலி ஏற்படலாம். தசைவலி, உடல் வலியும் ஏற்படலாம்.

சிலருக்கு, தலைவலி, குமட்டல், வாந்தி, கண் பகுதிகளில் வலி ஆகிய தொந்தரவுகளும் ஏற்படலாம். கண்கள் சிவந்து போகலாம். பலருக்கும் உடல் அசதி, சோர்வு, பசியின்மை ஆகிய தொந்தரவுகள் இருக்கும்.

இதுபோன்று ஏற்படும் தொந்தரவுகள் 2 முதல் 7 நாள்கள் வரை நீடிக்கலாம்.

பிறவியிலேயே ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால்..

கர்ப்பிணியை ஜிகா வைரஸ் பாதித்திருந்தால், ரத்தத்தின் மூலம் கருவில் வளரும் சிசுவும் பாதிக்கப்படும். அதனால், பிறக்கும் குழந்தை ஜிகா வைரஸ் பாதிப்புடனேயே பிறக்கும்.

அந்தக் குழந்தை பல்வேறு உடல் குறைபாடுகளுடன் இருக்கும். கை, கால், தசைகள் அசைக்க முடியாமல் விரைப்பாக இருக்கும். தசை பாதிப்பால் உடலை அசைக்க முடியாது. கண்களில் பாதிப்பு இருக்கும். காது கேட்காது. ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் குழந்தைகள் இவ்வாறு பாதிக்கப்படுவார்கள். (கர்ப்பிணிக்கு நோய் தாக்கிய அறிகுறி தெரியால்கூட இருந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளது).

எனவே, மேற்கூறிய குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்தால், அதுவும் இந்த வைரஸ் பாதிப்பு உள்ள இடங்களில் இருந்தால், இதற்கான பரிசோதனையை செய்து பார்க்க வேண்டும்.

வைரஸ் பாதிப்பும் - கர்ப்பிணிகளும்..

இந்தக் காய்ச்சல் ஏற்பட்ட கர்ப்பிணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தக் காய்ச்சல் அவர்களது கர்ப்பப்பையில் வளரும் சிசுவை பாதிக்கக்கூடும் என்பதால் மிகுந்த கவனம் தேவை. கர்ப்பிணியை வைரஸ் பாதித்தால் அவளது கருவும் நிச்சயம் பாதிக்கப்படும்.

பிறக்கும் குழந்தைகளின் தலை சிறிதாக இருக்கும் (Microcephaly).  இதன் காரணமாக, மூளையின் வளர்ச்சியும் குறைவாக இருக்கும். குழந்தையின் கண்களையும் இந்த வைரஸ் பாதிக்கலாம். இது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு இதயம் மற்றும் பிற உறுப்புகளிலும் பிறவிக் குறைபாடுகள் ஏற்படலாம்.

எனவே, இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட திருமணமான பெண்கள், கர்ப்பத்தைத் தள்ளிப்போடுவது நல்லது. மேலும், அவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பால் கருச்சிதைவு, குழந்தை தங்காமை, குறைப் பிரசவம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

நரம்பு - மூளை பாதிப்புகள்

மேற்கூறிய தொந்தரவுகள் மட்டுமல்லாமல், சிலருக்கு மூளை - நரம்பு பாதிப்புகளும் ஏற்படலாம் (Neuropathy - Myelitis). குறிப்பாக, இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒரு பகுதியினருக்கு நரம்பு தளர்வு பாதிப்பு (Guillain-Barre Syndrome) ஏற்படலாம்.

மேலும், மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் ஆகிய பகுதிகளும் (ADEM - Acute Disseminated Encephalomyelitis) இந்த வைரஸால் பாதிக்கப்படலாம்.

ஜிகா போன்ற பிற வைரஸ் காய்ச்சல்கள்

டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்றவையும் ஜிகா வைரஸ் காய்ச்சலைப் போன்றே இருக்கும். எனவே, ஜிகா வைரஸ் காய்ச்சலையும் பிற காய்ச்சல்களையும் வேறுபடுத்தி பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

ஜிகா வைரஸை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகள்

* நாட் பரிசோதனை (NAT)

ஜிகா வைரஸின் ஆர்.என்.ஏ.வை கண்டுபிடிக்கும் நியூக்ளிக் அமில பரிசோதனைதான் நாட் என்று அழைக்கப்படுகிறது (Nucleic Acid Testing - NAT). இதனை நோயாளியின் ரத்தத்திலும் சிறுநீரிலும் செய்யலாம்.

நோயாளிகளுக்கு தொந்தரவு ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே இத்தகைய பரிசோதனைகளைச் செய்து நோயைக் கண்டுபிடிக்கலாம்.

* எதிர்ப்பாற்றல் புரத பரிசோதனை (ZIKA VIRUS - IgM Serology)

இப் பரிசோதனையின் மூலமாகவும் இவ்வகை வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கலாம். இப் பரிசோதனையை ரத்தம், மற்றும் மூளை தண்டுவட நீரில் செய்ய முடியும்.

* கர்ப்பப்பையைச் சுற்றியுள்ள திரவத்தை எடுத்தும் (Amniocentesis) பரிசோதனை செய்து இந்த வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கலாம்.

* பி.சி.ஆர். பரிசோதனை (RT - PCR) - இப் பரிசோதனை மூலம் இந்த வைரஸ் பாதிப்பை உறுதி செய்யலாம்.

* பி.ஆர்.என்.டி. (PRNT - Plague Reduction Neutralization Testing) - இப் பரிசோதனையும் இந்த வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்தும். இதனை சாதாரண ஆய்வுக்கூடங்களில் செய்ய முடியாது. ஆராய்ச்சிக்கூட ஆய்வங்களில் மட்டுமே செய்ய முடியும்.

ஜிகா வைரஸ் காய்ச்சலுக்கான சிகிச்சைகள்

இந்த வைரஸ் காய்ச்சலுக்கான தனிப்பட்ட விசேஷ மருந்துகள் ஏதும் இல்லை. அதாவது, இந்த வைரஸுக்கு எதிராகச் செயல்பட்டு, இந்த வைரஸ் அழிப்பதற்கோ அல்லது அதைச் செயல்படாமல் தடுக்கவோ அல்லது அவற்றின் பெருக்கத்தைக் குறைக்கவோ மருந்துகள் இல்லை.

ஆக, இந்தக் காய்ச்சலுக்கும் பொதுவான சிகிச்சை முறைகளே உள்ளன.

உடல்வலி, காய்ச்சலை குறைப்பதற்காக பாராசிட்டமால் மருந்துகள் உதவும். முதலில், நோயாளிகள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். பழ ரசங்கள், சூடான பானங்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஜிகா வராமல் தடுப்பது எப்படி?

இந்த வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான தடுப்பூசிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கொசுக்களை ஒழிப்பதும், வீட்டையும் வாழிடங்களைச் சுற்றிலும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுதான் ஜிகா வைரஸ் பாதிப்பு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளாகும்.

குறிப்பாக, குழந்தைகளும் கர்ப்பிணிகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களை கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com