15. டெங்கு காய்ச்சல் 6 - டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் - சிகிச்சைகள்

டெங்கு காய்ச்சலைத் தடுக்க தடுப்பூசிகள் தற்சமயம் இல்லை. எனவே, டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும், தவிர்க்கவும், தவிக்காமல் இருக்கவும் ஒரே வழி கொசு ஒழிப்புதான்.
15. டெங்கு காய்ச்சல் 6 - டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் - சிகிச்சைகள்

முந்தைய பகுதிகளில், பல்வேறு தொந்தரவுகள் மூலம் ஒருவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் டெங்குவாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுவிடும் என்று பார்த்தோம். இருந்தாலும், ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் என்பது முக்கிமில்லையா? இந்தப் பரிசோதனைகள் மூலமாகத்தான், ஏற்பட்ட காய்ச்சல் ‘டெங்கு’ என அறுதியிட்டுக் கூற முடியும்.

ஆய்வுக்கூடப் பரிசோதனைகள்

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறைய ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் இருக்கின்றன. அவற்றை இப்போது பார்ப்போம்.

  1. அணுக்களின் பரிசோதனை - இதில், இவர்களுக்கு வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
  2. ரத்தச் சிவப்பணுக்களின் அளவீடு – பொதுவாக இது ஆண்களுக்கு 45 முதல் 52 சதவீதமாகவும், பெண்களுக்கு 37 முதல் 48 சதவீதமாகவும் இருக்கும்.
  3. கல்லீரல் நொதிகளின் அளவுகள் - டெங்குவால் கல்லீரலும் பாதிக்கப்படுவதால், பல்வேறு கல்லீரல் நொதிகளின் அளவுகள் அதிகரிக்கும். (AST / ALT; Gamma-GT).
  4. டெங்கு ஆன்டிஜின் பரிசோதனை – டெங்கு ஏற்பட்ட, அதாவது காய்ச்சல் ஏற்பட்ட முதல் நாளில் இருந்தே டெங்குவின் ஆன்டிஜின் பரிசோதனை (NSI - Antigen) டெங்கு ஏற்பட்டிருப்பதை மெய்ப்படுத்தும். இதனை எலீசா முறையில் செய்வார்கள்.
  5. டெங்கு எதிர்ப்பாற்றல் புரதங்களின் அளவுகள் – டெங்கு வைரஸ் இனங்களுக்கு எதிராக உருவான பல்வேறு எதிர்ப்பாற்றல் புரதங்களும் அதிகரிக்கும். முதலில் இவர்களுக்கு IgM–antibodies (Dengue) அதிகரிக்கும். இந்த எதிர்ப்பாற்றல் புரதம், காய்ச்சல் ஏற்பட்ட ஐந்தாவது நாளில் தொடங்கி அதிகரிக்க ஆரம்பிக்கும். இதன் அதிகரிப்பு 90 நாள்கள் வரைகூட நீடித்திருக்கும்.
  6. அதேபோல், IgG-antibodies (Dengue) பரிசோதனையிலும் டெங்குவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் உருவாகியிருக்கும். இவ்வகை எதிர்ப்பாற்றல் புரதம் அதிகரித்திருந்தால், இது ஏற்கெனவே அந்த நபருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும்.
  7. பி.சி.ஆர். பரிசோதனை – டெங்கு வைரஸ்தான் என உறுதியாகச் சொல்ல, மிகவும் நுட்பமான தொழில்நுட்பத்துடன் கூடிய பி.சி.ஆர். (RT - PCR) பரிசோதனையை செய்வார்கள்.

மேற்கண்ட பரிசோதனைகள் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்தும்.

பிற முக்கியமான பரிசோதனைகள்

அதேநேரம், இந்த வைரஸால் ஏற்பட்ட பிற உடல் பாதிப்புகளை அறிய, வேறு சில பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். நெஞ்சுப் பகுதி எக்ஸ்ரே, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதி ஸ்கேன் பரிசோதனை நீர் தேங்கியிருக்கிறதா, கல்லீரல் / பிற உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனவா என அறிய உதவும். ரத்தக்கசிவு போன்ற பாதிப்பு இருந்தால், ரத்தக்கசிவு நேரம், உறை நேரம் போன்ற பரிசோதனைகளுடன், ரத்த உறை பொருள்களின் நிலை அறியும் பரிசோதனையையும் செய்ய வேண்டும்.

மூளைக்காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், மூளை – தலைப்பகுதி ஸ்கேன் பரிசோதனை, மூளையைச் சுற்றியுள்ள, தண்டுவடத்தைச் சுற்றியுள்ள நீரை எடுத்துப் பரிசோதனை செய்யவேண்டி இருக்கும்.

மேலும், காய்ச்சலின் தன்மையையும் நோயின் தாக்கத்தையும் அறிய, தினமும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்தச் சிவப்பணுக்களின் அளவீடு (HCT) ஆகியவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும். ரத்தக் கசிவால் ரத்தம் குறைந்தால், ஹீமோகுளோபின் அளவு பார்க்க வேண்டும். என்ன வகை ரத்தப் பிரிவு என்று கண்டறிய வேண்டும். அப்போதுதானே ரத்தம் தேவைப்பட்டால் செலுத்த இயலும்!

சிகிச்சைகள்

ஓய்வு அவசியம் – டெங்கு என சந்தேகிக்கும் எந்த நோயாளியையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

வைரஸ் மருந்துகள் இல்லை – டெங்கு வைரஸை அழிப்பதற்கான / எதிராகச் செயல்படக்கூடிய வைரஸ் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தொந்தரவு – அறிகுறிகளை குறைக்கும் மருந்துகள் – எனவே, காய்ச்சலைக் குறைப்பதற்கான பொது மருந்துகளையும், பாரசிட்டமால் (paracetamol) போன்ற மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும். வாந்தி, குமட்டல், வயிற்றோட்டம், உடல் வலி போன்ற தொந்தரவுக்கான மருந்துகளும் தரப்பட வேண்டும்.

சிகிச்சையின்போது கவனம்..

நோயாளிகள் தாங்களாகவே ஆஸ்பிரின் (Aspirin), இபூபுரோஃபென் (Ibuprofen) போன்ற மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. இவை ரத்தக் கசிவை அதிகரிக்கும். எனவே, எச்சரிக்கை தேவை.

தேவைக்கு ஏற்ப, நோயாளிக்கு குளுக்கோஸ் மற்றும் பிற திரவ மருந்துகள் செலுத்தப்படும். ரத்தக் கசிவு மிகுதியாக இருந்தால் (ரத்தச் சிவப்பணு அளவீடு குறைந்துவிடும்), ரத்தம் செலுத்த வேண்டியது வரும்.

தகட்டணுக்கள் மிகவும் குறைந்தால், தகட்டணுக்கள், பிளாஸ்மா ஆகியவற்றை செலுத்த வேண்டியது வரும். அதிக வாந்தி, வயிற்றோட்டம் ஆகிய காரணங்களால் ரத்தச் சிவப்பணு அளவீடு அதிகரித்திருந்தால், அவர்களுக்கு பல்வேறு திரவ மருந்துகளை (crystalloid solution) சிரைக் குழாய்களின் வழியே செலுத்த வேண்டியது வரும். அதனை, மருத்துவர்களின் கண்காணிப்பில் மருத்துவமனையில் நோயாளியை அனுமதித்தே செய்ய இயலும்.

இத்துடன் நிலவேம்புக் குடிநீர், காட்டு நிலவேம்புச் சாறு, பப்பாளிச் சாறு ஆகியவை, நோயாளியின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க அரசாங்க மருத்துவமனைகளில் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன.

ஆக, டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில், தொந்தரவுகளைக் குறைப்பதற்கான சிகிச்சைகள் (symptomatic treatment) மற்றும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிகிச்சைகள் (supportive treatment) என்ற இரண்டையும் அடிப்படையாகக் கொண்டே சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

தவிர்ப்பது – தடுப்பது எப்படி?

டெங்கு காய்ச்சலைத் தடுக்க தடுப்பூசிகள் தற்சமயம் இல்லை. எனவே, டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும், தவிர்க்கவும், தவிக்காமல் இருக்கவும் ஒரே வழி கொசு ஒழிப்புதான்.

கொசு ஒழிப்பு என்றால் அது அரசாங்கத்தின் வேலை என்று இருந்துவிடக் கூடாது / முடியாது. இதற்கு நம் ஒவ்வொருவரின் முயற்சியும், உழைப்பும், ஒத்துழைப்பும் அவசியம். அது குறித்து பிற வைரஸ் காய்ச்சல்கள் குறித்துப் பார்த்துவிட்டு பின்னர் பார்க்கலாம்.

அடுத்து, சிக்குன்குனியா காய்ச்சல் பற்றிப் பார்ப்போம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com