10. டெங்கு காய்ச்சல்

இந்தக் காய்ச்சல் மிகுதியான தசைவலியையும், மூட்டு வலியையும் ஏற்படுத்துவதால், இது எலும்பை நொறுக்கும் காய்ச்சல் (Breakbon Fever) என்று குறிப்பிடப்படுகிறது.

சமீபத்தில் இந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, சில பல உயிர்களையும் பறித்த நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து கடந்த வாரங்களில் தெரிந்துகொண்டோம்.

மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் கேரளாவில் இருந்து, அண்டை மாநிலமான தமிழகத்தைத் தவிர்த்து வேறு மாநிலங்களுக்கு இந்த நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கப்பட்டு, மக்கள் பாதிக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய சம்பவம். கேரளத்துக்கு அண்டை மாநிலமான தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று அரசே அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், பல ஆண்டுகளாக மக்களைப் பெரிதும் பயமுறுத்தி வரும் காய்ச்சல் என்றால் அது டெங்கு காய்ச்சல்தான். அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

டெங்கு கடந்து வந்த பாதை..

இந்தக் காய்ச்சல், சீனாவில் பழங்காலத்திலேயே (கி.பி. 265 - 420) ஏற்பட்டதற்கான குறிப்புகள் கிடைத்தபோதும், முதன்முறையாக இந்தக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது 1789-ம் ஆண்டில்தான்.

பெஞ்சமின் ரஷ் என்ற அறிஞர்தான், இந்தக் காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்தியதுடன், இந்தக் காய்ச்சல் மிகுதியான தசைவலியையும், மூட்டு வலியையும் ஏற்படுத்துவதால், இதை எலும்பை நொறுக்கும் காய்ச்சல் (Breakbon Fever) என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தக் காய்ச்சல் குறித்து முதன்முதலாக விரிவாக விளக்கியவரும் இவர்தான்.

பெஞ்சமின் ரஷ்

இந்தக் காய்ச்சல் தீய ஆவியினால்தான் பரவியது என்று நம்பியவர்களும் உண்டு. இந்தக் காய்ச்சல் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டபோதும்,  1828-ம் ஆண்டிலிருந்து டெங்கு காய்ச்சல் என்ற பெயரே உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறிப்பிடப்படுகிறது.

1906-ம் ஆண்டில்தான், ஏடிஸ் வகைக் கொசுக்களால் இந்தக் காய்ச்சல் பரவுகிறது என்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு 1907-ல்தான், இந்த ஏடிஸ் கொசுக்கள் ஒருவகை வைரஸை பரப்புவதால்தான் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது என்பது தெரிய வந்தது.

1950-ம் ஆண்டில், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் கண்டறியப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பயனாக, இந்த வைரஸ் குறித்தும், அது எவ்வாறு ஏடிஸ் வகைக் கொசுக்களால் மனிதர்களுக்குப் பரவி நோயை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் விரிவாகத் தெரியவந்தது.

ஏடிஸ் வகைக் கொசுக்கள் டெங்கு வைரஸை மட்டுமல்லாமல், வேறு பல வைரஸ் வகைகளையும் பரப்புகின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அது குறித்து பிறகு பார்ப்போம்.

எந்தெந்த நாடுகளில் டெங்கு பரவியுள்ளது?

டெங்கு காய்ச்சல் கிட்டத்தட்ட 128 நாடுகளில் பரவியுள்ளது. இதனால், இதுவரை 3.9 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 100 நாடுகளில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து (Endemic) இருந்துகொண்டே இருக்கிறது. இதில் இந்தியாவும் ஒன்று. மேலும், பல தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகள், மேற்கு பசிபிக் நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய 100 நாடுகளில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து இருக்கிறது என்றால், அங்கு தொடர்ந்து ஏடிஸ் வகைக் கொசுக்கள் ஒழிக்கப்படாமல் இருக்கிறது என்பதுதான் அதன் பொருள். உலகம் முழுவதும், ஆண்டுதோறும் 50 முதல் 100 மில்லியன் ( 5 கோடி - 10 கோடி) மக்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதில், 5 லட்சம் பேருக்கு டெங்கு ரத்தக் கசிவு பாதிப்பு ஏற்படுகிறது. சுமார் 22 ஆயிரம் பேர் இறந்துபோகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் என்பது வருந்தம் தரக்கூடிய செய்தி.

இந்தியாவில் டெங்கு காய்ச்சல்

இந்தியாவில், 1945-ம் ஆண்டில்தான் டெங்கு வைரஸை பிரித்தெடுத்தார்கள். இந்தியாவில் முதன்முறையாக, 1956-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள வேலூரில்தான் டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது. 1963-ல் கொல்கத்தாவில் முதன்முறையாக டெங்கு ரத்தக்கசிவு நோய் கண்டறியப்பட்டது.

கடந்த 20 வருடங்களில், நமது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சத் தீவுகள் மட்டும் அபூர்வமாக இதற்கு விதிவிலக்கு.

இந்தியாவில் ஜூலை முதல் நவம்பர் வரையிலான மழைக்காலத்தில்தான் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அதிக பாதிப்புகளைத் தருகிறது. மற்ற காலங்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.

உலக நாடுகளில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது எப்படி?

கடந்த 20 ஆண்டுகளாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு, பருவநிலை மாற்றங்களும், மக்கள் தொகைப் பெருக்கமும், நகர்ப்புற வளர்ச்சியும், கழிவுநீரை வெளியேற்றுவதில் உள்ள சிக்கல்களும், அதிகரித்துவிட்ட வான்வழிப் பயணங்களும், கொசுக்கள் ஒழிக்கப்படாததும் முக்கியக் காரணங்களாக உள்ளன.

ஏடிஸ் வகைக் கொசுக்கள் என்று சொல்கிறார்களே, அது என்ன வகை கொசுக்கள், எங்கிருந்து வந்தன, வைரஸ் எப்படி தன் உடம்பில் வைத்துக்கொண்டு மனிதர்களுக்குப் பரப்புகின்றன என்பதையெல்லாம் அடுத்த வரும் பகுதிகளில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com