7. காய்ச்சலின்போது உடலில் நடைபெறும் வினைகள் - மாற்றங்கள் என்னென்ன?

பாரசிட்டமால் என்பது தாற்காலிக நிவாரணிதான். மருத்துவரிடம் செல்லாமல், காய்ச்சலுக்கான உண்மையான காரணத்தை கண்டறியாமல், அந்த மருந்தையே தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருக்கக் கூடாது.

காய்ச்சல் எந்தெந்த விதமாக உடலில் தோன்றுகிறது என்றும், அது வருவதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் தெரிந்துகொண்டோம். அடுத்து, காய்ச்சல் வரும்போது உடலில் நடைபெறும் பல்வேறு உடல் மாறுதல்கள் (Pathophysiology) குறித்து தெரிந்துகொள்வோம்.

நம்முடைய உடல் வெப்பநிலை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை எனப் பார்த்தோம் இல்லையா?

அதாவது, காலையில் சற்று குறைவாகவும், மாலையில் சிறிது அதிகமாகவும் உடல் வெப்பநிலை இருக்கும். இந்த வேறுபாடு 0.6 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும்.

நமது உடலில் வெப்பம் ஏற்படுவதும், அது தணிக்கப்படுவதும் தொடந்து நடைபெற்று வரும் ஒரு செயல்.

வெப்பத்தை உருவாக்குவது நமது உடல் தசைகள்தான். கல்லீரலாலும் வெப்பம் உண்டாகிறது. ஏனெனில், இங்குதான் வளர்சிதை மாற்றங்கள் நடைபெறுகின்றன.

தோலுக்குச் செல்லும் ரத்தநாளங்கள் விரிவடைவதாலும், வியர்வையாலும் உடலின் வெப்பநிலை தணிக்கப்படுகிறது.

இப்படி, வெப்பம் உருவாவதற்கும், அது தணிக்கப்படுவதற்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்பு இருப்பதால், உடலின் வெப்பநிலை சீராக வைக்கப்படுகிறது.

உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளும் பணியை மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் என்ற பகுதியில் உள்ள ‘வெப்பநிலை சீரமைக்கும் மையம்’ செய்யும். இதனால், உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸ் முதல் 38 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்குமாறு இந்த மையம் பார்த்துக்கொள்ளும்.

ஆனால், காய்ச்சலை ஏற்படுத்தும் தொற்றுநோய்களாலோ அல்லது பிற காரணங்களாலோ, மூளையில் உள்ள இந்த மையத்தின் சீரமைக்கும் தன்மையையும் தாண்டி உடலின் வெப்பநிலை போய்விடும். அப்போது காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் ஏற்பட்ட உடனே ரத்தநாளங்கள் சுருங்குவதால் காய்ச்சலால் அதிகரித்த வெப்பத்தை உடலே தணித்துக்கொள்ளும். ஆனால், காய்ச்சலால் குளிர், நடுக்கம் போன்றவை ஏற்படுவதால், உடல் வெப்பநிலை அதிகரிக்கும்.

இப்படி காய்ச்சல் ஏற்படும்போது, அதற்குக் காரணமாக இருக்கும் பொருள்களை காய்ச்சலுக்கான காரணிகள் (Pyrogens) என்று சொல்கிறோம். இது, நுண்கிருமியாகவோ, மருந்தாகவோ அல்லது இவை உடலில் ஏற்படுத்தும் பிற நச்சுப் பொருள்களாகவோ இருக்கலாம்.

இவையெல்லாம் வெளியில் இருந்து வந்து காய்ச்சலை ஏற்படுத்துபவை (Exogenous Pyrogens).  இவை உடலுக்குள் நுழைந்து காய்ச்சலை ஏற்படுத்துவதுடன் சும்மா இருப்பதில்லை. உடலுக்குள்ளும் சில பொருள்களை தூண்டிவிட்டு காய்ச்சலை அதிகரிக்கச் செய்யும். அவற்றை, உடலின் உள்ளேயே காய்ச்சலை ஏற்படுத்தும் காரணிகள் (Endogenous Pyrogens) என்று சொல்கிறோம். இதில் இண்டர்லியூக்கின்-1 வகையைத் தொடர்ந்து, ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. (Interleukin-1, Tumor Necrosis Factor-alpha, TNF-alpha, IL-6, Cytokines, Prostaglandins-E2). இவையெல்லாம் செல்களில் உற்பத்தியாகி உடலின் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கின்றன.

காய்ச்சல் வந்தவுடன் பாரசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துகிறோம் இல்லையா?

அதைப் பயன்படுத்திய ஒரு சில மணி நேரத்தில் காய்ச்சல் குறைந்துவிடும். அது எந்த வகைக் கிருமியால் ஏற்பட்ட எந்த வகைக் காய்ச்சலாக இருந்தாலும் சரி. இதை நீங்கள் கண்கூடாகவே உங்கள் அனுபவத்திலேயே பார்த்திருக்கலாம். இவ்வாறு காய்ச்சல் குறையும்போது, நோயாளிக்கு உடல் முழுவதும் வியர்க்கும். உடல் வியர்வையால், போட்டிருந்த துணியே நன்றாக நனைந்துவிடும். இது எப்படி நிகழ்கிறது?

பாரசிட்டமால், காய்ச்சல் உருவாவதற்குக் காரணமாக ப்ராஸ்டாகிளாண்டின் (Prostaglandin) என்ற பொருளின் உற்பத்தியை ஹைப்போதலாமஸ் மையத்தில் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். இதன் செயல்பாட்டின் காரணமாக, தோல் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வியர்வையும் அதிகமாகும். வியர்வை ஆவியாகும்போது, உடலின் வெப்பநிலை குறையும். அதாவது காய்ச்சல் குறையும். ஆனால், இது தாற்காலிகமானதுதான்.

பாரசிட்டமாலின் செயல்பாடு குறைந்து அது உடலைவிட்டு வெளியேறிவிடும். இதன்காரணமாக, நோயாளிக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்படும். ஏனெனில், நாம் காய்ச்சலுக்கான காரணத்தை அறிந்து, அதற்கான சிகிச்சையை செய்யவில்லை.

உதாரணத்துக்கு, மலேரியா காய்ச்சல் என்றால், மலேரியா காய்ச்சலுக்கான மருந்தைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் காய்ச்சல் ஒரு முடிவுக்கு வரும். ஆக, பாரசிட்டமால் என்பது தாற்காலிக நிவாரணிதான் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். மருத்துவரிடம் செல்லாமல், காய்ச்சலுக்கான உண்மையான காரணத்தை கண்டறியாமல், அந்த மருந்தையே தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருக்கக் கூடாது.

அப்படிச் செய்தால், உடல் பாதிக்கப்படும். அப்போதுதான், காய்ச்சல் என்பது சிறிய பாதிப்பில் இருந்து பெரிய பாதிப்பாகி, அவசர சிகிச்சைக்கான காரணமாகி, உயிருக்கே ஆபத்தாகி… என அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டு உயிரையே காவு வாங்கிவிடும். எனவே, எச்சரிக்கை தேவை!

காய்ச்சல் வந்தால் அது ஏதோ உடல் வெப்பநிலை மட்டும் அதிகரிக்கிறது; அதைக் குறைத்தால் போதும் என்றுதான் மக்களில் பலர் நினைக்கிறார்கள். காய்ச்சல் என்பது உடல் வெப்பத்தை மட்டும் அதிகரிப்பதில்லை. அது, உடலின் வளர்சிதை மாற்றத்தையும் (BMR) பாதிக்கிறது. மேலும், உடலின் பல்வேறு உறுப்புகளையும் பாதிக்கிறது. காய்ச்சலுக்கு ஏற்ப, அது கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், ரத்தநாளம், மூளை, இதயம், ரத்த செல்கள் (அணுக்கள்), நரம்பு மண்டலம் என எதையும் பாதிக்கலாம். ஆபத்தை ஏற்படுத்திவிடலாம்.

எனவே, வள்ளுவர் சொன்னதுபோல,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என கண்டுபிடியுங்கள். அதற்குத்தான் மருத்துவர்கள் நாங்கள் இருக்கிறோம்; ஆய்வுக்கூடங்களும் உள்ளன. அதன்பிறகு, எந்த வகைக் காய்ச்சலோ அதற்கான முறையான மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். காய்ச்சலுக்கான கிருமியோ / காரணியோ நீக்கப்படும். காய்ச்சலும் குறையும்.

சரி, அடுத்து காய்ச்சலின் வகைகளைப் பார்ப்போம். நிறைய ‘கியூ’வில் இருக்கின்றன. வாருங்கள், ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com