4. காய்ச்சல் வந்தவுடன் நோயாளிகள் செய்வது என்ன?

டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்று ஏற்பட்டு சிலர் இறக்கும்போது மட்டுமே கிலி ஏற்படுகிறது. காய்ச்சலை ஒரு பெரிய விஷயமாகவோ, நோயாகவோ எடுத்துக்கொள்வதில்லை.

காய்ச்சல் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. காய்ச்சல் பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. இது குறித்து தெரிந்துகொள்வதற்கு முன், காய்ச்சல் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி தெரிந்துகொள்வது நல்லது.

ஏனென்றால், காய்ச்சல் குறித்து நம் மக்களிடையே பல்வேறு தவறான கருத்துகள் நிலவுகின்றன. காய்ச்சல் என்றால் இதுதான் என சிலர் தங்களது எண்ணத்திலேயே பச்சை குத்திக்கொண்டுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

மக்களில் பெரும்பாலோர், காய்ச்சல் வந்தால் அதைப் பெரிய நோயாகவோ பாதிப்பாகவோ கருதுவதில்லை. அது ஏதோ மூக்கடைப்பு, ஜலதோஷம் போல் நினைத்து, அருகில் இருக்கும் மருந்துக் கடைக்குப் போய் ஏதோ ஒரு மாத்திரையை வாங்கிப் போட்டு பிரச்னையை தீர்த்துக்கொள்ளத்தான் நினைப்பார்கள். அதன்பிறகே மருத்துவரிடம் வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. தற்போது, அரசு மருத்துவமனைக்கோ, அல்லது தனியார் மருத்துவமனைக்கோ செல்கிறார்கள்.

அரசு மருத்துவமனைக்குச் சென்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். இருந்தும், புறநோயாளிகள் பிரிவுக்குச் சென்று மருத்துவரிடம் ஆலோசித்து மருந்து வாங்கிச் செல்வார்கள். அங்கேயே சில அடிப்படையான ரத்த, சிறுநீர்ப் பரிசோதனைகள் உண்டு. அதையும் முடித்துக்கொண்டு செல்வார்கள். சிலர், காய்ச்சல் அதிகமாக இருந்தால் மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகிவிடுவார்கள். இதெல்லாம், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை.

ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு என்றே தனி புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுவிட்டது. காய்ச்சல் என்று வரும் நோயாளிகளை மட்டும் அங்கு பரிசோதிப்பார்கள். அதேபோல், காய்ச்சல் அதிகமாக இருக்கும் நோயாளிகளை அட்மிட் செய்து சிகிச்சை அளிக்க வசதியாக அவர்களுக்கென்றே தனியாக உள்நோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், தினமும் காய்ச்சல் பாதிப்பால் எத்தனை பேர் மருத்துவமனைக்கு வருகிறார்கள், அவர்களில் ஆண்கள் எவ்வளவு, பெண்கள் எவ்வளவு, சிறுவர்கள் எவ்வளவு, வருபவர்களின் வயது விவரம் என்ன என்பது போன்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

அத்துடன் இல்லாமல், காய்ச்சல் காரணமாக தினமும் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகள் எத்தனை பேர், அவர்களில் ஆண்கள் எவ்வளவு, பெண்கள் எவ்வளவு, சிறுவர்கள் எவ்வளவு, அவர்களின் வயது விவரம் என்ன, வந்தவர்களில் அதிகப் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் எத்தனை பேர், அவ்வாறு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு என்ன வகையான காய்ச்சல் இருக்கிறது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தினமும் சேகரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைக்காக மேலிடத்துக்கு அனுப்பப்படுகின்றன.

ஏனென்றால், ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வேகம் காரணமாக, ‘காய்ச்சல்’ என்பது ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆனால், மக்கள் இன்றும் காய்ச்சல் என்று வந்தால் அதிகம் அலட்டிக்கொள்ளாமல்தான் இருக்கிறார்கள். டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்று ஏற்பட்டு சிலர் இறக்கும்போது மட்டுமே அவர்களுக்குக் கிலி ஏற்படுகிறது. காய்ச்சலை அவர்கள் ஒரு பெரிய விஷயமாகவோ, நோயாகவோ எடுத்துக்கொள்வதில்லை.

இதேபோல், தனியார் மருத்துவமனை என்றாலும், தனி நபர் கிளினிக் என்றாலும், காய்ச்சல் இருந்தால் அதற்கான மருத்துகளை எழுதி வாங்கிச் செல்கின்றனர். கிராமத்தில் உள்ள பாமரன் முதல், சென்னை போன்ற பெருநகரங்களில் அதி நவீன வசதிகளுடன் வசிப்பவர்கள் வரை, அனைவருமே காய்ச்சல் குறித்து ஒத்த கருத்தையே கொண்டுள்ளனர் என்பதுதான், ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

தனியார் மருத்துவமனைக்கோ அல்லது தனி நபர் கிளினிக்குக்கோ வருபவர்கள், இரண்டு கேள்விகளுடன்தான் வருகிறார்கள். இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை.

முதலாவது, சார், நான் நாளைக்கு வேலைக்குப் போகணும். அதுக்குள்ள காய்ச்சல் சரியாயிடும் இல்லையா? (டாக்டர் கொடுக்கும் மருந்தால்). இரண்டாவது, சார், ஊசி ஏதாவது போட்டு காய்ச்சலை குறைச்சிடுங்க. நாளைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு. சரியா? என்பதுதான்.

இதுவே, அவர்களுக்கு புற்றுநோயோ, எய்ட்ஸோ, மாரடைப்போ ஏற்பட்டிருந்தால் இப்படிச் சொல்வார்களா? நிச்சயம் மாட்டார்கள். ஏனெனில், அவற்றை மோசமான பெரிய நோய்கள் பட்டியலில் அவர்கள் சேர்த்துவைத்துள்ளனர். ஆனால், காய்ச்சலை மட்டும் ஏதோ உடனடியாக வந்து உடனடியாக சென்றுவிடக்கூடிய விருந்தாளிபோல் நினைக்கிறார்கள்.

சரி, மக்களின் நினைப்புதான் இப்படி என்றால், காய்ச்சல் காரணமாக தன்னிடம் வரும் ஒரு நோயாளி குறித்து நவீன மருத்துவம் (அலோபதி) பார்க்கும் மருத்துவரின் கண்ணோட்டம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

அரசாங்க மருத்துவர் என்றாலும், தனியாக ப்ராக்டீஸ் செய்யும் மருத்துவர் என்றாலும், எந்தவித பாகுபாடும் இல்லாமல், நோயாளிகளுக்கு அந்தக் காய்ச்சல் எதனால், எப்படி, எந்த நோய்க் கிருமியால் வந்தது என்று யோசிப்பார். நோயாளியை பரிசோதனை செய்துவிட்டு, சில கேள்விகள் கேட்டு ஆலோசனை செய்வார்.

ஏனென்றால், காய்ச்சல் ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. சரியான காரணத்தைக் கண்டுபிடித்தால்தான், அதற்குத் தகுந்த சரியான சிகிச்சை கொடுத்து காய்ச்சலைக் குணப்படுத்த முடியும். எல்லா காய்ச்சலுக்கும் ‘பாரசிட்டமால்’ மருத்து கொடுத்து காய்ச்சலை தாற்காலிகமாகக் குறைக்க முடியும். ஆனால், மீண்டும் காய்ச்சல் வரும். எனவே, அது நிரந்தரத் தீர்வு ஆகாது.

அந்த மருந்தை ஒரு சாதாரண நபரே பயன்படுத்துவார். மருந்துக்கடையிலும் வாங்கிக்கொள்வார். மற்றவர்களிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்வார்கள். இந்த மருந்தை வாங்க மருத்துவரே தேவையில்லை. அப்படியிருக்க, இங்கே மருத்துவரின் தேவை / பங்குதான் என்ன?

சரியான கேள்வி. காய்ச்சலுக்கு மருந்து தருவதுடன், அந்தக் காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டறிவதில்தான் ஒரு மருத்துவரின் பணி / கடமை இருக்கிறது. அதற்காகக்தான், காய்ச்சலுக்கான சரியான காரணத்தைக் கண்டறியத்தான் சில ஆய்வுக்கூடப் பரிசோதனைகளைச் செய்யச் சொல்கிறார்கள்.

ஆனால், ஒரு சாதாரண காய்ச்சலுக்கு இவ்வளவு டெஸ்ட் தேவையா? இன்னும் சில நாட்கள் பார்க்கலாம். காய்ச்சல் குறையவில்லையென்றால், அப்போது டெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம் என்றுதான் பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். இது மாபெரும் தவறு. மேலும், வந்திருப்பது எந்த வகைக் காய்ச்சல், எந்த நோய்க்கிருமியால் அந்தக் காய்ச்சல் வந்திருக்கிறது என்று தெரியாமல், ஒரு சில நாட்களுக்குள்ளேயே காய்ச்சல் குணமாக வேண்டும் என்று சொல்லி மருத்துவரை நிர்ப்பந்திப்பது சரியா என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வந்திருப்பது ஒரு சாதாரண காய்ச்சல் என்று மக்கள் நினைக்கலாம். ஆனால், ஒரு சாதாரண காய்ச்சலே, சரியான சிசிச்சை மேற்கொள்ளாததால், உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியலாம். காய்ச்சல் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பல்வேறு வழிகளில் பரவுகிறது. பல்வேறு விதமாகத் தோன்றுகிறது. இது குறித்து மக்கள் முதலில் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

நம் உடலில் காய்ச்சல் எந்தெந்தவிதமாகத் தோன்றுகிறது என்று பார்ப்போம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com