41. குற்றமும் தண்டனையும்..

ஊர்த்தலைவரும் ஊர்ப்பெரியவர்களும் கலந்து பேசினார்கள். ஒருமனதாக முடிவெடுத்தார்கள். அதனை கூட்டத்தில் அறிவிக்கத் தொடங்கினார் தலைவர்.
41. குற்றமும் தண்டனையும்..

அத்திவரதரைத் தரிசிக்கச் சென்றிருந்தார்கள் குருவும் சிஷ்யனும். தரிசனம் முடித்துவிட்டு திரும்பி வரும் வழியில் கிராமம் ஒன்றில் இளைப்பாறினார்கள்.

ஊரில் இருந்த பெரிய ஆலமரம் ஒன்றின் நிழலில் படுத்திருந்தார் குரு. மரக்கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகளை ரசித்துக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

ஒரு சில நிமிடங்களில் ஊர் மக்கள் சிலர் அந்த மரத்தடிக்கு வந்தனர். ஊர்ப்பஞ்சாயத்து நடக்கவிருந்தது. அதற்காகத்தான் ஒன்று கூடியிருந்தார்கள்.

துறவி ஒருவர் அயர்ந்து உறங்கிக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் அவரை எழுப்ப மனமில்லாமல் வேறு இடத்துக்குச் சென்றார்கள். அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்த சிஷ்யன் அவர்கள் பின்னாலேயே சென்றான்.

வேறொரு மர நிழலைத் தேர்ந்தெடுத்து பஞ்சாயத்து நடத்தும் வேலைகளை ஆரம்பித்தார்கள் ஊர்மக்கள். கூட்டத்தோடு நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினான் சிஷ்யன்.

கையில் பெரிய கட்டுப் போட்டிருந்த இளைஞன் ஒருவன் ஊரார் முன்னால் வந்து நின்றான். இன்னொருவன் குற்றவாளியாக முன்னால் நிறுத்தப்பட்டிருந்தான்.

‘‘என்ன பஞ்சாயத்து?’’ எனக் கேட்டார் ஊர்த்தலைவர்.

‘‘இவன் என்னைத் தாக்கினான். கையை அரிவாளால் வெட்டிவிட்டான். தெய்வாதீனமாக தப்பிவிட்டேன். வெட்டுப்பட்ட கை இன்னும் சேரவில்லை. சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன். இவனுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்’’ என்றான் பாதிக்கப்பட்ட இளைஞன்.

குற்றம் சாட்டப்பட்டவனை ஏறிட்டார் தலைவர்.

‘‘அய்யா.. இவனுக்கும் எனக்கும் தொழிலில் போட்டி. என்னை தொழிலில் ஜெயிக்க முடியாமல், என்னைத் தாக்குவதற்குத் திட்டமிட்டான் இவன். அதற்காக வெளியூரில் இருந்து கூலிப்படையை வரவழைக்க இவன் பேசியதை நான் அறிந்துகொண்டேன். தட்டிக் கேட்பதற்காக நானே இவனைச் சந்திக்கச் சென்றேன். பேச்சுவார்த்தை ஒருகட்டத்தில் அடிதடியாக மாறிவிட்டது. ஆத்திரத்தில் நான் இவனது கால்களை வெட்டிவிட்டேன். என்னை ஆள் வைத்துத் தாக்க முயற்சித்த இவனுக்குத்தான் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்’’ என்றான் குற்றம் சாட்டப்பட்டவன்.

ஊர்த்தலைவரும் ஊர்ப்பெரியவர்களும் கலந்து பேசினார்கள். ஒருமனதாக முடிவெடுத்தார்கள். அதனை கூட்டத்தில் அறிவிக்கத் தொடங்கினார் தலைவர்.

‘‘ஒருவன் தன்னை தாக்குவதற்குத் திட்டமிடுகிறான் என்பதற்காக அவனது கையை வெட்டியது மாபெரும் குற்றம். அதற்குத்தான் தண்டனை கொடுக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதனால்..’’

ஊர்த்தலைவர் பேசிக்கொண்டிருந்தபோதே, ‘‘அய்யா.. குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்’’ என வழிமறித்தான் கூட்டத்தில் இருந்த சிஷ்யன். அனைவரும் அவனை நோக்கினார்கள்.

‘‘அய்யா.. உங்கள் முடிவில் ஏதோ ஒரு தவறிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால், சரியாக அதைச் சொல்ல இயலவில்லை. நீங்கள் அனுமதித்தால் என் குருநாதரை அழைத்துக்கொண்டு வருகிறேன். நீங்கள் சரியான முடிவெடுக்க அவர் உதவுவார்..’’ என்றான் சிஷ்யன்.

ஊர்ப்பெரியவர்கள் அவன் பேச்சை மதித்து, ஒப்புக்கொண்டார்கள். குருவை எழுப்பி, விவரம் சொல்லி, அழைத்துக்கொண்டு வந்தான் சிஷ்யன்.

அனைவரும் குருவை வணங்கினார்கள். அயர்ந்திருந்த தன்னை எழுப்பாமல் வந்த ஊர்மக்களுக்கு நன்றி கூறினார் குரு. காலை வெட்டியவன், வெட்டுப்பட்டவன் இருவரிடமும் அவரவர் வாதங்களைக் கூறச் சொன்னார். முன்பு கூறியதையே மறுபடியும் தெரிவித்தனர் அவர்கள் இருவரும்.

‘‘கையை வெட்டினான். இவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்!’’ என்றான் பாதிக்கப்பட்டவன்.

‘‘என்னைத் தாக்கத் திட்டமிட்டு கூலிப்படையை அணுகினான். அதனால், தண்டனையை இவனுக்கே கொடுக்க வேண்டும்..’’ என்றான் குற்றம் சாட்டப்பட்டவன்.

இருவரது வாதங்களையும் கேட்டதும் ஊர்ப்பெரியவர்களிடம் பேச ஆரம்பித்தார் குரு.. ‘‘கையை வெட்டியது சந்தேகமில்லாமல் குற்றம்தான். அதற்கான தண்டனையை இவனுக்கு கொடுத்தே ஆக வேண்டும். அதேசமயம்.. வெட்டுப்பட்டவனுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். அதுதான் சரியான தீர்ப்பாக இருக்கும்’’ என்றார்.

‘‘எப்படிச் சொல்கிறீர்கள் சாமி?’’ என்றார் ஊர்த்தலைவர். குருவின் கருத்தில் உடன்பாடில்லை என்பது அவரது கேள்வியிலேயே தொக்கி நின்றது.

‘‘கையை வெட்டியவனுக்கு தண்டனை கொடுப்பதை தவறென்று நான் சொல்லவில்லை. தண்டனையை அவன் அனுபவித்தே ஆக வேண்டும். கூடவே, வெட்டுப்பட்டவன் அனுபவித்த துன்பத்துக்கான நஷ்டஈட்டையும் வெட்டியவனே கொடுக்க வேண்டும். அதேசமயம்.. இன்னொரு கோணத்திலும் இந்த வழக்கில் இருக்கும் நியாயத்தை ஆராய வேண்டும். தீய செயலைச் செய்வதைவிட தீயதை மனதால் நினைப்பதுதான் பெரிய குற்றம். திட்டமிட்டபடி அவன் இவனை கூலிப்படையின் உதவியுடன் தாக்கி இருந்தால், என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். ஒருவேளை.. இவன் படுகொலை செய்யப்பட்டிருக்கவும் கூடும். கால் இழப்பைக் காட்டிலும் உயிர் இழப்பே கொடுமையானது. அதனால், தாக்குதல் நடத்த திட்டமிட்டவனுக்கும் உரிய தண்டனை கொடுக்க வேண்டும். அதுவே சரியானதாகும்..’’ என்றார் குரு.

பிரச்னைக்குப் பின்னால் இருக்கும் நியாய அநியாயம் முழுமையாக அனைவருக்கும் புரிந்தது. குருவின் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com