36. தரமும் தராதரமும்..

இதுபோலத்தான் இங்கே நடந்துமுடிந்த தேர்தலும். தரத்தை அளவிட்டு தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் காலம் நிச்சயம் ஒருநாள் வரும். அப்போது தங்கத்தின் மதிப்பு எல்லோருக்கும் தெரியவரும்
36. தரமும் தராதரமும்..

மிகவும் அருமையான மனிதர் அவர். சொல் ஒன்றும் செயல் வேறொன்றும் இருந்ததில்லை அவரிடம். எப்போதும் தன்னை நாடி வருபவர்களுக்கு நல்லதையே செய்துகொண்டிருந்தார்.

நாட்டில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அவரை தேர்தலில் கலந்துகொள்ளும்படி கூறினார்கள் அவரால் பயன் பெற்றவர்கள். ‘‘உங்களைப் போன்றோர் தேர்தலில் போட்டியிட்டுத் தலைமைப் பொறுப்புகளில் அமர்ந்தால் நாட்டுக்கு நல்லது நடக்கும்’’ என வற்புறுத்தினார்கள்.

அவரும் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் பெரும்பான்மையான வாக்குகளால் தோல்வியுற்றார். அதனால் மனமுடைந்தார்.

‘‘என் வாழ்நாள் முழுக்க எல்லோருக்கும் நல்லதையே செய்து வந்தேன். இனி என்னை நான் மாற்றிக்கொள்ளப்போகிறேன். அப்படி இருக்கப்போவதில்லை..’’ என ஆதங்கத்துடன் அறிவித்தார்.

அவரது நல்ல குணங்கள் பற்றி நன்கு தெரிந்திருந்தவர்கள் வருந்தினார்கள்.

அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார் குரு. அவரது வருத்தத்தைப் போக்கும் முயற்சியையும் செய்தார். அவரை ஆசிரமத்துக்கு அழைத்துவரும்படி சிஷ்யனை அனுப்பிவைத்தார்.

குருவின் அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து ஓடிவந்தார் அந்த மனிதர்.

‘‘மக்கள் பொய்யையும் போலிகளையும்தான் விரும்புகிறார்கள். என்னைப் போன்றவர்களுக்கு அரசியலில் இடமில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது..’’ என்றார் அவர்.

‘‘அதற்காக நீங்கள் செய்துவந்த நியாய தர்மங்களை நிறுத்துவது கூடாது. நீரில் குளித்தாலும், நெருப்பில் உருகினாலும் தங்கம் ஒருபோதும் தன் மதிப்பை இழப்பதில்லை’’ என்று ஆசுவாசப்படுத்தினார் குரு.

அவர் சமாதானம் அடையவே இல்லை. என்ன சொல்லியாவது அவரைச் சமாதானப்படுத்த வேண்டும் என சிஷ்யனின் மனம் ஆசைப்பட்டது. ஆனால், எப்படி அவரைத் தேற்றுவது என அவனுக்குத் தெரியவில்லை.

கண்களைச் சற்று நேரம் மூடி யோசித்தார் குரு. சிஷ்யனை அருகே அழைத்தார். அருகே உள்ள காய்கறிக் கடைக்குச் சென்று ஒரு தராசுத் தட்டையும் கொஞ்சம் அழுகிய காய்கறிகளையும் வாங்கிவரச் சொன்னார்.

அப்படியே செய்தான் சிஷ்யன்.

தராசின் ஒரு தட்டில் சிஷ்யன் கொண்டுவந்திருந்த அழுகிய காய்கறிகளை வைத்தார் குரு. வந்திருந்தவரிடம், அவர் அணிந்திருந்த தங்க மோதிரத்தை கழட்டிக் கொடுக்குமாறு கேட்டார்.

தன் மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்தார் அந்த மனிதர். தராசின் இன்னொரு தட்டில் அந்த மோதிரத்தை வைத்தார் குரு. தராசின் மையக் கோலைத் தூக்கிப் பிடித்தார்.

மோதிரம் வைக்கப்பட்ட தட்டு உயரே எழும்பியது. அழுகிய காய்கறிகள் வைக்கப்பட்டிருந்த தட்டு அதிக கனத்தால் கீழே இறங்கியது.

‘‘பாருங்கள். இந்தத் தராசுக்கு தங்கம்தான் மதிப்புமிக்க பொருள் என்பது தெரியாது. அழுகிய பொருட்களை அதிக எடை கொண்டதாகக் காட்டுகிறது. இதுபோலத்தான் இங்கே நடந்துமுடிந்த தேர்தலும். தரத்தை அளவிட்டு தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் காலம் நிச்சயம் ஒருநாள் வரும். அப்போது தங்கத்தின் மதிப்பு எல்லோருக்கும் தெரியவரும்’’ என்றார் குரு.

வருத்தத்துடன் வந்த அந்த மனிதரின் முகத்தில் புன்னகையும் நம்பிக்கையும் அரும்பின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com