32. ஒன்றே சிவம்!

நிறப்பிரிகையால் பல வண்ணங்களாகத் தெரியும் சூரியனின் ஒளியில் அடிப்படையாக இருப்பது வெண்மை மட்டும்தானே
32. ஒன்றே சிவம்!

ஊருக்குள் இருக்கும் தேவாலயத்தில் இருந்து பாதிரியார் ஒருவர் ஆசிரமத்துக்கு வந்திருந்தார். சிஷ்யன்தான் அவரை வாசலில் நின்று வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றான்.

தேவாலயத்தில் நடைபெற இருக்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி குருநாதரிடம் வேண்டுகோள் வைத்தார் பாதிரியார். அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு வணங்கி விடைபெற்றார்.

அவர் சென்றதும், ‘‘நீங்கள் அந்த விழாவில் கலந்துகொள்வீர்களா குருவே?’’ என்று கேட்டான் சிஷ்யன்.

இன்முகத்துடன் அவனைப் பார்த்தார் குரு. ‘‘ஆமாம்’’ என்றார்.

‘‘அது வேறு மதத்தினரின் ஆலயம். அவர்கள் வழிபடுவது வேறு ஒரு கடவுள். நாம் அங்கே போவது சரியாகுமா?’’ என்றான் சிஷ்யன்.

கடவுள் குறித்தான ஐயப்பாடுகளில் இருந்து முழுதும் வெளிவரவில்லை சிஷ்யன் என்பதை குருநாதர் புரிந்துகொண்டார். கனிவுடன் பேச ஆரம்பித்தார்.

‘‘குயவன் வீட்டுக்கு ஒருநாள் சென்றிருந்தோமே.. நினைவிருக்கிறதா?’’ என்றார் குரு.

‘‘ஆமாம் குருவே. நன்றாக நினைவிருக்கிறது’’ என தலையாட்டினான் சிஷ்யன்.

‘‘மறுபடியும் அந்த இடத்தை மனக்கண்களில் பார்த்துக்கொள். அவன் பிசைந்துவைத்திருந்த மண் ஒன்றுதான். ஆனால், அவன் உருவாக்கி அடுக்கிவைத்திருந்த பாத்திரங்கள் ஒன்றுபோலவே இல்லை. பானை, தட்டு, மூடி, ஜாடி.. என பெயரிலும் உருவத்திலும் வெவ்வேறாகவே அந்தப் பாத்திரங்கள் இருந்தன. இருந்தாலும், அவை எல்லாவற்றுக்கும் அடிப்படை மண் என்ற ஒரே பொருள்தானே!’’ என்றார் குரு.

அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தான் சிஷ்யன். குரு தொடர்ந்தார்..

‘‘தங்கத்தைத் தரையில் இருந்து வெட்டி எடுக்கிறோம். அதில் இருந்து பலவிதமான ஆபரணங்களைச் செய்கிறோம். வளையல், தோடு, கொலுசு, நெற்றிச்சுட்டி.. என வெவ்வேறு வடிவத்தில் உருவாக்குகிறோம். ஆனால், எல்லா ஆபகரணங்களுக்கும் மூலப்பொருள் தங்கம்தானே!’’

‘‘உண்மை குருவே..’’

‘‘சூரியனின் கதிர்வீச்சை எடுத்துக்கொள்வோம். நிறப்பிரிகையால் பல வண்ணங்களாகத் தெரியும் சூரியனின் ஒளியில் அடிப்படையாக இருப்பது வெண்மை மட்டும்தானே..’’.

‘‘உண்மைதான் குருவே..’’

‘‘பால் தயிராகிறது.. தயிர் வெண்ணெய் ஆகிறது.. வெண்ணெய் நெய் ஆகிறது.. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது பால்தானே! நீர் கொட்டும்போது மழையாகிறது.. விழும்போது அருவியாகிறது.. ஓடும்போது நதியாகிறது.. பின்னர் சங்கமித்தவுடன் கடலாகிறது.. ஆனால், அடிப்படையில் அது நீர் மட்டும்தானே!’’

‘‘ஆமாம் குருவே.. எல்லோருக்கும் பொதுவான பரம்பொருள் ஒன்றுதான். அது வடிவங்களாலும் பெயர்களாலும் மாறுபட்டிருந்தாலும் மூலாதாரம் ஒன்றுதான் என்ற உண்மை எனக்குப் புரிந்துவிட்டது..’’ என்றான் சிஷ்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com