27. ஆஹா! அற்புதம்!

ஆண்டவனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதத்தை சரியாகப் பயன்படுத்துவதால்தான், பறவைகள் நமக்கு அழகாகத் தெரிகின்றன. எந்தப் பறவையும் சிறகை வைத்துக்கொண்டு பறக்காமல் இருப்பதில்லை.
27. ஆஹா! அற்புதம்!
Published on
Updated on
1 min read

அதிகாலை நேரம். காற்று வாங்கியபடியே காலாற நடந்துகொண்டிருந்தார்கள் குருவும் சிஷ்யனும்.

இயற்கையோடு இயைந்து வாழும் குணம் கொண்டவை பறவைகள். மனிதர்கள் கண் விழிப்பதற்கு முன்னரே அவை விழித்துவிடுகின்றன. சூரியன் உதிக்கும்போதே எழுந்து, சந்திரன் வருவதற்குள் கூடுகளில் அடைந்துகொள்கின்றன.

அந்தக் காலைப்பொழுதில்.. வானத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்த பறவைக்கூட்டத்தை குதூகலத்துடன் பார்த்தான் சிஷ்யன்.

குழந்தையின் பரவசத்துடனும், இளைஞனின் ஆர்வத்துடனும், முதியவரின் ஞானத்துடனும்.. பேசினான்.. ‘‘குருநாதா.. சிறகுகள் எவ்வளவு அற்புதமான விஷயம்! பார்ப்பதற்கே எத்தனை அழகாக இருக்கிறது!’’ என்றான்.

பறவைகளை அவன் ரசித்தான். அவனை, குரு ரசித்தார்.

‘‘மனிதனுக்கும் சிறகுகளைக் கொடுத்திருக்கலாம் இறைவன். நாமும் வானத்தில் வட்டமிடலாம். ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பறந்தே சென்றுவிடலாம். அருமையாக இருந்திருக்குமல்லவா..’’ என்றான் சிஷ்யன். உயரே, உற்சாகமாகப் பறந்து திரிந்த பறவைகளை பொறாமையுடனும் பார்த்துக்கொண்டான்.

அவனது கற்பனைக்கு புன்னகையையும், பொறாமைப் பார்வையை விலக்க ஆலோசனையையும் கொடுத்தார் குருநாதர். நின்று, நிதானித்து, சிஷ்யனை உற்றுப்பார்த்தபடியே பேச ஆரம்பித்தார்.

‘‘பறவைகளுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதம்தான் சிறகுகள், இதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் மனிதனுக்கும் அப்பேர்பட்ட அற்புதத்தை கொடுத்திருக்கிறானே ஆண்டவன்..’’

புருவம் சுருக்கினான் சிஷ்யன். புரிந்துகொண்டு, குருவே தொடர்ந்து பேசினார்..

‘‘ஆண்டவனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதத்தை சரியாகப் பயன்படுத்துவதால்தான், பறவைகள் நமக்கு அழகாகத் தெரிகின்றன. எந்தப் பறவையும் சிறகை வைத்துக்கொண்டு பறக்காமல் இருப்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் தனக்குக் கொடுக்கப்பட்ட அற்புதத்தை முறையாகப் பயன்படுத்தினால், பாராட்டுதலுக்கும் சிறப்புகளுக்கும் உரியவனாவான்..’’ என்றார்.

யூகிக்கமுடியாமல் சிரமப்பட்டான் சிஷ்யன். பொறுக்கமாட்டாமல், குருவிடமே கேட்டுவிட்டான்..

‘‘மனிதர்களுக்கு இறைவன் கொடுத்த அந்த அற்புதம் என்ன குருநாதா?!’’

‘‘சிந்திக்கும் திறன்!’’ என்றார் குரு.

ஆகாய விமானங்களை வடிவமைத்து, பறவைகளைவிடவும் வேகமாகப் பறந்து காட்டியவனல்லவா மனிதன். சிந்தித்து, செயலாற்றி, பல்வேறு அற்புதங்களைச் செய்துகாட்டியிருக்கும் மனித ஆற்றலை நினைத்து மலைத்துக்கொண்டான் சிஷ்யன். கூடவே, சிந்தனா சக்தியைப் பயன்படுத்தாமல் சும்மா இருப்பவர்களையும் நினைத்துக் கவலை கொண்டான்.

‘‘ஆமாம் குருவே. பறப்பதற்குத்தான் சிறகுகள் என்ற உண்மை பறவைகளுக்குத் தெரிந்திருக்கிறது..’’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com