26. நல்லதுக்குச் சொல்லும் பொய்..

பகல் 2 மணி வரை பணியாற்றிய தொழிலாளர்கள் 700 பொருட்களை உற்பத்தி செய்து சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி, அவர்களது உழைப்புக்குத் தலை வணங்குகிறது நிர்வாகம்
26. நல்லதுக்குச் சொல்லும் பொய்..
Published on
Updated on
2 min read

குருநாதரை அவ்வப்போது சந்தித்து, ஆசி வாங்கிச் செல்லும் அன்பர் ஒருவர் ஒரு தொழிற்சாலை நடத்திவந்தார். தனது ஆலைக்கு ஒருமுறை வர வேண்டுமென அடிக்கடி குருவைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

ஒருநாள்.. குருவும் சிஷ்யனும் அங்கு சென்றார்கள். அகமகிழ்ந்து வரவேற்றார் அந்த அன்பர்.

மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான உதிரி பாகம் ஒன்றினைத் தயாரிக்கும் தொழிற்சாலை அது. ‘‘தொழில் எப்படி நடக்கிறது?’’ என நலம் விசாரித்தார் குரு.

புலம்பிக் கொட்டிவிட்டார் அந்த அன்பர்!

‘‘அதையேன் கேட்கறீங்க ஸ்வாமி.. ஆட்சியாளர்கள் இலவசமாகவே பல வசதிகளை மக்களுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். அதனால், உழைத்தால்தான் வசதி வாய்ப்புகளை அடையமுடியும் என ஒருவருக்கும் அவசியமில்லாமல் போய்விட்டது.. முழுமையான ஈடுபாட்டுடன் யாருமே இப்போதெல்லாம் பணிபுரிவதில்லை..’’ என்று வருத்தப்பட்டார்.

வேறொரு தொழிற்சாலையில் சாதாரண கூலித் தொழிலாளியாகச் சேர்ந்து, படிப்படியாக உழைத்து, முன்னேற்றம் கண்டு, சொந்தத் தொழிலை ஆரம்பித்தவர் அவர்.

‘‘நானெல்லாம் பணிபுரிந்த காலத்தில், எட்டு மணி நேரத்துக்குள் ஆயிரம் பொருட்களை உற்பத்தி செய்துவிடுவோம். ஒவ்வொரு தொழிலாளியும் உவகையுடன் வேலை செய்வோம். ஆனால் இப்போது அப்படியில்லை. வெறும் அறுநூறு பொருட்களைத்தான் உற்பத்தி செய்கிறார்கள். நேர விரயம் செய்துவிடுகிறார்கள். மனிதவளம் பயனற்றுப்போகிறது..’’ என்றும் கூறினார்.

ஆலையில் நடந்துகொண்டிருந்த பணிகளை குழந்தையின் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

‘‘மொத்தம் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள்? எவ்வளவு நேரம் ஒவ்வொருவருக்கும் பணி இருக்கும்?’’ எனக் கேட்டார் குரு.

‘‘நூறு பேர் பணிபுரிகிறார்கள். ஐம்பது ஐம்பதாகப் பிரித்திருக்கிறோம். காலையில் 6 மணிக்கு வருபவர்கள் பகல் இரண்டு மணிக்குப் போய்விடுவார்கள். பகல் மூன்று மணிக்கு வருபவர்கள் இரவு பதினோறு மணி வரை வேலை செய்வார்கள். இரவுப்பணி கிடையாது..’’ என்றார் அன்பர்.

‘‘இரு பிரிவினரும் சேர்ந்து மொத்தம் ஆயிரத்து இருநூறு பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்.. அப்படித்தானே? அவர்கள் முனைப்போடு செயல்பட்டால் இரண்டாயிரம் பொருட்களை உற்பத்தி செய்யலாம்.. அப்படித்தானே?’’ எனக் கேட்டு அதை உறுதி செய்துகொண்டார் குரு. கரும்பலகை ஒன்றை வாங்கி வரும்படிச் சொன்னார். வந்தது.

பகல் 2 மணி ஆகும்வரை காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார். குரு, சிஷ்யன், அந்த அன்பர்.. மூவரும் காத்திருந்தனர்.

2 மணி ஆனது. வேலை செய்துகொண்டிருந்த அத்தனை பேரும் ஆலையை விட்டு வெளியேறினார்கள். 3 மணிக்குள் அடுத்துப் பணியேற்க வருபவர்கள், வந்து சேருவார்கள்.

சிஷ்யனை அருகே அழைத்தார் குரு. அவன் கையில் சுண்ணாம்பிலான எழுதுகோலைக் கொடுத்தார். தான் சொல்வதை கரும்பலகையில் எழுதுமாறு கூறினார்.

‘‘இன்று காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை பணியாற்றிய தொழிலாளர்கள் 700 பொருட்களை உற்பத்தி செய்து சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி, அவர்களது உழைப்புக்குத் தலை வணங்குகிறது நிர்வாகம்..’’ என்று எழுதிவிட்டுக் கைகளைத் துடைத்துக்கொண்டான் சிஷ்யன்.

‘‘இதனை தொழிற்சாலையின் நுழைவாயிலில் எல்லோருடைய பார்வையும் படும் இடத்தில் வையுங்கள்..’’ என்றார் குரு.

குருவின் ஆலோசனைப்படியே, தொழிற்சாலையின் வாசலில் எல்லோரது பார்வையும் படும் இடத்தில் அந்தப் பலகை பொருத்தப்பட்டது.

உள்ளே நுழையும் ஒவ்வொரு தொழிலாளியும் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். ஒருவருடன் ஒருவர் ஆவேசமாகப் பேசியபடியே உள்ளே சென்றார்கள்.

‘‘இனி எல்லாம் நல்லவிதமாகவே நடக்கும். நாளை காலையில் ஆசிரமத்துக்கு வந்து தகவல் தெரிவிக்கவும்’’ என்று கூறிய குரு, சிஷ்யனை அழைத்துக்கொண்டு வெளியேறினார். அவரது திட்டம் என்னவென்று சிஷ்யனுக்குப் புரிந்துபோனது.

***

அடுத்த நாள் காலை அரக்கப் பரக்க ஆசிரமத்துக்கு ஓடிவந்தார் அந்த அன்பர். குருவின் கால்களில் விழுந்து வணங்கினார். பரவசத்துடன் பேசினார்..

‘‘நேற்று பகலில் பணிக்கு வந்தவர்கள் 800 பொருட்களைத் தயாரித்துக்கொடுத்துச் சாதனை படைத்தார்கள். காலையில் பணிக்கு வந்தவர்களுக்கு நாங்களொன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போனார்கள்..’’ என்றார் அவர்.

‘‘அவர்களது சாதனையை இன்று நீ அந்தப் பலகையில் எழுதி வைத்திருப்பாய் என நம்புகிறேன். அதை இப்போது பணி புரிபவர்கள் நிச்சயம் முறியடிப்பார்கள். ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு.. ஓரிரு நாட்களில் அதிகபட்சம் எவ்வளவு முடியுமோ, அந்த இலக்கினை அடைந்துவிடுவார்கள். அனைவருக்கும் ஊதிய உயர்வை உடனடியாக அறிவிக்கவும். தொடர்ந்து உவகையோடு உழைப்பார்கள். உனக்குப் பக்கபலமாகவும் இருப்பார்கள்..’’ என்று சொன்னார் குரு. அவரது திட்டம் பலித்ததில், சிஷ்யனுக்கும் பரம சந்தோஷம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com