22. இறைவன் இருக்கிறான்!

ஆபத்துக் காலங்களில் நமக்கு உதவ கடவுள் நம்முடனேயே இருக்கிறார் என்ற நம்பிக்கைதான் நமது நல் முயற்சிகள் ஒவ்வொன்றுக்கும் மூல காரணம். 
22. இறைவன் இருக்கிறான்!
Published on
Updated on
2 min read

குருவும் சிஷ்யனும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தான் சிஷ்யன்.

‘‘என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டார் குரு.

சிந்தனையைக் கலைத்துக்கொண்டு பேசினான் சிஷ்யன். ’’கடவுள் இருப்பதை உணரத்தான் முடியும் என்றீர்கள்’’.

‘‘ஆம். நமது நம்பிக்கைகளாலும் நாம் சந்திக்கும் நற்செயல்களாலும் உணரலாம் கடவுள் இருப்பதை..’’ என்றார் குரு.

‘‘கண்ணுக்குத் தெரியாத, நம்பிக்கைகளால் உணர மட்டுமே முடியும் கடவுள் நமக்கு அவசியம்தானா?’’ என்றான் சிஷ்யன். ‘‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதபோது, அதனால் நமக்கு பலனேதும் இல்லை. கண்ணுக்கே எட்டாத கடவுளால் என்ன பலன் கிடைக்கப்போகிறது?!’’ என்றும் தொடர்ந்து கேட்டான்.

நடையை நிறுத்தினார் குரு. சீடனின் அறியாமையைப் போக்க விரும்பினார்.

அருகே இருந்த உயரமான மரம் ஒன்றை அண்ணாந்து பார்த்தார். அதன் உச்சியில் ஒரு பழம் தொங்கிக்கொண்டிருந்தது.

‘அந்தக் கனி உனக்குப் பிடிக்குமா?’’ என்றார் குரு.

‘‘ஆம்’’ என்றான் சிஷ்யன்.

‘‘அப்படியானால் மரத்தின் மீதேறி அதைப் பறித்து வா’’ என்றார் குரு.

மரத்தையும் பழத்தையும் குருவையும் மாறிமாறிப் பார்த்தான் சிஷ்யன். குரு பக்கத்தில் இருக்கும் தைரியத்தில், மடமடவென மரத்தில் ஏற ஆரம்பித்தான்.

பழத்தைப் பறித்துக்கொண்டு கீழே இறங்கினான்.

அவனைத் தட்டிக் கொடுத்தார் குருநாதர்.

‘‘இதற்கு முன்பு இந்த மரத்தில் ஏறி இருக்கிறாயா?’’ என்றார்.

‘‘இல்லை. இந்த மரம் என்றில்லை.. இதுவரை எந்த மரத்திலும் நான் ஏறிப் பழகியதில்லை. ஆனால், கனியைச் சுவைக்கும் ஆவல் என்னைத் தூண்டிவிட்டது. ஏதோ ஒரு வேகத்தில் இந்த மரத்தில் ஏறிவிட்டேன்’’ என்றான் சிஷ்யன்.

‘‘மரம் ஏறிப் பழக்கமில்லை என்று தெரிந்தும், எந்த தைரியத்தில் நீ அதைச் செய்தாய்? கனியைப் பறித்தே ஆக வேண்டும் என்ற ஆவல் மட்டும்தான் அதைச் செய்ய வைத்ததா?’’ - குரு.

யோசித்தான் சிஷ்யன். பயமில்லாமல் தன்னை மரமேரச் செய்தது எது என சிந்தித்தான். பின்னர், பதில் சொன்னான்.

‘‘நீங்கள் அருகில் இருக்கும்போது எனக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடாது என எண்ணினேன். அதையும் மீறி, ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலோ, நான் மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டாலோ, என்னை நீங்கள் பத்திரமாக மீட்டுவிடுவீர்கள் என நம்பினேன்’’.

சிஷ்யனின் தலையை வாஞ்சையோடு தடவினார் குரு.

‘‘நீயாகவே மரம் ஏறினாய். நீயாகவே கனியைப் பறித்தாய். நீயாகவே கீழிறங்கினாய். நீ முயற்சித்த காரியமும் பலித்தது. அதுதான் நிஜம். இதில் என் பங்கு எதுவும் இல்லையே. நான் அணு அளவுகூட உனக்கு உதவவில்லையே..’’ என்றார் குரு.

‘‘ஆனாலும், நீங்கள் அருகே இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கை போதுமே எனக்கு. அதுதானே என்னை பயமில்லாமல் என் முயற்சியைச் செய்து முடிக்கவைத்தது’’ என்றான் சிஷ்யன்.

புன்னகையுடன் அதை ஆமோதித்தார் குருநாதர். ‘‘ஆரம்பத்தில் நீ கேட்ட கேள்விக்கு இப்போது நீயே பதில் சொல்லிவிட்டாய் பார்த்தாயா..’’ என்றார்.

துணுக்குற்றான் சிஷ்யன். தொடர்ந்து பேசினார் குரு.

‘‘கடவுளை நாம் நேரடியாகக் காண்பதில்லை என்றாலும், அவரால் அணு அளவும் நேரடியான ஆதாயம் நமக்குக் கிடைக்காவிட்டாலும், ஆபத்துக் காலங்களில் நமக்கு உதவ அவர் நம்முடனேயே இருக்கிறார் என்ற நம்பிக்கைதான் நமது நல் முயற்சிகள் ஒவ்வொன்றுக்கும் மூல காரணம். நாம் அடையும் வெற்றிகள்தான் அதனால் கிடைக்கும் பலன்..’’ என்று முடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com