19. இனிப்பும் கசப்பும்

உனக்குள், எனக்குள், ஏன்.. எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் கடவுள் இருக்கிறார். எல்லா நற்செயல்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்..
19. இனிப்பும் கசப்பும்
Published on
Updated on
1 min read

குருவும் சிஷ்யனும் ஒருநாள் காலாற நடந்துகொண்டிருந்தனர். ஆசிரமத்துக்கு அவன் வந்த புதிதில் நடந்த சம்பவம் இது.

திடீரென ஒரு கேள்வியை எடுத்து வீசினான் சிஷ்யன். ‘‘நிஜமாக சொல்லுங்கள் குருவே.. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?’’ என்று கேட்டான்.

‘‘ஆம். அதிலென்ன உனக்குச் சந்தேகம்?’’ என்று திருப்பிக் கேட்டார் குரு.

‘‘அது உண்மையானால், எங்கிருக்கிறார் அவர்?’’ - துணைக்கேள்வி கேட்டான் சிஷ்யன்.

‘‘உனக்குள், எனக்குள், ஏன்.. எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் கடவுள் இருக்கிறார். எல்லா நற்செயல்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்’’ என்றார் குருநாதர்.

அந்தப் பதிலை சிஷ்யனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளக்கம் அவனுக்குப் போதுமானதாக இல்லை. அதனால், சமாளிக்க முயற்சி செய்து தோற்றுப்போனார் குரு என அவன் எண்ணிக்கொண்டான். சிரித்துக்கொண்டான். அவன் சிரிப்பில் கிண்டலும் கலந்திருந்தது.

‘‘கண்ணுக்கு தெரியாத கடவுளை, இருக்கிறார் என்று கண்களை மூடிக்கொண்டு எப்படி நம்புவது குருவே?!’’ என்றான்.

அப்போது அவர்கள் ஒரு குளக்கரையில் நடந்துகொண்டிருந்தனர். நின்றார் குரு. சிஷ்யனும் நின்றான்.

அருகிலிருந்த குளப் பரப்பை அவனுக்குக் காட்டினார் குரு. பாசி மண்டிக் கிடந்தது. துளியளவு இடத்திலும் தண்ணீர் தென்படவே இல்லை!

‘‘இந்தக் குளத்தில் தண்ணீர் இருக்கிறதா?’’ என்று கேட்டார் குரு.

‘‘ஆம் குருவே.. இருக்கிறது’’ என்றான் சிஷ்யன்.

‘‘கண்களுக்குத் தெரியும் எல்லா இடங்களிலும் பாசிதானே படிந்திருக்கிறது. தண்ணீர், கண்ணுக்குத் தெரியவில்லையே! எப்படி இந்தக் குளத்தில் தண்ணீர் இருப்பதாக நீ உறுதியாகச் சொல்கிறாய்?’’ எனக் கேட்டார் குரு.

தனது அறிவைப் பறைசாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் சிஷ்யனுக்கு! பெருமிதத்துடன் பதில் சொன்னான்.. ‘‘நீர்ப்பரப்பின் மீதுதான் பாசி படர்ந்திருக்கும் என்ற உண்மை எனக்குத் தெரியும். அதனால்தான் இந்தக் குளத்தில் தண்ணீர் இருக்கிறது என்று உறுதியாகக் கூறுகிறேன் குருவே’’ என்றான்.

‘‘அப்படித்தான் கடவுளும்’’ என்றார் குரு.

‘‘அறியப்படுபவரே கடவுள். நமது நம்பிக்கைகளாலும் நாம் சந்திக்கும் நற்செயல்களாலும் கடவுள் நம்முடன் இருப்பதை அறிந்துணரலாம்’’ என்றவர், தன் நடையைத் தொடர்ந்தார்.

மெய் மறந்து நின்றான் சிஷ்யன். பாசி மொய்த்துக்கிடந்த குளம் அவனைப் பார்த்து, ‘புரிந்ததா குழந்தாய்?’ என்று கேட்டதுபோல் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com