15. ஒரு நொடி.. ஒரே நொடி!

எறும்புகள் திரும்பிப் பார்ப்பதில்லை. அவற்றின் இலக்கு, இருப்பிடத்துக்கு பத்திரமாகப் போய்ச் சேருவதும், கொண்டு செல்லும் உணவினைப் பாதுகாப்பாக வைப்பதும்.
15. ஒரு நொடி.. ஒரே நொடி!

பாடம் படிக்க வந்தவன்தான் என்றாலும் பாலகன்தானே! சிஷ்யனை அவன் போக்கில் அவ்வப்போது சில நிமிடங்கள் விளையாட அனுமதிப்பார் குரு. அப்படித்தான் அன்றும்.

ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் குரு. தூங்கவில்லை. நெடுஞ்சாண்கிடையாகப் படுத்துக்கொண்டு இருப்பார் சில நிமிடங்கள்.

ஆசிரமத்தின் ஒரு ஓரத்தில் ஏதோ விளையாடிக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என தலையைத் தூக்கிப் பார்த்தார் குரு.

மழைக்காலத்துக்குத் தேவையான உணவுகளை வெயில் காலத்தில் சேமித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் எறும்புகளுக்கு உண்டு. அதற்காகவே, ஆசிரமத்தின் ஒரு மூலையில் கொஞ்சம் தானியங்களைப் போட்டு வைப்பார் குரு. அவற்றை அள்ளிக்கொண்டு போக அணிஅணியாக எறும்புகள் வரும்.

அப்படி அணிவகுத்துச் செல்லும் எறும்புக் கூட்டத்துடன் விளையாடிக்கொண்டிருந்தான் சிஷ்யன். எறும்புகள் எங்கிருந்து வருகின்றன, எங்கே செல்கின்றன என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

குருவுக்கு சட்டென ஏதோ தோன்றியது. எழுந்து உட்கார்ந்தார். சிஷ்யனை அழைத்தார். ஓடிவந்தான் அவன்.

ஒரு குவளையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துவரச் சொன்னார் குரு. எடுத்துவந்தான் சிஷ்யன்.

எழுந்து, அவனையும் அழைத்துக்கொண்டு, எறும்புகள் ஊர்வலம் சென்றுகொண்டிருந்த இடம் நோக்கிச் சென்றார். தரையில் உட்கார்ந்தார். சிஷ்யனையும் உட்காரச் சொன்னார். நடக்கப்போவதைக் கவனிக்குமாறு சொன்னார்.

குவளை நீருக்குள் தன் ஆள்காட்டி விரலை நனைத்தார் குரு. சீராகச் சென்றுகொண்டிருந்த எறும்புக் கூட்டத்தின் பாதையில் ஒரு இடைவெளி உருவானது. அந்த இடைவெளியில் தன் ஈர விரலைக்கொண்டு ஒரு கோடு கிழித்தார் குரு. விரலின் வழியே வழிந்த நீரினால் ஒரு நீர்க்கோடு உருவானது அந்த இடத்தில்.

சிற்றெறும்புகளைப் பொறுத்தவரை அது ஒரு நீர்க் குன்று. திடுதிப்பென அவற்றின் பாதைக்குக் குறுக்கே எழுந்து நிற்கும் தண்ணீர் அணை.

அணைக்கு அந்தப் பக்கம் சென்றுவிட்ட எறும்புகள் திரும்பிப் பார்ப்பதில்லை. அவற்றின் இலக்கு, இருப்பிடத்துக்கு பத்திரமாகப் போய்ச் சேருவதும், கொண்டு செல்லும் உணவினைப் பாதுகாப்பாக வைப்பதும்.

ஆனால், அணைக்கு இந்தப்பக்கம் ஊர்ந்துகொண்டிருக்கும் எறும்புகள் என்ன செய்யும்?

‘‘உற்றுக் கவனி’’ என்றார் குரு. பார்வையைக் குவித்துக்கொண்டான் சிஷ்யன்.

பாதைக்குக் குறுக்கே, தண்ணீர்க் குன்று முளைத்திருந்த இடத்தை நோக்கி விரைந்து வந்த எறும்புக் கூட்டத்தில் முதலாவதாக இருந்த எறும்பு, சட்டென ஒரு விநாடி நிலைகுலைந்து நின்றது. அதன் திகைப்பைக் கண்டு, பின்னால் வந்துகொண்டிருந்த எறும்புகளும் திகைத்து நின்றன.

ஒரு நொடி.. ஒரே நொடிதான் அந்தத் திகைப்பும் திணறலும்!

இடமும் வலமும் திரும்பிப் பார்த்த அந்த முதல் எறும்பு, பட்டென பாதையை மாற்றியது. தானே அந்த எறும்புப் படைக்குத் தளபதியாக மாறியது. நீர் குறுக்கிடாத வேறொரு திசையில் திரும்பி, தன் பயணத்தைத் தொடர்ந்தது. பின்னால் சரமாரியாக வந்துகொண்டிருந்த அத்தனை எறும்புகளும் முன்னே செல்லும் தளபதியை சமர்த்தாகப் பின் தொடர்ந்தன.

மறுபடியும் விரலை குவளைக்குள் நனைத்தார் குரு. புதிய ஊர்வலப் பாதையின் குறுக்கே மறுபடியும் நீர்க்கோடு போட்டார்.

மறுபடியும் ஒரு நொடி நிலைகுலைந்து நின்றது தளபதி எறும்பு. அடுத்த நொடியே, அங்கும் இங்கும் திரும்பிப்பார்த்து, நீர் குறுக்கிடாத ஒரு திசையைத் தேர்ந்தெடுத்து, தன் பயணத்தைத் தொடர்ந்தது. பின் தொடர்ந்தன மற்ற எறும்புகள்.

‘‘பார்த்தாயா?’’ என்றார் குரு.

‘‘ஆம் குருவே’’ என்றான் சிஷ்யன். வியப்பில் அவன் கண்கள் விரிந்திருந்தன.

‘‘இன்னும் எத்தனை முறை நாம் இந்த எறும்புக் கூட்டத்தின் பாதையில் குறுக்கிட்டு தடை செய்தாலும், புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து பயணத்தைத் தொடர அந்த முதல் எறும்பு ஒரே ஒரு விநாடி நேரம்தான் எடுத்துக்கொள்ளும். எறும்புகளுக்கு இயல்பாக இருக்கும் பழக்கம் இது’’ என்றார் குரு.

‘‘புரிகிறது குருநாதா’’ என்றான் சிஷ்யன். அவன் கண்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன.

‘‘தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஏதாவதொரு கஷ்டம் குறுக்கிட்டால், நிலைகுலைந்து போய்விடுகிறார்கள் மனிதர்கள். அந்தத் துயரத்தில் இருந்து மீள்வதற்கான மாற்று வழியைத் தேடாமல் அங்கேயே முடங்கிப் போய்விடுகிறார்கள். சிற்றெறும்புகளின் விடாமுயற்சி வழியாக, தாங்கள் இன்று எனக்குப் போதித்த பாடத்தை எப்போதும் மறக்கமாட்டேன்’’ என்றான் சிஷ்யன்.

புன் சிரிப்புடன் அவன் தோளில் தட்டிக் கொடுத்தார் குருநாதர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com