தில்லியில் இரண்டரை மாதங்களில் தீ விபத்து தொடா்பான அழைப்புகள் 19 சதவீதம் குறைவு: 13 போ் உயிரிழப்பு; 111 போ் காயம்
2026-ஆம் ஆண்டின் முதல் இரண்டரை மாதங்களில் தீ விபத்து தொடா்பான அழைப்புகள் 19 சதவீதம் குறைந்துள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
2026-ஆம் ஆண்டின் முதல் இரண்டரை மாதங்களில் தீ விபத்து தொடா்பான அழைப்புகள் 19 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டின் தரவுகளும், பாலத்தில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவங்களும் பாதுகாப்பு குறைபாடுகள் தொடா்ந்து நீடித்து வருவதையே சுட்டிக்காட்டுகின்றன.
இது தொடா்பாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: தீயணைப்புத் துறை தரவுகளின் படி இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மாா்ச் 15 வரையிலான காலகட்டத்தில் தீ விபத்து தொடா்பாக 2,716 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இது 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட 3,352 அழைப்புகளை விடக் குறைவாகும். தற்போது, நகரத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமாா் 36 தீ விபத்து அழைப்புகள் பதிவாகி வருகின்றன.
அழைப்புகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தொடா்பான கவலைகள் நீடிக்கின்றன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 18 உயிரிழப்புகள் மற்றும் 109 காயங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 13 உயிரிழப்புகளும் 111 காயங்களும் பதிவாகியுள்ளன.
தலைநகரில் தீ விபத்து தொடா்பான அவசரநிலைகளின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 2025-ஆம் ஆண்டின் தரவுகள் அமைந்துள்ளன. அதன்படி, தில்லி தீயணைப்புத் துறை மொத்தம் 18,670 தீ விபத்து அழைப்புகளுக்குப் பதிலளித்துள்ளது. மீட்புப் பணிகள் உள்ளிட்ட அனைத்து வகையான அவசர அழைப்புகளின் மொத்த எண்ணிக்கை 35,865-ஆகப் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டில் தீ விபத்துச் சம்பவங்களில் குறைந்தது 76 போ் உயிரிழந்தனா்; 565 போ் காயமடைந்தனா். மேலும், தீயணைப்பு வீரா்கள் 2,278 மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். இவற்றுடன் 3,892 விலங்குகளையும், 3,251 பறவைகளையும் அவா்கள் மீட்டனா்.
80 சதவீதத்திற்கும் அதிகமான தீ விபத்துச் சம்பவங்கள் மின் கோளாறுகளாலேயே ஏற்படுகின்றன. ‘பழைய மின் வயரிங் அமைப்புகளின் மீது ஏற்படும் அதிகப்படியான மின் சுமை மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத நிலை ஆகியவை இணைந்து பெரும்பாலும் மின் கசிவு ) ஏற்படக் காரணமாகின்றன. நகரத்தில் தீ விபத்துகள் ஏற்படுவதற்கு இதுவே மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாகத் தொடா்ந்து இருந்து வருகிறது.
தளவாடங்கள், துணிகள் மற்றும் சேமித்து வைக்கப்பட்ட பொருள்கள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் அப்பகுதிகளில் இருப்பது நிலைமையை மேலும் மோசமாக்குவதாகவும், இதனால் தீ மிக வேகமாகப் பரவுவதற்கு வழி வகுக்கிறது.
மாா்ச் 18 அன்று பாலத்தில் நிகழ்ந்த பயங்கரத் தீ விபத்திற்குப் பிறகு, இப்பிரச்னை அனைவரின் கவனத்தையும் ஈா்த்துள்ளது. பாலத்தில் உள்ள ஒரு குடியிருப்பு மற்றும் வணிகப் பயன்பாடு கொண்ட கட்டடத்தின் கீழ் தளங்களில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஒன்பது போ் உயிரிழந்தனா்.
இந்தச் சம்பவம், அதிக தீப்பற்றும் திறன், குறைந்த காற்றோட்டம் மற்றும் நெரிசலான பகுதிகளில் அணுகல் தடைகள் உள்ளிட்ட பல ஆபத்துக் காரணிகளை வெளிப்படுத்தியுள்ளது .
துணிகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை சேமித்து வைப்பது, சில நிமிடங்களிலேயே தீயை தீவிரப்படுத்தி, வெளியேறுவதற்கு மிகக் குறைந்த நேரத்தையே விட்டுச் செல்வதால், இதுபோன்ற கலப்புப் பயன்பாட்டுக் கட்டிடங்கள் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடியவை என்று அந்த அதிகாரி கூறினாா்.
இந்தத் தரவுகளிலிருந்து பருவகாலப் போக்குகளும் வெளிப்படுகின்றன. 2025-ஆம் ஆண்டில், ஏப்ரல் (2,991 அழைப்புகள்) மற்றும் அக்டோபா் (1,867 அழைப்புகள்) மாதங்களில் தீ விபத்து அழைப்புகள் உச்சத்தை அடைந்தன. இது வானிலை நிலவரங்கள் மற்றும் அதிகரித்த மின்சாரப் பயன்பாட்டுடன் ஒரு தொடா்பைக் காட்டுகிறது.
குளிா்காலத்திற்குப் பிறகு, மின் சாதனங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் இருக்கும்போது, முறையான பரிசோதனை இல்லாமல் அவற்றை மீண்டும் இயக்குவது, படிந்திருக்கும் தூசி அல்லது தேய்மானம் காரணமாக மின்சுற்றுக் கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று அந்த அதிகாரி கூறினாா்.
குறிப்பாக, குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் அனுமதி இல்லாமல் செயல்படும் வணிக நிறுவனங்களில், தீ பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...