18. அது மட்டும்!

கீழே கிடந்த கற்களில் ஒன்றை மட்டும் தன் கையில் எடுத்தார் குருநாதர். குறிபார்த்து எறிந்தார். தவறவில்லை!
18. அது மட்டும்!

ஆசிரமத்துக்கு அருகே இருந்த உயரமான மரம் ஒன்றின் உச்சியில் ஜம் என்று தொங்கிக்கொண்டிருந்தது ஒரு பழம்!

அதைப் பார்த்ததுமே ருசிக்கும் ஆசையில் சப்புக் கொட்டினான் அந்தப் பக்கமாக நடந்துவந்த சிறுவன் ஒருவன். கீழே கிடந்த கல்லை எடுத்து மரத்தின் மீது வீசினான். கிளைகளில் மோதிக் கீழே விழுந்தது கல். பழம், மரத்திலேயே சமர்த்தாக இருந்தது.

சிறுவனின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கும் அசைந்து கொடுக்கவில்லை அந்தப் பழம்.

ஆசிரமத்தின் வாசலில் இருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்த சிஷ்யன் உதவிக்கு ஓடிவந்தான். ‘‘நான் வேண்டுமானால் உனக்கு உதவி செய்யட்டுமா?’’ எனக் கேட்டான்.

‘‘ம்.. முயற்சி செய்யுங்கள். கனி விழுந்தால் ஆளுக்குப் பாதியாக எடுத்துக்கொள்ளலாம்’’ என்று சொன்னான் அந்தச் சிறுவன்.

விழாவிட்டால் அவமானமாகப் போய்விடுமே என்ற கலக்கம் குடிபுகுந்தது சிஷ்யனின் மனதுக்குள். பதைபதைப்புடன் பகீரதப் பிரயத்தனங்கள் செய்து பார்த்தான் அவன். ம்ஹூம், அவனது முயற்சிகளும் பலித்தபாடில்லை!

அப்போது அங்கு வந்த குருநாதர், சிறுவனையும் சிஷ்யனையும் உயரே இருந்த பழத்தையும் கீழே சிதறிக் கிடந்த கற்களையும் பார்த்தார். நடந்ததை அறிந்துகொண்டார்.

குருவைக் கண்டதும், ‘‘அந்தப் பழத்தை ருசிக்க ஆசைப்படுகிறான் இந்தச் சிறுவன். அவனால் அதை அடைய முடியவில்லை. அவனுக்கு உதவுவதற்காக நானும் சில முயற்சிகள் செய்தேன். என்னாலும் முடியவில்லை குருவே’’ என்றான் சிஷ்யன்.

அவனுக்கு அவமானமாக இருந்தது. ஒரு சிறு கனியை, குறிபார்த்து அடிக்கத் தெரியாதவனாக சங்கடத்தில் நெளிந்தான். வியர்த்து விறுவிறுத்தான்.

குனிந்து, கீழே கிடந்த கற்களில் ஒன்றை மட்டும் தன் கையில் எடுத்தார் குருநாதர். குறிபார்த்து எறிந்தார். தவறவில்லை!

தரையில் விழுந்த பழத்தை தாவிச் சென்று எடுத்துக்கொண்டான் அந்தச் சிறுவன்.

‘‘உங்களால் மட்டும் எப்படி ஒரே முயற்சியில் அந்தக் கனியை கீழே விழவைக்க முடிந்தது குருவே?’’ என்று கேட்டான் சிஷ்யன். ‘‘உங்கள் தவவலிமைதானே அதற்குக் காரணம்?’’ என்றும் கேட்டான்.

புன்னகையை உதிர்த்துக்கொண்டார் குரு. ‘‘இல்லை’’ என்றார். தொடர்ந்து சொன்னார்..

‘‘அந்தப் பையனுக்கு கனியின் ருசிதான் பிரதானமாகத் தெரிந்தது. உனக்கு உன் மானமே பிரதானமாகப் பட்டது. ஆனால், எனக்கு அந்தக் கனி மட்டுமே தெரிந்தது’’ என்றார்.

பழத்தைச் சுவைத்துக்கொண்டிருந்தான் சிறுவன். பாடம் படித்துக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com