20. கருப்பு - வெள்ளை!

இரண்டிரண்டாக எல்லா விஷயங்களையும் பிரித்துவைத்திருக்கும் பொதுப்புத்தியால், மனிதன் தன் சோம்பேறித்தனத்தை வெளிப்படுத்துகிறான். மொழியை அவன் முழுதாகப் பயன்படுத்துவதில்லை. அதனால் நஷ்டம் அவனுக்குத்தான்..
20. கருப்பு - வெள்ளை!

சிஷ்யனை அழைத்து, அருகே உள்ள ஊருக்குப் போய்வரும்படிக் கூறினார் குரு. குஷியோடு புறப்பட்டான் அவன்.

பெரும்பாலான நேரம் ஆசிரமத்துக்கு உள்ளேயே அடைந்துகிடக்கும் அவனை, இப்படி அடிக்கடி வெளியே சென்றுவர வைப்பார் குரு. அது, அவனுக்கும் பிடிக்கும்.

ஊரில் இருக்கும் நபர் ஒருவரின் பெயரைச் சொல்லி, அவர் எப்படிப்பட்டவர் என ஊர் மக்களிடம் விசாரித்து வருமாறு சிஷ்யனிடம் கூறி அனுப்பியிருந்தார் குரு. ஊரில் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தான் சிஷ்யன். விசாரித்தான். வந்த வேலையை முடித்தான். ஆசிரமம் திரும்பினான்.

‘‘ம்.. சொல்’’ என்றார் குரு.

‘‘அந்த மனிதர் மிகவும் கெட்டவர்’’ என்றான் சிஷ்யன்.

‘‘கெட்டவர் என்பது சொல். மிகவும் எனச் சேர்த்துச்சொல்வது ஆணித்தரமான கருத்து. எப்படி அவ்வளவு உறுதியாகக் கூறுகிறாய்?’’ என்று கேட்டார் குரு.

‘‘அந்த நபரைப் பற்றி விசாரித்தபோது, நல்லவர் இல்லை என்றுதான் ஊரில் உள்ளவர்கள் கருத்துக் கூறினார்கள். ஒரு ஆள், இரண்டு ஆள் இல்லை.. ஊருக்குள் நான் விசாரித்த அத்தனை பேருமே அப்படித்தான் சொன்னார்கள். நல்லவன் இல்லை என்றால் கெட்டவனாகத்தானே இருக்க முடியும். எல்லோரும் அதையே சொன்னதால், அந்த நபர் மிகவும் கெட்டவராகத்தானே இருக்க முடியும். அதனால்தான் உறுதியாகச் சொன்னேன் குருவே’’ என்றான் சிஷ்யன்.

ஒரு கணம் கண்களை மூடி நிதானமாக யோசித்தார் குரு. பின்னர், ‘‘மொழியின் உபயோகத்தினால் எதையெல்லாம் நாம் இரண்டிரண்டாகப் பிரித்து வைத்திருக்கிறோம் சொல்..’’ என்று கேட்டார்.

‘‘இரவு - பகல்..’’ என பதில் சொல்ல ஆரம்பித்தான் சிஷ்யன்.

‘‘நல்லது. தொடர்ந்து சொல்..’’ என்று அவனை உற்சாகப்படுத்தினார் குரு.

‘‘நன்மை - தீமை, நல்லது - கெட்டது, இன்பம் - துன்பம், உண்மை - பொய்..’’

‘‘ம்.. இன்னும் சொல்..’’

‘‘இனிப்பு - கசப்பு, வெற்றி - தோல்வி, கருப்பு - வெள்ளை..’’ என்றான் சிஷ்யன். தன் பட்டியலைத் தொடர முயற்சித்தான்.

தடுத்து நிறுத்தினார் குரு. ‘‘போதும், நிறுத்திக்கொள்’’ என்றார்.

‘‘இப்படி இரண்டிரண்டாக எல்லா விஷயங்களையும் பிரித்துவைத்திருக்கும் பொதுப்புத்தியால், மனிதன் தன் சோம்பேறித்தனத்தை வெளிப்படுத்துகிறான். மொழியை அவன் முழுதாகப் பயன்படுத்துவதில்லை. அதனால் நஷ்டம் அவனுக்குத்தான்’’ என்று சொன்னார் குரு.

‘‘புரியவில்லை குருவே..’’ என்றான் சிஷ்யன்.

‘‘கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையே எத்தனையோ வண்ணங்கள் இருக்கின்றன. ஆனால், பொத்தாம் பொதுவாகக் கூறும்போது கருப்பு - வெள்ளை என்று இரண்டு கூறுகளோடு மட்டும் நிறுத்திக்கொள்கிறோம்..’’

‘‘ஆம் குருவே. இது இல்லை என்றால் அது என பொதுவாகக் கூறிவிடுகிறோம். அப்படிக் கூறுவது மாபெரும் தவறுதான்’’ என்றான் சிஷ்யன்.

‘‘இப்போது சொல்.. அந்த மனிதர் மிகவும் கெட்டவரா?’’ என்று மீண்டும் ஒருமுறை அவனிடம் கேட்டார் குரு.

உறுதியாகச் சொன்னான் சிஷ்யன்.. ‘‘தெரியவில்லை குருவே. ஆனால், அவர் நல்லவர் இல்லை என்று மட்டுமே இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும்’’ என்றான்.

‘‘எதையும் இரண்டுகூறாக பிரித்துப்பார்க்கும் மொழியின் பயன்பாடு என்னை தவறான முடிவுக்குத் தள்ளிவிட்டது. இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் குருவே. ஊருக்குள் சென்று சரியாக விசாரித்துவிட்டு வந்து சொல்கிறேன்’’ என்றான் சிஷ்யன்.

‘‘வேண்டாம். இது உனக்கான இன்றைய பாடம். அதற்காகத்தான் உன்னை அனுப்பினேன்’’ என்றார் குரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com