28. தெய்வீகம்..

எல்லாம் அறிந்த இறைவன் இந்தக் கிழவி மீது காட்டும் கருணையாலும், அவன் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையாலும், அந்தப்பணம் அவனுக்குத்தானே போய்ச் சேர வேண்டும்.
28. தெய்வீகம்..
Published on
Updated on
2 min read

நெடுந்தூரப் பயணத்துக்கிடையில் இளைப்பாற இடம் தேடி ஆலயம் ஒன்றில் அமர்ந்திருந்தனர் குருவும் சிஷ்யனும்.

அப்போது, பெரும் வணிகன் ஒருவன் அங்கு வந்தான். கட்டுக்கட்டாகப் பணத்தை அள்ளி உண்டியலில் போட்டான். கையோடு கொண்டுவந்திருந்த வியாபார ஒப்பந்தப் பத்திரம் ஒன்றை தெய்வத்தின் காலடிகளில் வைத்து வணங்கினான். ஆலயத்தின் பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தான்.

அதே நேரத்தில், இன்னொருவனும் கோயிலுக்குள் நுழைந்தான். அவன் தோற்றமே அவன் செல்வச் செழிப்பை எடுத்துக் காட்டியது. தான் கொண்டுவந்திருந்த பொன்னையும் பொருளையும் வாரி எடுத்து உண்டியலில் போட்டான். மகிழ்ச்சி தவழும் முகத்தோடு தெய்வத்தின் முன்னால் நின்று பிரார்த்தித்தான். அவனும் பயபக்தியோடு பிரகாரத்தை வலம்வரத் தொடங்கினான்.

தட்டுத்தடுமாறியபடியே நடந்துவந்த ஒரு மூதாட்டி ஆலயத்துக்குள் நுழைந்தாள். தன் சுருக்குப் பையை எடுத்து, அதில் சேர்த்து வைத்திருந்த சில்லறைக் காசுகளை அள்ளினாள். உண்டியலில் போட்டாள். கருவறை இருக்கும் திசைக்குத் திரும்பி, தரையில் விழுந்து கும்பிட்டாள்.

அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள் குருவும் சிஷ்யனும்.

‘‘அவர்கள் அனைவரது செயலும் ஏறக்குறைய ஒன்றுதான். இருந்தாலும், அடிப்படையில் ஒன்றுக்கொன்று மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. என்னவென்று புரிகிறதா?’’ எனக் கேட்டார் குருநாதர்.

புரியாமல் விழித்தான் சிஷ்யன்.

‘‘சொல்கிறேன் கேள்..’’ என்று கூறி விட்டு, விளக்கமாகப் பேசலானார் குரு.. ‘‘கட்டுக்கட்டாக பணத்தைக் கொடுத்து, தன் புதிய வியாபாரம் லாபகரமாக நடைபெற வேண்டும் என பிரார்த்தித்தான் அந்த வணிகன். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெற முயல்வது வியாபாரம் அல்லவா!’’

‘‘ஆமாம் குருவே..’’

‘‘இறைவன் தனக்கு அள்ளிக்கொடுத்ததில் ஒரு பங்கை கிள்ளியெடுத்து காணிக்கையாகத் திருப்பிச் செலுத்தினான் அந்த செல்வந்தன். ஒரு உபகாரத்துக்குச் செய்யும் பிரதியுபகாரம்தானே அது!’’.

‘‘ஆமாம் குருவே..’’.

‘‘அந்த மூதாட்டியின் பிரார்த்தனையில்தான் தெய்வீகம் இருக்கிறது. உண்டியலில் அவள் சேர்த்த நாணயங்கள் அவளுக்கு எப்படிக் கிடைத்தன என்று நீயே அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள். தெளிவு பிறக்கும்..’’ என்றார் குரு.

எழுந்து, குடுகுடுவென ஓடிச்சென்று அந்த மூதாட்டியை வழிமறித்தான் சிஷ்யன். அவளுக்கு பார்க்கும் திறன் இல்லை என்பதையும், அதனால்தான் தட்டுத்தடுமாறியபடியே நடக்கிறாள் என்பதையும் அறிந்தான்.

அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘‘உண்டியலில் நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?’’ என்று கேட்டான்.

பொக்கை வாய்ப் புன்னகையுடன் அவள் பேசினாள்..

‘‘எனக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. ஆனால், அந்தக் குறை தெரியாமல் நான் வாழ வழிகாட்டியிருக்கிறான் இறைவன். குறையொன்றுமில்லை என் வாழ்க்கையில். இந்தக் கோவிலின் வாசலில்தான் பூஜைப் பொருட்கள் விற்று என் ஜீவனத்தை கவனித்துக்கொள்கிறேன்..’’

மூதாட்டி பேசப் பேச, விரித்த விழிகளுடன் கேட்டுக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

‘‘விளக்கைப் பயன்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை. விளக்குக்காகவும் எண்ணெய்க்காகவும் நான் செலவழித்திருக்க வேண்டிய பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே வருவேன். எல்லாம் அறிந்த இறைவன் இந்தக் கிழவி மீது காட்டும் கருணையாலும், அவன் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையாலும், அந்தப்பணம் அவனுக்குத்தானே போய்ச் சேர வேண்டும். அதனால், அதை அவ்வப்போது உண்டியலில் போட்டுவிடுவேன். இப்போதும் அதைத்தான் செய்தேன்..’’ என்றாள் அவள்.

அவள் பாதங்களைத் தொட்டு வணங்கினான் சிஷ்யன். எழுந்து, கருவறைப் பக்கம் திரும்பி வணங்கினான். இறைவன் புன்னகைப்பதுபோல் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com