16. காத்திருப்பு

அது உனக்கானது. அது, உனக்காகவே காத்திருந்தது. நீயும் அதற்காக காத்திருக்க நேர்ந்ததால்தான் இப்போது அது உனக்குக் கனியாகக் கிடைத்திருக்கிறது
16. காத்திருப்பு

ஆசிரமத்தின் நுழைவாயிலுக்கு அருகே படர்ந்திருந்த கொடியில் புதிதாக ஒரு பூ, பூத்திருந்தது.

‘என்னைப் பார், அருகே வா, பறித்துக்கொள்’ என்று சொல்லாமல் சொன்னது அதன் அழகிய தோற்றம். அதைப் பறிக்க ஆசைப்பட்டான் சிஷ்யன். இதுவரை அவன் பார்த்திராத வண்ணத்திலும் வடிவத்திலும் இருந்தது அந்த மலர்.

மலரைக் கொய்துவிடும் நோக்கத்துடன் அதன் அருகே சென்றான் சிஷ்யன். கைகளை உயர்த்தினான்.

ஆசிரமத்தின் திண்ணையில் அமர்ந்திருந்த குரு அதைக் கவனித்துவிட்டார். உரத்த குரலில் அவனை அழைத்தார். தப்பித்தது பூ. ‘ச்சே’ எனச் சொல்லிக்கொண்டே நகர்ந்தான் சிஷ்யன்.

தொலைவில் இருக்கும் கிராமம் ஒன்றுக்குச் சென்று, அங்கிருக்கும் கோவிலின் பிரசாதம் வாங்கிக்கொண்டு வருமாறு கூறினார். உடனே செல்லும்படி கேட்டுக்கொண்டார்.

தூரம் அதிகம். எப்படியும் இரண்டு நாட்களாவது தேவைப்படும். ஆனால், முக்கியம் என்பதால்தான் குருநாதர் அந்தப் பணியை உடனே செய்யும்படி சொல்லியிருப்பார் என்று சிஷ்யனுக்குத் தெரியும். ஓரிரு நிமிடங்களில் பயணத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு ஆசிரமத்தை விட்டு வெளியேறினான்.

அவனிடமிருந்து தப்பியிருந்த அந்த மலர், காற்றில் அசைந்தாடியபடியே அவனுக்குக் கை காட்டியது. அதை ஏக்கத்துடன் பார்த்தவாறே வெளியேறினான்.

அவன் தொலைவில் புள்ளியாகும் வரை பார்த்து, உறுதிசெய்து கொண்டார் குருநாதர்.

***

குரு சொன்ன பணியை முடித்துக்கொண்டு ஆசிரமம் திரும்பினான் சிஷ்யன்.

அவனை வழியனுப்பிவைத்த மலர் இப்போது அங்கில்லை! மாறாக, அது பச்சைப் பசேலென்ற பிஞ்சாக உருமாறி இருந்தது. அதன் தோற்றம் இப்போதும் மிக அழகாக இருந்தது. அதனால், அதைப் பறிக்கும் ஆசை மறுபடியும் பற்றிக்கொண்டது அவனுக்கு. ஆசிரமத்துக்குள் நுழையும் முன்னர் அதைப் பறிக்க முயன்றான்.

ஆசிரமத்தின் ஜன்னல் வழியாக அவனைக் கவனித்துவிட்டார் குரு. அங்கிருந்தபடியே, ‘‘வா இங்கே’’ என்று குரல் கொடுத்தார். பின்வாங்கினான் சிஷ்யன். தப்பித்தது அந்தப் பிஞ்சு. குருவை மனதில் கருவிக்கொண்டான் சிஷ்யன்.

அவன் கொண்டுவந்திருந்த கோயில் பிரசாதத்தில் கொஞ்சம் எடுத்துக்கொண்டார். மீதத்தை மூன்று பாகங்களாகப் பிரித்து, மூன்று வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று கொடுத்துவிட்டு வரச் சொன்னார். அதன்படியே செய்தான் சிஷ்யன். குருவிடம் ஆசி வாங்கிக்கொண்டு, மறுபடியும் ஆசிரமத்தை விட்டு வெளியேறினான்.

***

இரண்டு நாட்கள் கழிந்த பின்னரே ஆசிரமம் திரும்ப முடிந்தது சிஷ்யனால்.

ஆசிரமத்தை நெருங்கும்போதே அவன் கண்கள் அனிச்சையாக அந்த பச்சைப் பசேல் பிஞ்சைத் தேடின. அதைக் காணவில்லை!

பிஞ்சு இப்போது காயாக உருமாறி இருந்தது. சட்டென அதன் பெயர் அவனுக்கு ஞாபகம் வரவில்லை. ஆனால், அது சாப்பிடக்கூடிய ரகம்தான் என்பதை அவன் எப்போதோ படம் பார்த்துப் படித்திருந்தது நன்றாக நினைவில் இருந்தது.

பறித்தே ஆகவேண்டும் என்ற முடிவுடன் அதை நெருங்கினான். ‘‘நிறுத்து.. இங்கே வா’’ என்று குரல் கொடுத்தார், அதைக் கவனித்துவிட்ட குருநாதர். தப்பித்தது காயும்!

குருநாதர் அவனிடமிருந்து அந்தக் காயைக் காப்பாற்றத்தான் திட்டமிட்டே அழைக்கிறார் என்ற உண்மை அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. ஆனால், அதற்கான காரணம் புரியவில்லை.

வெகு தொலைவில் இருக்கும் வேறொரு கோவிலுக்குச் சென்றுவரும்படி அவனைப் பணித்தார் குரு. சென்று வர எப்படியும் நான்கைந்து நாட்களாவது ஆகிவிடும்.

ஏன் இவர் நம்மை இப்படி அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறார் எனத் தெரியாமல், விடைபெற்றுக் கிளம்பினான் சிஷ்யன்.

***

திரும்ப வந்தபோது, வாசலில் வண்ண முகத்துடன் கனிந்திருந்தது அவன் பறிக்காமல் விட்டுச் சென்ற காய்.

அதைப் பறிக்கலாமா வேண்டாமா என முடிவெடுக்க முடியவில்லை அவனால். ஒரு கணம் யோசித்தான். ஒருவேளை குரு அவனைக் கவனித்துவிட்டால், மறுபடியும் ஏதாவது பணி கொடுத்து வெளியே அனுப்பிவிடுவாரோ என துணுக்குற்றான்.

ஆசிரமத்துச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த குரு, அவனைக் கவனித்துவிட்டார். அவன், அந்தக் கனியைப் பறிக்கலாமா வேண்டாமா என முடிவெடுக்க முடியாமல் தவிப்பதையும் குறிப்பறிந்துகொண்டார்.

ஆனால், இம்முறை அவனைத் தடுக்க முயற்சிக்கவில்லை அவர். மாறாக, சைகை மூலம் அந்தக் கனியைப் பறித்துக்கொள்ளச் சொன்னார்.

அவர் காட்டிய பச்சை விளக்கைப் புரிந்துகொண்டான் சிஷ்யன். ஆசை ஆசையாக அந்தப் பழத்தைப் பறித்தான். கைகளில் ஒட்டிக்கொண்ட அதன் மணமே அதன் சுவைக்கு கட்டியம் கூறியது.

கனி, அவன் கைகளில் முழுதாக தஞ்சம் அடையும் வரை காத்திருந்தார் குரு. அதன் பின்னர் அவனை அருகே அழைத்தார். பேசினார்..

‘‘அது உனக்கானது. அது, உனக்காகவே காத்திருந்தது. நீயும் அதற்காக காத்திருக்க நேர்ந்ததால்தான் இப்போது அது உனக்குக் கனியாகக் கிடைத்திருக்கிறது!’’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com