48. நெய் மூலம்!

நம் உடலும், உயிரும், குணங்களும், திறமைகளும், இன்ன பிற நல்லது கெட்டதுகளும் நம் முன்னோர்களால் நமக்குக் கொடுக்கப்பட்டவையே.
48. நெய் மூலம்!

‘‘எந்த ஜோதிடரைப் பார்த்தாலும், எனக்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்றுதான் கூறுகிறார்கள். நானும் உற்சாகத்துடன்தான் என் பணிகளைச் செய்கிறேன். ஆனாலும், வாழ்க்கையில் கொஞ்சம்கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. பிரச்னைக்கு மேல் பிரச்னையாக சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். ஒரே மனக்கவலையாக இருக்கிறது குருவே..’’

கைகளைக் கட்டிக்கொண்டு குருவின் முன்னர் உட்கார்ந்திருந்த மனிதர், சோகத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார். அக்கறையுடன் கேட்டுக்கொண்டிருந்தார் குருநாதர். சிஷ்யனும் அருகே அமர்ந்திருந்தான்.

கண்களை மூடி நிதானமாக யோசித்தா குரு.

ஓரிரு நிமிடங்களில், ‘‘கடைசியாக எப்போது உன் முன்னோர்களுக்கான பித்ரு பூஜைகள் செய்தாய்?’’ என்று கேட்டார்.

‘‘சில வருடங்களாகிவிட்டன..’’ என்று பதில் சொன்னார் வந்திருந்தவர்.

‘‘உடனே ஒரு பித்ரு பூஜை நடத்து.. எல்லாம் நல்லபடியாக அமையும்’’ என்றார் குரு. வந்திருந்த மனிதரும் மிகவும் மகிழ்ச்சியோடு கிளம்பிப்போனார்.

மெதுவாக தன் சந்தேகத்தை எடுத்துவைத்தான் சிஷ்யன்.

‘‘குருவே.. எனக்கொரு சந்தேகம்..?’’

‘‘ம்.. கேள்..’’

‘‘இவரது பிரச்னைகளுக்கும் இவர் செய்ய வேண்டிய பித்ரு பூஜைகளுக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்?’’

தன் மனதில் தோன்றியதைக் கேட்டுவிட்டான் சிஷ்யன். சீடனுக்கு தெளிவு கொடுக்க வேண்டியது குருவின் கடமைதானே!

‘‘பூஜைக்காக நாம் வழக்கமாக பொருட்கள் வாங்கும் கடையில் இன்று நீ நெய் வாங்கவில்லை அல்லவா! அதற்கான காரணமாக என்ன கூறினாய்?’’ என்று சிஷ்யனைக் கேட்டார் குரு.

‘‘அந்தக் கடையில் விற்கும் நெய் இன்று வழக்கமான நறுமணத்தில் இல்லை. கையில் வாங்கியதுமே கண்டுபிடித்துவிட்டேன். ஏதோ குறையிருப்பதாக உணர்ந்தேன். அதனால்தான் வேறு கடையில் வாங்கினேன். அதைத்தான் உங்களிடம் காலையில் கூறினேன்..’’ என்றான் சிஷ்யன். குரு எதற்காக காலையில் நடந்த சம்பவத்தை மறுபடியும் நினைவில் வைத்துக்கொண்டு கேட்கிறார் என அவனுக்குப் புரியவில்லை.

‘‘நெய்யில் ஏதோ ஒரு குறை இருப்பதாக நீ கண்டறிந்தது உன் அனுபவ அறிவு..’’ என்றார் குரு.

குருவின் வார்த்தைகளால் மகிழ்ந்தான் சிஷ்யன்.

குரு தொடர்ந்து பேசினார். ‘‘அதனையும் தாண்டிய மெய்யறிவினால் இன்னும் ஆழமாகப் பார்க்க முடியும்..’’ என்றார்.

சிஷ்யன் காதுகளைத் தீட்டிக்கொண்டான்.

‘‘நெய் உருவாகக் காரணமான வெண்ணெய்யில் குறை இருக்கலாம். அல்லது வெண்ணெய்க்கு முந்தைய தயிரில் குறை இருக்கலாம். அல்லது அதற்கு முந்தைய பாலில் குறை இருக்கலாம். அல்லது அந்த பாலைக் கொடுத்த பசுவின் காம்பில் குறை இருக்கலாம். அல்லது அந்தப் பசுவின் காம்புகளைச் சுமந்திருக்கும் மடியில் குறை இருக்கலாம். அல்லது அந்தப் பசுவுக்கு சரியான ஆகாரம் கொடுக்காத மாட்டுக்காரனே அந்த பிரச்னைக்கு மூலகாரணமாக இருக்கலாம்.. சரிதானே நான் சொல்வது?’’

தலையாட்டி, ‘‘ஆமாம் குருவே.. அப்படி நான் யோசிக்கவில்லை..’’ என்றான்.

‘‘நம் உடலும், உயிரும், குணங்களும், திறமைகளும், இன்ன பிற நல்லது கெட்டதுகளும் நம் முன்னோர்களால் நமக்குக் கொடுக்கப்பட்டவையே. தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவதே இவையெல்லாம் என நம் பாரம்பரிய நூல்கள் நமக்கு உரைக்கின்றன. நவீன விஞ்ஞானமும் இதைத்தான் உறுதி செய்கிறது..’’

குரு பேசிக்கொண்டிருக்கும்போதே, தனது தந்தை, பாட்டனார், அவரது தந்தை.. என ஒவ்வொருவரையும் மனதில் நினைத்துக்கொண்டான் சிஷ்யன்.

‘‘மரத்தின் உச்சியில் இருக்கும் கனியில் பிரச்னை என்றால்.. அதற்கு மட்டும் மருந்து தெளிப்பதால் சரியாகிவிடாது. அந்தக் கனி இருக்கும் கிளை, கிளையைச் சுமந்துகொண்டிருக்கும் தண்டு, அதனைக் கொண்டிருக்கும் அடிமரம், அதற்கு அடியில் இருக்கும் வேர்கள், எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் ஆணி வேர்.. அனைத்தையும் கவனித்தாக வேண்டும் அல்லவா!’’ என்றபடியே சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார் குரு.

‘‘ஆம் குருவே. பித்ருக்களை நினைத்து, வருடா வருடம் அவர்கள் பிறந்த திதியில் பூஜை செய்வது எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு இப்போது நன்றாகப் புரிந்துவிட்டது..’’ என்று கூறி வணங்கினான் சிஷ்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com